மேனியெங்கும் தேயிலைச் செடியால்
பச்சை குத்திய மலைகள்..
வானைப் போர்க்கும்
பனிப்போர்வையை இழுத்து விலக்கும் காற்று…
ஒற்றையடிப் பாதையில்
மனம் நிறைக்கும் பேரமைதி..
இன்னும் இன்னுமென
அழகின் ஆணி வேர்களைக் காண
அலைபாயும் கண்களில் மின்னலாய் …
கருக்காய் வெடித்து
ரத்தம் காய்ந்திருந்த விரல்களால்
கொழுந்துப்பைகளை இழுத்துக்கொண்டு
நத்தையாய் ஊர்ந்தனர்
மலைப்பெண்கள்..
அவலத்தின் சுவர்களாய் சூழ்ந்து
எழும் மலைகளின் கதறல்கள்
இப்போது என் காதுகளில் எதிரொலிக்கின்றன.
உடல் வலிகளை முக்காடிடும் இவ்
மலைப்பெண்களின் ஒற்றைப் புன்னகைக்குள் தான்
இந்த உலகத்தின் சுவை நரம்புகள் இயங்குகின்றன
தேநீர் எனும் புகழ்மொழியேற்று…
எஸ். சுடர் நிலா