விதைகுழியில் வீர மரணம்
தூசிக்குள் சுவாசிக்கும் நெஞ்சங்களே
எம் இதயங்கள் உங்களுடன் பேசும்
மொழியின் வடிவம் மௌனம்
பின்னிய இரவினில் தேடும் உங்கள்
முகங்கள் நட்சத்திரங்களாய் மின்னுகின்றன
உறவுகளாய் விளையாடிய வேளைகளை
உணர்வுகளாய் பிதற்றுகிறது எம் இரவுகள்
விழிகளை மூடி தோய்ந்த நடுநிசி நேரம்
பித்துப் பிடித்து மூசிடும் பொழுதுகள்
நினைவலைகள் சிந்திக்க முடியாமல்
திணறும் நெஞ்சங்களை கோடி துகள்களை
கொட்டி புதைத்து விடவும் முடியவில்லை
காலங்கள் மௌனிக்கவில்லை
பொழுதுகளும் மூடவில்லை
வெட்டிய குழியினுள் பதுங்கிய நியாபங்கள்
மீட்டினால் தோய்ந்திடும் தலையணை
கொல்லாமல் தினம் கொல்லும் மேவிய கறைகளை
தட்டிவிடவும் முடியாமல்
துடைத்தெறியவும் முடியாமல்
தற்கால அடிமைகளாய் -விடுதலை
எனும் திசைகளை நோக்கி மௌனமாய்.
கேசுதன்