புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அக்காவின் பிள்ளை புத்தாடை பூட்டி வந்தாள் | நதுநசி

அக்காவின் பிள்ளை புத்தாடை பூட்டி வந்தாள் | நதுநசி

1 minutes read

வானம் இன்றும்
நேற்றுப் போல்.
கறுத்து முகில் மூடி
வளி கசிய குளிர்ந்தது.

என் மனதில்
இனம் புரியாத
நிலை தோன்றி
மௌனம் ஆனது.

அன்றும் இப்படி
ஒரு பொழுதில் தான்
சித்திரை வந்து
எங்களை வதைத்தது.

நித்தம் வந்துதான்
போகிறது புதுவருடம்.
ஒவ்வொரு ஆண்டும்
மலர்ந்து விடுகிறது.

இந்த வருடம்
மீண்டு வருகிறது
முள்ளி வாய்க்கால்
துயரம் மனதில்.

வைகாசியில் அது
நீறாகிய போது
சித்திரையில் அது
கொழுந்து விட்டெரிந்தது.

எங்களில் பலரை
அன்று அது நீறாக்கி
வெய்யிலில் வெந்து
மண்ணோடு கலந்தது.

மப்பும் மந்தாரமும்
அப்படி இருந்ததா அன்று.
விமானம் வீசிய குண்டு
வானில் முட்டிய கந்தக புகை.

முகில் தெரிய அன்று
வாய்பு இல்லைத்தான்.
இடையிடையே வானில்
ஆதவன் கதிர் கண்டதுண்டு.

சித்திரை வெய்யில்
உடல் வியர்த்து
ஆடை நனைத்து விடும்.
எனக்கு நினைவில்லை.

2009 இல் ஒரு சித்திரை
சித்திரவதையாக தான்
நினைவிருக்கிறது எனக்கு.
வதைபட்ட உணர்விது.

துப்பாக்கி குண்டும்
விமானக் குண்டும்
கூரையில்லாத குடிசையும்
விடத்தல் அழித்தன.

கூடவே நம்மில் பலரை
நம்மிடம் இருந்த
நம்பிக்கையை அழித்தது.
ஈற்றில் நினைவுகள் மட்டும்.

தப்பிப் பிழைத்தவர்
பலரிங்கே நடைப் பிணமாக
ஆண்டுகள் பதினைந்து
ஆனபோதும் நிலையதுவாக.

2024 இல் ஒரு சித்திரை
இன்றும் வந்து விட்டது.
புத்தாண்டாக கொண்டாடி
மக்கள் மகிழ்ந்திட.

எப்படி வரும் எனக்கு
எந்தன் மனதில் மகிழ்வு.
அன்றும் சரி நான் இன்றும் சரி
நிற்பதென்னவோ ஒரே இடம்.

பிணங்களிடையே அன்று
மணங்கள் கூட உணராத
கல்லாய்ப் போன உடலில்
தங்கிய உயிராக என்னுயிர்.

நடைப் பிணங்களாக
பலரின்று வாழும்
ஈழத்து மண்ணில் தான்
இன்றும் வாழ்கிறேன்.

வாழ்வை வெறுத்து
படைத்தவன் பறிக்கும் வரை
பேயறைந்த மனிதருள்
நானும் ஒருவராக.

கதை பேசி ஆறிட
கதைத்து ஆற்றிட
உணர்வை மதித்து
உரமூட்டும் உறவில்லாது.

ஆமாம் – இன்று
சித்திரை வந்து
நித்திரை கலைத்தது.
நினைவை தட்டி விட்டபடி.

அன்று இறந்த என்
அக்காவின் பிள்ளை
தட்டி எழுப்பி விட்டதால்.
புத்தாடை பூட்டியபடி வந்து

நதுநசி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More