செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் வாழ்க்கைத்தேவைகள் | ஒரு பக்கக் கதை | அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

வாழ்க்கைத்தேவைகள் | ஒரு பக்கக் கதை | அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

2 minutes read

ஒரே மகள். நன்றாக படிக்க வைத்தாகிவிட்டது. கை நிறைய சம்பளம் வாங்குகிறாள். சொந்த வீட்டில் குறை ஒன்றுமில்லை. திருமணம் செய்து வைத்து விட தீவிரமாக வரன் தேடிக்கொண்டிருந்தார்கள் வசந்தியும் அவள் கணவன் மாலனும்.

மாலனைத்திருமணம் செய்து இருபத்தைந்தாண்டுகள் ஓடி விட்டன. இது வரை அது வேண்டும், இது வேண்டும் என்றோ, அது வேண்டாம், இது வேண்டாம் என்றோ வசந்தியிடம் உணவு விசயத்தில் கேட்டதில்லை. மற்ற விசயத்திலும் லேசான தலை வலி என்றாலே பிடிவாதம் பிடிக்காமல் ஒதுங்கிச்சென்று விடுவார்.

‘வரப்போகிற மருமகன் எப்படி இருப்பாரோ…?’ எனும் கவலை சில சமயம் உறக்கத்தைக்கெடுத்தது. மாப்பிள்ளைக்கு விதம் விதமாக சாப்பாடு செய்து போட வேண்டும். அப்போது தான் அவர் மகள் சுமியை நன்றாகப்பார்த்துக்கொள்வார் என பல யூடியூப் சேனல் வீடியோக்களைப்பார்த்து புதிய உணவு வகைகளை செய்யக்கற்றுக்கொண்டாள் வசந்தி.

நூறுக்கும் மேல் ஜாதகம் பார்த்தும் பொருந்தி வரவில்லை. ‘இந்த ஜாதகம் பொருந்த வேண்டும்’ என இஷ்ட தெய்வம் அம்மனை வேண்டிக்கொண்டாள்.

பொருத்தம் பார்த்ததில் பத்துக்கு ஒன்பது பொருத்தம் இருப்பதாகவும், நல்ல குணமுள்ள பையனாக இருப்பார் என்றும் குடும்ப ஜோதிடர் சொன்னதைக்கேட்டு மகிழ்ந்து போனாள்.

ஒரு நல்ல நாளில் கோவிலில் வைத்து மாப்பிள்ளையைப்பார்த்தவுடன் ‘ஆஹா, ஓஹோ’ என மகள் சுமியிடம் புகழ்ந்தாள். ‘ஓகே சொல்லிடு’ என வற்புறுத்தினாள்.

“எதுக்கு அவசரப்படறே….? கொஞ்ச நேரம் மட்டும் போதாது, கொஞ்ச நாள் பேசிப்பார்க்கனம். அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள் னு உடனே ஓகே சொல்ல முடியாது” என மகள் சொன்னதைக்கேட்டு கவலையுடன் முகத்தைத்தொங்கப்போட்டபடி ஓரமாகப்போய் அமர்ந்து கொண்டாள்.

“பையனைப்பிடிச்சிருக்கா? இல்லையா? ன்னு சீக்கிரம் சொல்லிடுங்க. இப்பவே சொல்லிட்டா தேவலை. ஏன்னா நாலு பொண்ணுங்க ஜாதகம் ஒத்துப்போகுது. ஆளு மாத்தி ஆளு பொண்ணு பார்க்க வரச்சொல்லி போன் அடிச்சிட்டே இருக்காங்க” புரோக்கர் அவசரப்படுத்தியது வசந்திக்கு பிடித்த அளவுக்கு சுமிக்கு பிடிக்கவில்லை. அவரது பேச்சில் உண்மைத்தன்மை இல்லையென்பது வெகுளியான அம்மாவிற்கு புரியவில்லை என நினைத்தாள்.

“அந்தக்காலத்துலயே இருக்காதம்மா. அப்பாவைக்கொஞ்சம்பாரு. உன்ன மாதிரி சீரியசா இல்லாம சிரிச்சு பேசிகிட்டிருக்காரு. பையன் கிட்ட போன் நெம்பர் வாங்கிட்டேன். நான் பேசிக்கிறேன். இப்போதைக்கு ஓகே சொல்ல முடியாது” என மகள் கூறியதை அப்படியே சொல்லாமல், ” பையன பொண்ணுக்கு பிடிச்சுப்போனாலும் கொஞ்ச நாள் பேசிப்பார்க்கனம்ங்கிறா” என வசந்தி கூற, அவர்களும் சோர்வான முகத்துடன் திரும்பிச்சென்றனர்.

அதில் ஒருவர்” அப்புறம் என்ன? பொண்ணுக்குத்தான் மாப்பிள்ளையப் புடிச்சுப் போச்சில்ல… அப்படியே பொண்ணு வீட்டுக்குப்போயி கைய நனைச்சிருவோம். அப்புறம் வேணும்னா நெறைய பேசட்டும்” என உறுதிப்படுத்திடும் சூழ்ச்சியோடு பேசினார்.

“என்ற பொண்ணு சொன்னா சொன்னது தான். அவ வாழப்போறவ. பேசிப்பார்க்கட்டும். பிடிச்சா மாப்பிள்ளை பையன் கிட்டவே சொல்லறோம்” என மாலன் சுருக்கமாக பேசி கையெடுத்து கும்பிட்டவுடன் மாப்பிள்ளை வீட்டினர் மறு பேச்சு எதுவும் பேசாமல் சென்றனர்.

மறுநாள் இரவு ஒன்பது மணிக்கு பெண் பார்த்த வரன் குகனிடமிருந்து அலை பேசியில் போன் கால் வந்தது. சுமி எடுத்து “ஹாய்… ஹலோ….” என்றாள்.

மறுமுனையில் “ஹலோ” என்ற குகன் தயங்கியபடி, “என்ன பேசறதுன்னே தெரியலை. கைநெறையா சம்பாதிக்கறேன். என்னோட அப்பாவும், அம்மாவும் சம்பாதிக்கிறதுனால என்னோட சம்பளத்த எதிர் பார்க்க மாட்டாங்க. எனக்கு சமையல்னா  ரொம்ப இஷ்டம். லீவு நாள்ல எங்க வீட்ல என்னோட சமையல் தான்” எனக்கூறிய மறுநொடி பேசிய சுமி “நீங்க மத்தவங்க மாதிரி என்னோட அழகு, நான் போட்டிருந்த டிரஸ், என்னோட பாய் பிரண்ட்ஸ், முதல் காதல், பிரேக்கப் அதப்பத்தி பேசுவீங்கன்னு நெனைச்சேன். ஆனா வாழ்க்கைக்கு எது ரொம்ப முக்கியமோ அதப்பத்தி சிம்பிளா பேசிட்டீங்க. டிரஸ் பிடிச்சமாதிரி எப்ப வேணும்னாலும் மாத்திக்கட்டிக்கலாம், அழகு வயது ஏறினா போயிடும், பணமும், சாப்பாடும் ஆயுசுக்கும் வேணும். அதனால ரியாலிட்டியோட பேசின உங்களை எனக்குப்பிடிச்சிருக்கு…” என பேசிய சுமியின் பேச்சைக்கேட்ட குகனை விட, மகள் பேச்சை அவளுக்குத் தெரியாமல் மனம் படபடக்க ஒட்டுக்கேட்ட வசந்திக்கு மனம் பூரித்துப்போனது.

 

நன்றி : சிறுகதைகள்.காம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More