வழமை போல இரத்தப் பரிசோதனைக்காக பரிசோதனை நிலையத்திற்கு மனைவியுடன் சென்றேன். அங்கே தான் செழியனை முதல் முதல் கண்டேன். நாங்கள் வாடகை ஓட்டோவில் செல்ல அவர் மனைவியுடனும் பன்னிரண்டு வயதுடைய மகளுடனும் தனது சொந்த ஓட்டோவில் மனைவியின் இரத்தத்தைச் சோதனை செய்ய வந்திருந்தார். அவரது இடக்கை நாட்டின் பிரச்சினையின் போது ஷெல் பட்டு மணிக்கட்டுடன் நீக்கப்பட்டிருந்தது.
பரிசோதனை “றிசல்ட்டை” அறியப் போன போது செழியன் தனியே வந்திருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து “றிசல்ட்” வரத் தாமதமாகியதால் இருவரும் அருகருகே காத்திருந்தோம். முதலே அறிமுகமாகியிருந்ததால் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டாம். அறிமுகங்கள் முடிந்ததும் செழியன் மனம் திறந்து தன் கதையைச் சொன்னார்.
“அது ஒரு மிகப் பயங்கரமான நாள். இராணுவத்தின் ஷெல்கள் கூவிக் கொண்டு வந்து விழுந்தன. ஐயா அம்மாவுடன் முள்ளி வாய்க்கால் நோக்கி ஓடிக் கொண்டிருந்த போது ஒரு ஷெல் வந்து எமதருகே விழுந்தது. ஐயாவும் அம்மாவும் இறந்து விட நான் கையை மணிக்கட்டுடன் இழந்து மயங்கித் துடித்துக் கொண்டிருந்தேன். அதே ஷெல் அடியில் தன் குடும்பத்தை முழுமையாக இழந்த மலர்விழி, இழந்த குடும்பத்தவரை அடக்கம் செய்வதா, இரத்தத்தை இழந்து உயிருக்குப் போராடிய என்னைக் காப்பாற்றுவதா என்று மனப்போராட்டத்தில் தவித்தவள் என்னை அங்கிருந்த இளைஞர்களின் உதவியுடன் தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கே முதலிடம் கொடுத்தாள்.
ஆஸ்பத்திரியில் டொக்டர்களும் தாதியரும் ஏனைய ஊழியர்களும் இருபத்தினாலு மணி நேரமும் சேவை மனப்பான்மையுடன் உழைத்த கதையை மலர்விழி நான் மயக்கம் தெளிந்த அந்த நாலாம் நாள் சொல்லத்தான் நான் அறிந்து கோண்டேன். எங்கள் இருவரது குடும்பத்தவர்களையும் ஏனையவர்களையும் இளைஞர்கள் ஒரு பெரிய குழியை வெட்டி ஒன்றாகப் புதைத்ததாக மலர்விழி சொல்ல நான் அறிந்து வருந்தினேன். இந்தப் பெண் எனக்கு முன்னர் அறிமுகமில்லாதவள். அனாதைக்கு அனாதை உதவி என்ற எண்ணத்தில் என்னைப் பராமரித்தாள்.
ஓரளவு சுகம் வர வந்து வந்து மருந்து கட்டும் படி கூறி ஆஸ்பத்திரியால் அனுப்பி விட்டனர். ஆஸ்பத்திரியில் என்னை விடக் கடுமையாக காயப்பட்டவர்கள் ஏராளம் பேர் இருந்ததால் ஒரே நெருக்கடி. ஆஸ்பத்திரி ஊழியர்கள் சலிக்காது சேவை செய்வதைப் பார்த்துக் கொண்டே மலர்விழி ஏற்கனவே பார்த்து வைத்திருந்த ஒரு வீட்டின் பத்தியின் அரைவாசி பகுதிக்கு சென்றோம். போகும் போது தான் மலர்விழி அந்த அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னாள்.
ஆஸ்பத்திரியிலும் வெளியிலும் என்னை யாரென்று கேட்ட போது அவள் “அவர் என்ரை புரிசன்” என்று கூறியிருந்தாளாம். எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஆபத்திற்குப் பாவமில்லை என்று விட்டு விட்டேன்.
எங்கெல்லாமோ போய் கஞ்சியோ பாணோ வாங்கி வந்து என்னைப் பசியிலிருந்து காப்பாற்றினாள். நாளடைவில் எனக்கு என்னை அறியாமலே அவள் மீது விருப்பம் உண்டானது.
ஒரு நாள் நான் அவளிடம் “நாங்கள் கலியாணம் கட்டினால் என்ன?” என்று கேட்டேன். அவள் “எனக்கும் சம்மதம் தான். ஆனால் நான் என்ன சாதி எண்டு நீங்கள் கேட்கவில்லையே?” என்றாள்.
நான் “நாங்கள் இரண்டு பேரும் மனித சாதி என்பது போதாதா?” என்றேன். ஒரு நாள் எங்கிருந்தோ ஒரு மஞ்சல் கயிற்றை வாங்கி வந்து தனது கழுத்தில் கட்டுமாறு கேட்டாள். கரும்பு தின்னக் கூலியும் வேண்டுமோ? அவளது அழகான சங்கு நிறக் கழுத்தில் மஞ்சல் கயிற்றை இறைவனை வேண்டியபடி கட்டினேன்.
அந்த இடப்பெயர்வில் ஒட்டு மொத்த தமிழ்ச் சனமும் பயத்திலும் பட்டினியிலும் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு வாழ்ந்த காலம். இராணுவம் அழைத்த போது வேறு வழியின்றி நாங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றோம்.
அடுத்து எங்களுக்கு அகதி முகாம் வாழ்க்கை தொடங்கியது . அங்கும் உணவு தேடி என்னைப் பசி பட்டினியிலில் இருந்து மலர்விழி தான் பாதுகாத்தாள். இத்தனை துன்பத்திலும் கடவுள் எனக்குத் தந்த அதிஸ்டம் என் மனைவி மலர்விழி தான். அகதி முகாமில் மலர்விழி கர்ப்பமானாள். அந்த நாட்களில் நான் அவளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டேன்.
மீளக் குடியேறிய போது நாங்கள் எனது தாய் தந்தை வாழ்ந்த காணிக்குச் சென்றோம். எல்லோரையும் போல பூச்சியத்திலிருந்து வாழ்க்கை ஆரம்பமாகியது. இனிப் பிரச்சினை இல்லை என்று ஓரளவு ஆறுதலடைந்த போது மீண்டும் ஒரு துன்பம். ஒரு பாழடைந்த கிணற்றைக் கவனிக்காது நடந்த போது தடக்கி விழுந்து விட்டேன். அழுது குளறி ஊரைக் கூட்டி என்னை ஒருவாறு காப்பாற்றி விட்டாள். ஆனால் எனது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது.
ஆஸ்பத்திரியில் ஒரு கிழமை இருந்த எனக்கு வலது கையில் விஓபி போட்டு மூன்று மாதங்களின் பின்னர் தான் கழற்ற வேண்டும் என்று வீட்டுக்கு அனுப்பினார்கள். அந்த மூன்று மாதங்களும் நரக வேதனை. காலைக்கடன் செய்த பின் எனக்கு குழந்தைக்குக் கழுவுவது போல மலர்விழியே கழுவிக் குளிப்பாட்டி விடுவாள். இன்று எல்லாம் கனவு போல இருக்கிறது . மலர்வழி மட்டும் என்னுடன் இல்லாமலிருந்தால் என்ரை நிலமை என்ன?
கையும் சுகமாகி இன்று மகளும் வளர்ந்து விட்டாள். நானும் ஒரு ஓட்டோவை லீசிக்கு எடுத்து ஓடுகிறேன். மலர்வழி மட்டுமல்ல எனது மகளும் என்னைக் கவனமாகப் பார்க்கிறாள். மலர்விழி எனக்குத் தாரமல்ல தாய்” என்று கண்கலங்கக் கூறினார்.
அப்போது எங்கள் பரிசோதனை முடிவைக் கொண்டு வருபவர் வந்தார். பரிசோதனை முடிவைப் பார்த்த செழியன் அதில் பயப்படும்படி ஒன்றுமில்லை என்பதைக் கண்டதும் “நல்ல காலம் என்ரை அம்மாக்கு ஒரு பிரச்சினையும் இல்லை” என்றவர் என் கையைப் பிடித்து குலுக்கி விட்டுச் சென்றார்.
எனது பரிசோதனை முடிவைப் பெற்றுக் கொண்ட நான் எனது மனைவிக்குச் சொல்ல ஒரு அருமையான கதை கிடைத்தது என்று எண்ணிக் கொண்டு வீட்டுக்குப் போக ஓட்டோவில் ஏறினேன்.
நிறைவு…
பத்மநாபன் மகாலிங்கம்