இனிய கௌதம…!
துறவு காலியாகிய
உமது பிள்ளைகளைக் கொண்டே
முன்பு போலவே
ஒரு குண்டு மழையால்
இப்போதும் பொழிந்து எரித்துவிடுக…!
எமது
எல்லா நூலகத்தையும்…
புத்தகசாலையையும்…
அச்சகத்தையும்…
எமது அறிவு
உமது பிள்ளைகளில்
அச்சமாய் மலர்கையிலும்…
கரியாக்கிய நூலோ
அவர்க்கோர்
மரணப் பாயாய் விரிகையிலும்…
அதன் ஒவ்வோர் பக்கமும்
கூரிய வாளாய் மின்னுகையிலும்…
மேலும்;
அதன் நேர்த்தியான எழுத்தோ
பாசக் கயிறாய் இறுகுகையிலும்…
போதிமரத்தின் கீழ்
அமர்ந்தவாறு
‘எல்லாவற்றையும் எரிக்குக’
எனும் ஆசியைத் தவிர
உம் பிள்ளைகளுக்கு
நீர் ஒரு புத்தன் என
ஆயிரம் ஆயிரம்
நூல்களின் பிணத்தைத் தவிர
இப்போதும்….
எதனைத்தான் வழங்க இயலும்!?
யானை ஒன்றின்
முன்னைய ஆட்சி…
மகர யாழின்
ஞான ஒலி கேட்காது
நரம்புகளை அறுத்தது…
நீரோ..
அறுத்தவரின்
நாடி நரம்புகளில்
பௌத்தமாய் ஓடுகின்றீர்…!?
கௌதமரே…
இப்போது நீர் ஓர் இரத்தம்..!
போர்களை வென்றவர்
போர்களை வெறுத்தவர்
போர்வையைத் துறந்தவர் – என
எல்லாம் துறந்த நீரோ
இப்போது இரத்தமாய் உள்ளீர்…!
உமது துறவோ இரத்தத்தால் ஆனது!
இரத்தமோ வெறுப்பால் ஆனது!
வெறுப்போ இருளால் ஆனது!
இருளோ கரியால் ஆனது!
கரியோ சுடரால் ஆனது!
சுடரோ அறிவால் ஆனது!
அறிவோ எம்மவர் நூல்களால் ஆனது!
ஆகையால்தான்
நீர் சுடர் வீசுகின்றீர்…
நிர்வாணத்தால் அல்ல!
ஆகையால்…
இன்னும் எரிக்குக!
‘புத்தம் சரணம்’
செ. சுதர்சன்
01/06/2024
யாழ் பொது நூலக எரிப்பு நினைவாக