செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் பளு வீரன் | சிறுகதை | தீபச்செல்வன்

பளு வீரன் | சிறுகதை | தீபச்செல்வன்

11 minutes read

01

கரில் மூண்ட சமர் நின்ற வேளையில் கடிகாரமும் நின்றுபோயிருக்க வேண்டும். அதன் முட்கள் பன்னிரண்டைக் காட்டின. தூரத்தில் நடந்து வரும் சத்தியனை பார்த்தது நேரத்தின் எண்கள் உடைந்த கடிகாரம். காலம் உடைந்து போனதின் சித்திரமாக உருக்குலைந்த அதன் முட்கள் நெளிந்தழைப்பதைப் போலிருந்தன அவனுக்கு. எறிகணைகள் நுழைந்தும் துப்பாக்கிச் சன்னங்கள் காயமிட்டும் இருந்த மணிக்கூண்டுக் கோபுரத்தின் சுவர்களில் யாழ் நகரின் வெளுத்த முகம்  தெரிந்தது.

கோபுரத்திற்கு அண்மையாய் நடந்தவன், நிமிர்ந்து அதன் சுவர்களைப் பார்த்தான். போரின் தழும்புகள் அதன் உடல் முழுதும் சித்திரமாயிருந்தன. விதவிதமான முகங்கள். அத்தனையிலும் காயங்களும் தழும்புகளும். பெயர்ந்தலையும் சனங்களும் பதுங்கியிருக்கும் போராளியின் ஒளிமிகுந்த கண்களும் தெரிந்தன. வெடித்துவிட்ட எறிகணைகளின் வெற்றுக் கோதுகளும் கைவிடப்பட்ட பொதிகளும் அறுந்த செருப்புக்களுமாய் அச் சித்திரம் அவனை அலைக்கழித்தது.

யாழ் மத்திய கல்லூரியின்  முதல் மணி ஒலிக்கவும் கவனம் பள்ளிக்கூட திசை நோக்கிற்று. பள்ளிக்குச் செல்வதற்காக யாழ் நூலக வீதியில் மெல்லக் காலடிகளை வைத்தான். பற்றை மண்டியிருந்தது யாழ் நூலக வளாகம். இன்னும் நெருப்பு யாழ் நூலக சுவர்களில் கனல்வதைப் போலிருந்தது அவனுக்கு. எரிந்த புத்தகங்களின் சாம்பல் நாசியில் மணந்தது. ‘பத்து வருசமும் ஆயிற்றுது… இன்னும் தீயின் வெம்மை குறையேல்லை’ சிவந்து கசியுமவன் கண்களில் இயலாமையின் அனல் வீசிற்று. கரிப்பிடித்த கூரையில் வௌவால்கள் தலை கீழாய் தூங்கின

எறிகணை வீச்சு துளைத்த விழுந்த ஓட்டையில் அமர்ந்திருந்த கருங்குயிலொன்று பெருந்தாகத்துடன் கூவியது. போரின் தழும்புகளால் நூலகத்தின் மேனி துடிதுடிப்பதைப் போலிருந்தது. கோயிலைப் போலிருந்த ஒரு நாளில் தான் புத்தகங்களை எடுக்கப் போயிருந்த வேளையில், வரலாற்றையும் கதைகளையும் தட்டுகள் முழுக்க நிரப்பியிருந்த புத்தகங்களின் பக்கங்கள் ஒவ்வொன்றும் எப்படி நோவுடன் எரிந்து போயிருக்கும் என்பதை நினைக்க இவனுடல் நடுங்கிற்று. மூதாதையர்களின் ஓலைச்சுவடிகளில் இருந்த தொன்மை நெருப்பில் எரிந்து சாம்பலாகும்போது எப்படி வாதையில் துடித்திருக்கும் என்பதை நினைக்க இவன் மனதில் தீக்கொழுந்து பரவியெரிந்தது.

பள்ளிக்கூட வீதியில் நடந்தான். வாசலில் இருந்த வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட்டு வாசல் பணிகளைக் கவனிக்கத் துவங்கினான். பிள்ளைகள் பள்ளியை நோக்கிக் குவியத் தொடங்கினர்.

“மணிமாறன்…. ஏன் இண்டைக்கு சூ போடேல்லை?…”

“…”

“அப்பு… இஞ்ச நில்லு… சேட்டை வடிவாய் உள்ளுக்கை விடு…”

“…”

“மருதன்… உதென்ன தலைவளப்பு?…”

“…”

“நாளைக்கு வரேக்குள்ளை தலைமுடி வெட்டியிருக்க வேணும்… சரியோ!”

மோட்டார் வண்டியை தணித்தபடி அதிபர் வந்திறங்கவும் “வணக்கர் சேர்..” சத்தியன் வரவேற்றான். “உமக்கு வன்னிக்கு ட்ரான்ஸர் வந்திருக்குது… கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம்… கடிதத்தை வந்து எடும்…” அதிபர் தன் பையைத் தூக்கியபடி நடந்தார். பள்ளியின் அடுத்த மணி ஒலித்தது.

“…கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து

கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து

குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்

கோணமா மலையமர்ந் தாரே.”

ஆண் பிள்ளைகளின் குரலில் ஒலித்த தேவாரத்தின் சுரம் சத்தியனின் மனதில் படர்ந்திற்று. மாணவர்கள் வகுப்பறைகளை நோக்கி நகர, பின்னால் நடந்தான் சத்தியன்.

02

நேற்று நிலமையள் எப்பிடி சேர்… எட்டு லட்சம் யாழ்ப்பாண சனங்களும் உயிரை பணயம் வைச்சு கிளாலியாலை போய் வர வேண்டிக் கிடக்குது என்ன?… ஆனையிறவு பாதை திறக்கிற நேரம் தான் கிளாலி படுகொலையளுக்கு முடிவு வரும்… நீங்கள் கையெழுத்தைப் போடுங்கோ சேர்…” பாடசாலை சம்பவத் திரட்டு புத்தகத்தில் சத்தியனின் வருகையை சோதிநாதன் அதிபர் பதிவு செய்தார். சத்தியன் வருகை ஏட்டில் ஒப்பமிட்டான். “நியமனமாகி இரண்டு வருசமாக்கும்… தமிழ் படிப்பிக்கிறதிலை நீங்கள் வலு கெட்டிக்காரனாம்… கேள்விப்பட்டன்… இளம் பெடியன் தானே.. ஓ.எல். பிள்ளையளுக்கு தமிழ் எடுங்கோ… வகுப்பாசிரியரும் நீங்கள்தான்…” கைகளைக் கொடுக்கவும் சத்தியன் வகுப்பறையைத் தேடி நடக்கத் துவங்கினான். நீண்ட இரண்டடுக்கு மாடியால் நிமிர்ந்திருந்த பள்ளியின் பெருமிதத்தைக் கவனித்துக் கொண்டே நடந்தான்.

சத்தியன் வரவும் மாணவர்கள் எழுந்து வணக்கம் செய்தனர். மேசையில் புத்தகங்களை வைத்துவிட்டு மாணவர்களை ஒவ்வொருவராகப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தான் சத்தியன். “அட மருதன்… நீ எப்பயடா இஞ்ச வந்தனீ…” அவன் தலையைக் குனிந்து கொண்டான். நல்லாய் நெடுத்த அவனின் தலை மாணவர்களிடையே உயரத் தெரிந்தது. உயர்ந்த தோள்களும் கருமை படர்ந்த தேகத்தில் வெண்ணுடை மினுங்கியது. சத்தியன் நெருங்கி வந்தான். பிடரி வரை வளர்ந்து போயிருந்தது தலைமுடி. “அங்கையும் சொன்னான்.. இப்ப இஞ்சையும் சொல்லுறன்.. நாளைக்கு பள்ளிக்கூடம் வரேக்கை தலைமுடிய வெட்டியிருக்க வேணும்…” சத்தியன் விரல்களை நீட்டி எச்சரித்தான். மருதன் தலையைக் குனிய, அவன் கைகள் புத்தகமொன்றின் பக்கங்களைப் புரட்டின. நிமிர்ந்து சத்தியனைப் பார்த்து சிரித்தபடி ஆமோதித்தான்.

பிள்யைள்… சீதமதி குடைக்கீழ் செம்மை அறம்கிடப்பத், தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்.. என்ற பாடலிலை நளனின்ரை ஆட்சிச் சிறப்பை புகழேந்திப் புலவர் நல்ல வடிவாய் சொல்லியிருக்கிறார்… விளங்கிச்சோ?…”  குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர் மாணவர்கள். சத்தியன் ஒவ்வொருவராக நெருங்கி வந்து எழுதிக் கொண்டிருப்பதை பார்த்தான். தலையைக் குனிந்திருந்த மருதனின் அருகில் வந்து நின்றான். அவன் குறிப்பேட்டில் கையெழுத்து முத்துமுத்தாய் மினுங்கிற்று. “அச்சடிச்ச மாதிரி எவ்வளவு வடிவாய் இருக்குது உன்ரை கையெழுத்தெடாப்பா…” மருதனின் தலைமுடியைக் காணவும்  சத்தியனின் முகம் மாறியது.

“நானும் இரண்டு மாதமாய் தலை முடி வெட்டச் சொல்லுறன்…”

“…”

“நீ சொல்வழி கேட்கிற மாதிரி தெரியேல்லை..”

“…”

“வெளியிலை போய் நில்லு…”

“…”

“தலைமுடியை வெட்டிப் போட்டு வகுப்புக்குள்ளை வா…”

எழுந்து பதிலற்று நின்றான் மருதன். “கெதியிலை வெளியிலை போ…” சத்தியன் சத்தமிடவும் தன் புத்தகங்களை எடுத்தபடி நடந்தான் மருதன். வெளியில் சென்று நிற்க வகுப்பில் பாடம் தொடர்ந்தது. மருதன் வெளியில் நின்றபடி தன் குறிப்பேட்டைச் சுவரில் வைத்து எழுதத் துவங்கினான்.

குப்புக்கு வந்த சத்தியன் முதல் ஆளாய் மருதனைத் தேடினான். அவன் தலைமுடி இன்னமும் நீண்டு வளர்ந்திருந்தது. சத்தியனுக்குக் கொதி உச்சத்தில் ஏறியது. வெண்கட்டியை தூக்கி எறிந்தான். மருதனுக்கு கிட்டவாக வரவும், அவன் எழுந்து கொண்டான்.

“நாலு மாதமாய் தலைமுடிய வெட்டச் சொல்லி நானும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன்… நீயோ சொல்வழி கேக்கிறேல்லை எண்டு சரியான பிடிவாதமாய் தான் நிக்கிறாய் என…”

“…”

“இவர் என்ன சொல்லுறது… நான் என்ன கேக்கிறது… அப்பிடித்தானே என்ன மருதன்?…”

மருதன் மறுத்துத் தலையசைத்தான். சத்தியன் கோபத்தைத் தணித்தான்.

“அப்ப ஏன் தலைமுடி வெட்டேல்லை…?”

சத்தியன் அமைதியாய் மருதனைப் பார்த்தான். தோலுடைந்து விழும் மாதுளை முத்துக்களாய் மருதனின் உதடுகள் பிரிந்து விழுந்தன சில வார்த்தைகள்.

“காரணம் இருக்குது சேர்…”

பறவையைப் போன்ற அவன் கண்களொரு தாகத்துடன் அசைந்தன. சத்தியன் சுற்றியிருந்த மாணவர்களைப் பார்த்தான். “வெளிக்கிடு… அதிபரிட்டை கொண்டேய் விடுறன்… இண்டைக்கு இதுக்கொரு முடிவு கட்டுறன்… வெளிக்கிடு…” மீள தலையைக் குனிந்து கொண்டான் மருதன். “வா அதிபரின்ரை ஒப்பீசுக்கு…” மருதனை எழுப்பிக் கொண்டு நடந்தான் சத்தியன்.

“சேர் இவன் தலைமுடி வெட்டுற மாதிரி தெரியேல்லை… நானும் நெடுகச் சொல்லிச் சொல்லிக் களைச்சுப் போட்டன்… நாலு மாதம் ஆகிட்டுது… யாழ்ப்பாணத்திலை இருந்து தலைமுடியை வெட்டச் சொல்லி நானும் மண்டாடிக் கொண்டிருக்கிறன்… இவனும் கேக்கிற மாதிரித் தெரியேல்லை… இது பெரிய கரச்சலாய்க் கிடக்குது… இண்டைக்கு என்கொரு முடிவு தெரிய வேணும் சேர்… இல்லாட்டில் உந்த வகுப்புக்குள்ளை நான் போகன்…” சத்தியன் கொந்தளித்தான்.

“முதலிலை… கொஞ்சம் அமைதியாய் இரும் சத்தியன்…”

அதிபர் அமைதியாகச் சொல்லியபடி புன்னகைத்தார். சத்தியனுக்கு இன்னும் சினமேறியது.

“அப்பு மருதன் நீ வெளியிலை அந்தக் கதிரையிலை இரு…”

அலுவலகத்திற்கு வெளியில் அடுக்கியிருந்த கதிரையொன்றில் அமர்ந்து கொண்டான் மருதன்.

“சத்தியன் சில பிள்ளையளின்ரை குடும்ப பின்னணியலை பார்க்க வேணும்… அதைப் போல வேற ஏதாவது காரணங்களும் பின்னணிகளும் அவங்களுக்கு இருக்கும்…. அதையும் நாங்கள் சரியாய் அறிய வேணும்…  அவன் தலைமுடி வளக்கிறான் தான்.. ஆனால் குழப்படியள் ஏதும் செய்யிறவனே.. இல்லைத்தானே… அவன் நல்ல பிள்ளை… நீர் ஒரு கொஞ்சக் காலம் அமைதியாய் இரும்.. பிறகு பாப்பம்… பிறகு தெரியும்… இப்ப வகுப்புக்கு போங்கோ…”

“சேர் நீங்களும் அவனுக்கு நல்லாய் இடம் குடுக்கிறியள்… கடைசியிலை அவனை காவாளி ஆக்கப் போறியள்…” சத்தியன் எழுந்து அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தான்.

“மருதன், இப்ப உனக்கு நல்ல புளுகு தானே? நீ என்னெண்டாலும் செய்.. நல்லது சொன்னால் உங்களுக்கு உபத்திரமாய்த்தான் கிடக்கும்… இனிமேல் நான்  உன்னை தலைமுடி வெட்டச் சொல்லிக் கேக்க மாட்டன்… நீ நல்லா தலைமுடியை வள…” மருதனைப் பார்த்து கையை விரித்தபடி நடந்தான் சத்தியன்.

“சேர்… சேர்…” பின்னால் துரத்திக் கொண்டே  வந்தான் மருதன்.

“சேர்… கோவப்படாதையுங்கோ…”

“…”

“ஒரு இலட்சியத்திற்காகத்தான் வளக்கிறன் சேர்..”

சத்தியனுக்கு சினம் மிகுந்திற்று.

“விசர்க் கதை பறையாதை…”

“…”

“மயிரை வளக்கிறதிலை என்னடா இலட்சியம்…”

கத்தியபடி சத்தியன் அடியதிர நடந்தான். தலையைக் குனிந்தபடி நின்றான் மருதன். பள்ளி மணி ஒலித்தது. மணியின் அதிர்வு ஆலாபனையாய் ஒலித்தடங்கியது.

த்தியன் அங்குமிங்கும் நடந்தான். மருதன் இருந்த இருக்கை வெற்றிடமாய் இருந்தது. வெண்கட்டியை எடுத்து ‘இலங்கை வளம்’ பாடலை கரும்பலகையில் எழுதினான். கைகள் தடுமாறின. வெண்கட்டி உடைந்து விழுந்தது. “பிள்ளையள், பாட்டை எழுதிப்போட்டு எல்லாரும் பாடமாக்குங்கோ… நான் ஒருக்கால் ஒப்பீஸ் போயிற்று வாறன்..” என்றபடி அதிபர் அலுவலகத்தை நோக்கி பதறியபடி நடந்தான் சத்தியன்.

“சேர் இன்றையோடை பத்து நாள் ஆகிற்று.. மருதன் வரேல்லை… நான் பேசினதுதான் அவனுக்கு மனக்கசப்போ தெரியேல்லை… படிக்கக்கூடிய பெடியன் சேர்… நான் ஒருக்கால் அவன்ரை வீட்டை போய் பாத்திட்டு வரவே…” அதிபர் பதற்றமாயிருந்த சத்தியனை வடிவாய் பார்த்தார். ஒரு மெல்லிய புன்னகையுடன் அனுமதிக்கவும், பதிவேட்டில் இருந்த அவன் முகவரியைக் குறித்துப் பொக்கற்றில் சொருகினான்.

சைக்கிளை ஏ-9 தெருவில் விட்டான். முன்பக்கத்தில் ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கும் தலைவர் பிரபாகரன். “தமிழர் பிரச்சினைக்கு பிரேமதாசா அரசின் தீர்வு என்ன?” கேள்வியுடன் புத்தகக் கடையொன்றில் தொங்கின விடுதலைப் புலிகள் ஏடு.  தொங்கும் பத்திரிகையைப் பார்த்தபடி நின்ற மாணவனைப் பார்க்க மருதனைப் போலிருக்கவும், கடையின் முன்னால் சைக்கிளை நிறுத்தினான் சத்தியன். “மருதன்!…” மெல்ல அவன் தோள்களைத் தட்டினான்.

அவன் விழிபிதுங்கியபடி திரும்பினான். “பின்னாலை பாக்க என்ரை மாணவன் மருதன் மாதிரிக் கிடந்தது… அதான் அப்பு..” சத்தியன் மீண்டும் சைக்கிளை எடுத்து மிதித்தான்.

வழிநெடுக அவன் கண்கள் மருதனைத் தேடின.

குன்றும் குழியும் விழுந்த தெருவில் சைக்கிள் விழுந்தெழும்பித் திணறியது. அவனோ பெடல்களை வேகமாக மிதித்தான்.

படலையடியில் நின்று எட்டிப் பார்த்தான் சத்தியன். ஓலையால் தாழ்வாரம் பணிய வேய்ந்த குடிசை. அவன் கண்கள் வீட்டு முற்றத்தை நோக்கிச் சுழன்றன. ‘இது தான் வீடாக இருக்க வேணும்’ சைக்கிளை விட்டிறங்கினான். “அப்பு மருதன்… மருதன்…” குரல்கொடுத்துப் பார்த்தான். ‘சிலமினில்லை.. உள்ளுக்கை போய் பாப்பம்…’ படலையைத் திறந்து நடந்தான். ஒரு பக்கத்தில் பனையோலைப் பாயில் பினாட்டை பிரட்டி காய வைத்துக் கொண்டிருந்தாள் ஒரு ஆச்சி. கிட்டவாகச் சென்ற சத்தியன் ஆச்சியின் அருகில் குந்தினான்.

“ஆச்சி இதே மருதனின்ரை வீடு…”

“…”

“அவர் ஏன் பள்ளிக்கூடம் வரேல்லை…”

“…”

“நான் அவரின்ரை மாஸ்டர்…”

“…”

“அதான் தேடி வந்தனான்…”

அவள் எழுந்தாள். சத்தியனும் எழுந்து கொண்டான். கண்களை கூர்ந்து இடக்கையை நெற்றியில் வைத்து வெயிலை மறைத்தபடி இவனைப் பார்த்தாள்.

“உந்தத் திண்ணையிலை இருங்கோ…”

உள்ளே சென்று பித்தளைச் செம்பொன்றில் தண்ணீர் எடுத்து வந்து வைத்தாள். சத்தியன் குடிசையை எட்டிப் பார்த்தான். ‘மருதனை வீட்டுக்கையும் காணேல்லை..’ சத்தியன் பரபரத்தான். மருதனின் பாடசாலைக் காலணிகள் இரண்டும் ஒருசேர திண்ணையின் சுவர்க்கரையோரமாக முன் பக்கம் உயர்த்திச் சாய்த்து வைக்கப்பட்டிருந்தன. ஆச்சியின் முகத்தை பார்த்து பதிலுக்கு காத்திருந்தான் சத்தியன்.

“தம்பி…”

“…”

“அவன்…”

“…”

“இயக்கத்துக்கு…”

“…”

“போயிற்றான்….”

“…”

“அப்பு…”

சத்தியன் அதிர்ந்தபடி எழுந்தான். முகம் வியர்த்தது. கண்கள் கலங்கிக் காரணத்தை தேடி அதிர்ந்தன.  எழும்பிய அதே வேகத்தில் மீண்டும் அமர்ந்தான் திண்ணையில்.

“நானும் அவனைப் பேசிப்போட்டன்…”

“…”

“அதாலைதான் இயக்கத்துக்குப் போட்டானோ?”

“…”

“பள்ளிக்கூடம் பக்கம் காணேல்லை எண்டு மனம் கேக்காமல்தான் வந்தனான் ஆச்சி…”

சத்தியனின் முகத்தில் பதற்றம் விளைந்தது.

“நீங்கள் அப்பிடி நினைக்காதேங்கோ தம்பி…”

“…”

“அவனுக்கு உங்களிலை நல்ல மரியாதையும் விருப்பமும்..”

“…”

“சேர் நல்லவர்…”

“…”

“நல்லா வழிப்படுத்துறவர் எண்டு தான்  நெடுகப் பறைவான்…”

“…”

“எனக்கவன் பேரன்… தேப்பன் யாழ் நூலகத்திலை வேலை செஞ்வன்… பியோன்தான். யாழ் நூலகம் எரிச்சதோடை அவனுக்கு மனநிலையே ஒரு மாதிரிப் போட்டுது… பிறகு நஞ்சைக் குடிச்சுப் போட்டு செத்துப் போயிற்றான்… பிள்ளைக்கு அதுதான் பெரிய தாக்கம்… அவன் இயக்கத்துக்குப் போறதுக்குத்தான் இஞ்ச வந்தவன்…” அவள் சுருண்ட சேலைத் தலைப்பால் கன்னங்களைத் துடைத்தாள்.

மருதன் இல்லாத வீடு வெளித்திருந்தது. மெல்ல எழும்பி நடந்தாள். கொடியில் உலர்ந்து அசைந்தன அவன் சட்டைகள். போயதை எடுத்து முத்தமிட்டு விசும்பினாள் ஆச்சி. ஒடுங்கிய விரல்களால் கண்களைத் துடைக்குமவளை வணங்கிய சத்தியன் படலையை நோக்கி நடக்கத் துவங்கினான்.

03

சத்தியனின் சைக்கிள் முரசுமோட்டைச் சந்தியால் திரும்பி ஊரியான் வீதியில் மிதந்தது. யாரையோ வரவேற்பதைப் போலிருந்தன நெல்லுப் பூத்த வயல்களின் சிரிப்பு. வேலிக்கரையாய் பூவரசுகளும் பூத்துக் குதுகலித்தன. காற்றில் சடசடவெனப் பறந்தது வயல் காக்கும் வெள்ளைக் கொடி. ஊரியான் சந்தி கடக்கத் துவங்கும் பற்றைக் காடுகளில் படர்ந்து பூத்திருந்தன காந்தள்கள்.

போராளி அணியொன்று உருமறைப்பு செய்தபடி வீதியைக் குறுக்கறுத்து நகர்ந்தது. தேசக்கனவுடன் சீர்மையாக நகரும் போராளிகளின் வரிசை அவன் மனமெங்கும் கனவைப் பூக்கச் செய்திற்று. சத்தியனுக்குக் கைகளைக் காட்டுமொரு போராளியின் முகத்தில் கறுப்புக் கோடுகள். தலையில் துணித் தொப்பி. அதனையும் மூடி இலைகுழைகளால் உருமறுப்பு செய்யப்பட்டிருந்தது. நகர்ந்து கொண்டிருந்தவன், சட்டெனத் தரித்து நின்றான். சத்தியனைப் பார்த்தான். அவனை நெருங்கி வந்தான் அந்தப் போராளி. சத்தியன் சைக்கிளை மெதுவாக நிறுத்தி பிறேக்கை அழுத்திப் பிடித்தான். இவன் சைக்கிள் காண்டிலை பற்றிக் கொண்டான் அந்தப் போராளி.

“சேர்….. எப்பிடி இருக்கிறியள்?…”

அணுக்கமான அந்தக் குரல் அவன் மனதில் ஈரத்தைச் சுரக்கச் செய்திற்று. முகத்தை முடியிருந்த இலைகுலைகளை விலக்கினான்.

“நான் மருதன் சேர்…”

சத்தியன் தடுமாறியபடி சைக்கிளை விட்டிறங்கினான். ஸ்டான்டைப் போட்டு சைக்கிளை நிறுத்தினான்.

அவனேதான். வார்த்தைகள் வர மறுத்தன. பருத்து அகன்ற அவன் தோள்களைத் தொட்டுத் தழுவினான். பரந்து விரிந்த நெஞ்சு நிமிர்ந்திருந்தது. மீசை வளர்ந்து அடந்திருந்தது. அந்த வெண் சிரிப்புடன் சத்தியனை வணங்கினான் மருதன்.

“என்ரை ராசா… எப்பிடியடா இருக்கிறாய்?…”

“…”

“ஒரு வருசத்துக்கும் மேலாய் உன்னைத் தேடாத இடமில்லை…”

“…”

“வகுப்பிலை நீ இல்லாமல் பெரிய கவலையடாப்பா…”

சத்தியனின் முகம் அதைத்து மலர்ந்தது. நெடுத்த அவனின் தலையை விட கூராய் நீண்டிருந்தது எல்எம்ஜி.  குனிந்த அவன் தலையைத் தடவினான் சத்தியன்.

“நான் நல்லா இருக்கிறன் சேர்…”

“…”

“இந்த ரீமுக்கு நான்தான் பொறுப்பு…”

மருதனின் கன்னங்களைத் தொட, பெருமிதத்தில் சத்தியனின் கண்கள் ஒளிர்ந்தன.

“நல்லா பெரிய ஆளாய் வளந்திட்டாய் என்ன?…”

மெல்ல அவன் உருமறைப்பு இலைகுழைகளை அவிழ்த்துத் தொப்பியை கழற்றினான். நீண்ட அவன் தலைமுடி பின்பக்கமாய் சுருண்டிருந்தது.

“அட இஞ்சை பார்… இயக்கத்திலையும் உன்ன தலைமுடி வளர்க்க விட்டவங்களே…” சத்தியன் சிரித்தான்.

“எல்லாம் காரணமாய்தான் சேர்…”

“…”

“இலட்சியத்தோடைதான் வளர்க்கிறன்…”

மருதனின் கண்களின் ஒளி இன்னும் பிரகாசித்தது. அதை ஏற்றாற்போல தலையசைத்த சத்தியன், மளமளவென அருகில் இருந்த கடையை நோக்கி ஓடினான். தின் பண்டங்களை அள்ளி வாங்கினான். பிஸ்கற் பைக்கற்றுக்களை ஒரு பையில் போட்டான். அவற்றை அள்ளி எடுத்துக் கொண்டு ஓடி வந்தான். “தம்பியாக்கள் வடிவா சாப்பிடுங்கோ…”

“…”

“இதுகளைக் கொண்டு போங்கோ…”

போராளிகள் மருதனைச் சூழ்ந்து கொண்டனர். சிறுவர்களைப் போல அவற்றைப் பகிர்ந்துண்டு பகிடி விளையாடும் போராளிகளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் சத்தியன்.

“ஒரு நாளைக்கு பொடியளோடை வீட்ட வா… நல்லாய்ச் சாப்பிட்டுப்போட்டுப் போகலாம்… உனக்கு ஒரு அண்ணாவை மாதிரி இந்த சேர் இருக்கிறன்…”

எதற்கும் பணியாத மருதனின் கண்கள் அப்போதுதான் கலங்கின. நிமிர்ந்து வாஞ்சையுடன் சத்தியனைப் பார்த்தான்.

“சரி சேர்… நான் போயிற்று வாறன்…”

கையைக் காட்டியபடி நகரத் துவங்கினான் மருதன். “அப்பு… ராசா… கவனமடா…” கத்தினான் சத்தியன். போராளி அணி, காட்டுக்குள் நுழைந்து மறைந்துவிட்ட பிறகும் நகராமல் தரித்தே நின்றது சத்தியனின் சைக்கிள். அசையாத காட்டின் மீது சூரியன் கவியத் தொடங்கியது.

04

‘இரவிரவாய் ஆனையிறவுப் பக்கம் ஒரே சத்தம்… ஏதும் சண்டையோ தெரியேல்லை.. மருதன் இப்ப எங்கை நிக்கிறானோ…’ யோசனையுடன் ஈழநாதம் பத்திரிகையைக் கையில் எடுத்து விரித்தான் சத்தியன். ‘டிங்கிரி பண்டா விஜயதுங்கா மீண்டும் சனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை… அதனால் சனாதிபதி வேட்பாளராக காமினி அறிவிப்பு…’ தலைப்புச் செய்தியுடனிருந்த பத்திரிகையின் பக்கங்களை புரட்டினான் சத்தியன்.

“இலங்கைத் தலைநகரில் தமிழரின் சாதனை..” அந்தப் புகைப்படங்களைப் பார்த்த அவன் கண்கள் நம்ப முடியாத திகைப்பில் உறைந்தன. திரும்பத் திரும்பப் பார்த்தான். சத்தியனின் விரல்கள் நடுங்கத் துவங்கின. கண்கள் ஒருமுறை இருண்டு வெளித்தன. அவன் தான். கொழும்பில் தலைமுடியில் பாரவூர்தி ஒன்றைக் கட்டி இழுக்கும் அவன் மருதன்தான். ஒரு பக்கம் முழுவதும் அவன் சாதனை குறித்த படங்களும் செய்தியும்தான். “பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…” ஊடகங்கள் சூழ்ந்திருக்கப் பேசும் அவனுடைய வெண்மையான சிரிப்பு பத்திரிகையின் பக்கங்களில் உதிராதிருந்தன. சத்தியனின் முகத்தில் பெருமிதம் பூத்தது.

“என்னெண்டு கொழும்புக்குப் போனவன்…”

“…”

“இயக்கத்தை விட்டு விலத்திட்டானோ?”

“…”

“இல்லை இயக்கமாய்த்தான் போனவனோ..”

“…”

“அப்ப இதுக்குத்தான் முடி வளர்த்திருக்கிறான்…”

“…”

“பாரத்தை இழுக்கும் என் பயணம் எங்கள் இனத்தின் பாரத்தை இறக்கத்தான்…”

“…”

“அப்பிடி என்றால் இவன் என்னதான் செய்யப் போறான்…”

கேள்விகள் தலையைக் குடையத் துவங்கின. பத்திரிகையின் பக்கங்களை மூடினான் சத்தியன். வகுப்பறையில் தலைகுனிந்திருந்த அவன் முகம் நினைவில் துருத்தியது. அவனின் முத்துமுத்தான கையெழுத்துக்கள் நினைவில் மிதந்தன. சத்தியனின் மனைவி வைத்துச் சென்ற தேநீர் ஆறிப்போயிருந்தது. திரும்பவும் பத்திரிகையைத் திறந்து பார்த்தான். “சேர்…” என்று அவனைப் பார்த்து அழைப்பதைப் போலவே இருந்தது மருதனின் வெண் சிரிப்பு. சத்தியனின் மனம் பெருமலையை சுமந்தாற்போலக் கனத்தது.

05

கொழும்பு நகரின் அந்த வீதி மூடப்பட்டு மாற்றுப் பாதையில் வாகனங்கள் நகர்ந்தன. பவுத்த விகாரையில் பிரித் ஓதல் ஒலித்து மெல்ல அடங்கிக் கொண்டிருந்தது. புத்தரின் முன்பாய் நிரம்பியிருக்கின்றன தாமரைகள். வீதியின் மதில்களெங்கும் கன்னத்தில் கைவைத்தபடி புன்னகைக்கும் காமினியின் படங்கள். பேருந்துகள் சனங்களைக் கொண்டுவந்து இறக்கின. ஒலி பெருக்கிகள் சரி செய்யப்பட்டு அதில் பரீட்சார்த்தக் குரல்கள் இடையிடை ஒலித்தன. சனக்கூட்டம் திரளத் துவங்கியது. தேர்தல் பிரசாரப் பாட்டுக்கு சிலர் ஆடிக் கொண்டிருந்தனர்.

“இதோ இலங்கையின் அடுத்த சனாதிபதி வருகிறார்…”  ஒலிபெருக்கி மகிழ்ந்தறிவிக்கத் துவங்கியது. மகிழுந்தில் வந்திறங்கிய காமினி கைகளை உயர்த்திக் காட்டிக் கொண்டு வெளியில் வந்தார். காமினியைக் கண்டதும் ஆதரவாளர்கள் கூச்சலிட்டுக் கத்தி ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேடையில் ஏறிய காமினியை அரச காவலர்கள் சூழ்ந்து நின்று காவல் செய்தனர். “எங்கள் கட்சியின் ஆட்சியால்தான் இந்த நாட்டை முழுமையான சிங்கள நாடாக்க முடியும்… அமைச்சராக இருந்தபோதே அதற்காக எவ்வளவோ செய்திருக்கிறேன்… ஜனாதிபதியானால் எவ்வளவை செய்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்… புச்சன்ன ஓன தேவல் புச்சல தானவ. அல்லகன்ன ஓன தேவல் அல்ல கன்னவ” காமினியின் பேச்சில்  சனக் கூட்டம் களித்தது. “அப்பே ஜனாதிபதி மாத்துமா… அப்பே ஜனாதிபதி மாத்துமா…” எல்லோரும் கைகளைத் தட்டி ஆரவாரித்தனர். யானைச் சின்னம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடிகள் கைகளில் அசைய “ஜய… ஜய…” சனங்கள் கத்தினர்.

யாரும் எதிர்பாராக் கணமொன்றில் பேரதிர்வுடன் குண்டொன்று வெடித்தது. வானம் தகர்ந்தது போலப் பெருஞ்சத்தம். தொடர்ந்து வெடித்துச் சிதறின குண்டுகள்.  சனக்கூட்டம் சிதறி ஓடத் துவங்கியது. காமினியின் உடல் பாகங்கள் குருதியில் தோய்ந்திருந்தன. குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் உடல்களின் மேலால் பறந்தன கிழிபட்ட தேர்தல் துண்டுப் பிரசுரங்கள். காமினி கையில் கொண்டு வந்திருந்த தேர்தல் அறிக்கைப் புத்தகம் குருதியூறிக் கிடந்தது.

06

எரிந்த புத்தகங்களின் நிழல் நூலகச் சுவர்களில் படிந்திருந்தது. பேரழிவின் காயங்களின் சாயல் தீராத கட்டடமெங்கும் பாழின் தடங்கள். புத்தகங்களின் கூட்டில் இட்ட மிலாசும் தீ நூர்ந்தடங்காமல் ஒரு தீக்குச்சியில் மூண்டது.

சத்தியன் ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து வந்து நூலக வாசலில் வைத்துப் பற்ற வைத்தான். அது காற்றில் எரிந்து கரையத் துவங்கியது. எழுத்துக்களின் குரல்களில் அடங்காத பெருமூச்சின் வெம்மை. தீயடங்காத முகங்களுடன் புத்தகப் பக்கங்கள் அலைந்தன. கைகளில் நிறைந்திருந்த பூக்களை வானத்தை நோக்கிக் காற்றில் எறிந்து நீர் ததும்பி நிலத்தில் சிந்தும் கண்களை இறுக மூடி வணங்கினான் சத்தியன்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More