(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முத்தமிழ் மன்ற ஆண்டு விழா நடந்து கொண்டிருந்தது.தமிழ்ச் சங்கத்தின் மேடையில் “காதலை அவமதிப்பது பெற்றோர்களா? காதலர்களா?’ என்னும் தலைப்பில் பட்டிமன்றம், வெகு சுவாராஸ்யமாக நகைச்சுவையும், வேகமும் கலந்து ‘களை’ கட்டிக் கொண்டிருந்தது.
அடுத்து பேச வந்த பெண் பேச்சாளர் உமா மகேந்திரன் ‘காதலை அவமதிப்பது காதலர்களே!’ என்ற தலைப்பில் அழகாகப் பேசினார். இறுதியாக, “காதலை என்றுமே பெற்றோர்கள் அவமதித்ததில்லை. தங்கள் மகளோ… மகனோ… | வருங்கால துணையை தவறுதலாக தேர்ந்தெடுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடுவர்களோ? என்ற பயத்தில்தான், தங்கள் பிள்ளைகளின் காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.
அதே வாரிசு, தன் காதலில் ஸ்திரமாக நின்றால் காதலுக்குப் பச்சைக் கொடி காட்ட ஒரு நாளும் பெற்றோர்கள் தயங்கியதில்லை. இந்தக் காதலுக்கு நமது மறைந்த இந்திரா காந்தி அம்மையாரின் காதலைக்கூட ஒரு நல்ல உதாரணமாகச் சொல்ல முடியும்.
எனவே, பெற்றோர்கள் ஒரு போதும், எந்த வழியிலும் காதலை அவமதிப்பதில்லை. ஆனால், காதலர்கள் தான் ‘ஈகோ’ பிரச்சனைகள், யார் பெரியவர் என்ற பிரச்சனைகள் இவற்றில் காதலைக் கூட கிள்ளுக்கீரையாக நினைத்து, அதை அவமதித்துப் பிரிந்து செல்கிறார்கள்” என்று பேசி முடித்தபோது, அருண் எழுந்து எதிரணியில் பேச ஆரம்பித்தான்.
“பேசுவது எளிது! நடைமுறையில் செயல் படுத்துவது கடினம்! பல முறையில் புனிதமான காதலர்களாக வாழ்பவர்களைப் பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பவர்களே பெற்றோர்கள் தான்.
காதல் என்பது இவர்களுக்கு கடைத்தெரு கத்தரிக்காய்க்குச் சமம். இவர்கள் அதை எளிதில் அவமதித்து விட்டு, காதலர்கள் அதை அவமதிக்கிறார்கள் என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்” என சுவராஸ்யாமாகப் பேசி முடித்தான்.
பட்டி மன்றம் மிகவும் இனிமையாக முடிந்தபோது, உமா மகேந்திரனிடம் வந்த அருண், “என்ன அத்தை? இவ்வளவு வாய் கிழிய பேசினீர்கள்! நான் உங்கள மகள் தேவியை காதல் மணம் கொள்வதை ஏன் மறுத்தீர்கள்?” என்றான்.
“அருண் நான் உங்கள் காதலுக்கு என்றுமே எதிரியாக இருந்ததில்லை. நாளைக்கே நான் உனக்கு தேவியை திருமணம் செய்து வைத்தேன் என்று வைத்துக் கொள்வோம். உன்னிடம் என்ன இருக்கிறது? என் மகளுக்கு ஒழுங்காக மூன்று வேளை சாப்பாடு போட உனக்கு ஒரு ஒழுங்கான வருமானம இருக்கிறதா?
திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் குழந்தை வேறு வந்து விடும். அதற்கு பால் பவுடர், மருந்து, மாத்திரைகள் என்று எத்தனை செலவுகள் வரும்? இதையெல்லாம் நீ எப்படி எதிர்கொள்வாய்? திருமணம் செய்த அடுத்த நாளே, என் மகள் என வீட்டிற்கு வந்து ‘ஐந்து கொடு! பத்து கொடு!’ எனப்பிச்சை எடுக்க வைக்கப் போகிறாயா?
பணம் சம்பாதிக்கப் பார்! அப்புறம் உன் காதல் ஈடேறட்டும்”என்று சூடாகக் கத்தினாள்.
“அதற்குள்ளாக, நீங்கள் தேவி வேறு திருமணம் செய்து வைத்து விட்டால்?”
“உங்கள் காதல் உண்மையாக இருந்தால் தேவி உனக்காகக் காத்திருப்பாள், போய் வருங்காலத்திற்கு வேண்டிய பணத்தை சம்பாதிக்கும் வழியைப் பார்” என்று முகம் சுழித்து விட்டுக் கிளம்பினாள் அருணின் அத்தை உமா மகேந்திரன்.
– தினபூமி – ஞாயிறுபூமி
நன்றி : சிறுகதைகள்.காம்