காலம் கனியுமென்று நம்பி
காத்துக் கிடக்கிறேன்.
உரை சொல்ல நான்
கரை வந்தேன் அன்று.
பிழை என்று என்னை
வாழை பிணைத்தார்.
புரியாத சொல்லில்
புரிய வைத்திட
புண்ணியம் என்று
புழுதி பிரண்டேன்.
முள்ளி வாய்க்கால்
மண்ணில் தோய்ந்த
குருதி ஈரமதை எண்ணி.
கசிந்தது என் கண்கள்.
எத்தனை முறை
கடந்த போதும்
கழிவிரக்கம் இல்லை
காடையர் அவர்கள்.
வாழ்ந்திட தானே
இடம் கேட்டு
போராடி வீழ்ந்தார்.
தம்முயிர் இழந்து.
வீழ்ந்தவர் ஏந்திய
கருவி விழுமுன்
எந்திட நீண்ட என்
கரமும் இழந்தேன்.
வீரம் என்றெண்ணி
மார்தட்டும் கையது.
மார்பிலும் குண்டேந்தி
நானும் வீழ்ந்தேன்.
காலம் விடவில்லை.
கடமை முடியவில்லை.
காத்திருக்கச் சொன்னது
உடலில் என்னுயிரைத் தானும்.
காலங்கள் கரைந்து
கனநொடி மறைந்தும்
மனங்களில் இருந்து
நீங்க மறுக்கிறது நினைவுகள்.
இன்றும் கூட நான்
தூங்க மறந்து விட்டேன்.
இல்லை இல்லை
மறுத்து விட்டேன் போலும்.
தூங்கிடத் தூண்டும் ஓமோன்
சுரந்திட மறந்ததாம்.
வைத்தியர் சொல்லி தந்தார்
வில்லை விழுங்கிட தான்.
இருந்தும் இல்லை மாற்றம்
விழுங்கிய வில்லை வீணாக
வீணர் செயல்கள் மீண்டன.
முள்ளிவாய்க்கால் வலிக்க.
இரத்தத்தில் நனைந்து
காய்ந்த பின்னும் – வாடை
காற்றில் கலந்து வந்தது.
உதிரம் சீறிப் பாய்ந்ததால்.
சிறுத்தை என்று போராட
சிறுநரிக் கூட்டம் வந்து
ஊளையிட்டு ஊரை கூட்டி
சிற்றெறும்பு என்று விட்டது.
ஊட்டி வளர்த்த உள்ளங்கள்
உண்மை என்றெண்ணி
தனித்தன்று தவிக்க விட்டு
கரையேறிப் போய்விட்டது.
நினைத்திட வலிக்கிறது. – அதை
மறந்திட துடித்த போதும்
மீண்டு வந்து தைக்கிறது.
வில்லிருந்து பாய்ந்த அம்பாக.
தமிழுக்காக தானன்றி
ஈழத் தமிழருக்காகவும்
தாயக தாகத்தோடு வீழ்ந்த
தோழரை எண்ணி இன்றும்.
கண்ணீர் சொட்ட விட்டு
புல்லும் செழிக்கும் என்று
பூரிப்போடு கிடக்கிறேன்.
காலம் கனியுமென்று நம்பி.
நதுநசி