புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம் அப்பா இல்லாத வீடு | சிறுகதை | தாமரைச்செல்வி

அப்பா இல்லாத வீடு | சிறுகதை | தாமரைச்செல்வி

10 minutes read

அம்மா அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருக்கிறாள். அடுப்பில் மீன் குழம்பு கொதிக்கிறது. தனுவுக்குத் தெரியும் அம்மாவின் மனதும் அப்படித்தான் கொதித்துக் கொண்டிருக்கும் என்று. சிறிய சுள்ளித் தடிகளை அடுப்புக்குள் போட நெருப்பு முளாசிக்கொண்டு எரிகிறது. அம்மாவின் முகத்தில் பரபரப்பும் குழப்பமும் கலவையாக படிந்து கிடக்கிறது. கண்களில் நீர் தழும்பி நின்று வழியலாமா இல்லையா என்று தயங்கி உருள்கிறது. அம்மாவைப் பார்க்க தனுவுக்கு பாவமாக இருக்கிறது.

“ வெங்காயம் இன்னுமா உரிச்சு முடியேலை. கெதியாய்…”

அம்மா அவசரப்படுத்தினாள்.

“ எனக்கேலாது.. நீயே உரி “ என்று உதறி எழும்ப வேண்டும் போல ஒரு வேகம் வந்தது. தனு உரித்த வெங்காயங்களை அம்மாவிடம் தள்ளினாள்.

“எனக்குப் பிடிக்கேலை அம்மா. இவர் ஏன் இப்ப வந்தவர்…எங்களை இவ்வளவு நாளும் விட்டிட்டுப் போனவர்தானே. அவர் இல்லாமல்தானே நாங்கள் இவ்வளவு நாளும் வாழ்ந்தனாங்கள்.  அவர் இல்லாமல் இந்த வீடு நல்லாய்த்தானே இருந்தது. “

தனு சினத்துடன் சொல்லும் போதே அம்மா ஓடி வந்து அவள் வாயைப் பொத்தினாள்.

“ ஒண்டும் கதைக்காதயடி. வெளியில அவருக்குக் கேட்டிடப் போகுது. “

தனு கதவு வழியாக வெளியே பார்த்தாள்.

விறாந்தையில் பிரம்புக் கதிரையில் தலை குனிந்தபடி நரைத்த மெல்லிய தாடி மீசையுடன் அமர்ந்திருப்பவரை உறுத்துப் பார்த்தாள்.

அப்பா…

அப்பா என்ற வார்த்தையை  வாய் உச்சரிக்க மறுத்தது.

அம்மாவுக்கு உதவியாக வந்து அடுப்பில் குழம்பை துழாவி விட்டுக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு தேவானை ஆச்சி தனுவிடம் மெல்லிய குரலில் சொன்னார்.

“ பிள்ளை இது கோவப்படுற நேரமில்லை. என்ன இருந்தாலும் அவர் உன்ர அப்பா அல்லே.”

“ அவர் ஒண்டும் என்ர அப்பா இல்லை. அம்மாவையும், அஞ்சு வயசில என்னையும் விட்டிட்டு ஆரோ ஒரு பொம்பிளையோட போய் இருந்தவர்தானே ஆச்சி. “

சொல்லும் போதே தனுவின் கண்கள் நிறைந்து நின்றது. குரல் அழுகையில் தளுதளுத்தது.

ஆச்சி வந்து பக்கத்தில் அமர்ந்து தனுவின் தோளை அணைத்துக் கொண்டாள்.

“ ஆச்சி இவளுக்கு வடிவாய் விளங்கப்படுத்திச் சொல்லுங்கோ. இவள் ஏதும் கதைக்கப்போய் மனிசன் திரும்பியும் எங்கேனும் போயிடப் போகுது. “

அம்மா பதட்டப்பட்டாள். அவள் முகத்தில் பயம் தெரிந்தது.

“ இஞ்ச பார் தனு. ஏதோ புத்தி கெட்டுப் போய் உங்களை விட்டிட்டுப் போன மனிசன்தான். இப்ப பன்ரெண்டு வருசத்துக்குப் பிறகு உணர்ந்து மனம் மாறி உங்களைத் தேடி வந்திருக்கிறார். ஏதும் கோவமா கதைச்சுப் போடாத. மனிசனைப் பார்க்கவும் பாவமாக் கிடக்கு. பார் வந்ததிலயிருந்து தலையைக் குனிஞ்சு கொண்டு இருக்கிறதை. உங்களை விட்டிட்டுப் போன குற்ற உணர்வு இருக்கும்தானே. அதை நீயும் கிளறிப் போடாதை. அம்மா எல்லாம் சமாளிப்பா. அம்மாவே மனசை ஆற்றி அவரை ஏற்றுக் கொள்ளிற போது உனக்கென்ன வந்தது. “

“ அதில்லை ஆச்சி. அம்மாவோட சண்டை எண்டால் என்னை ஏன் விட்டிட்டுப் போனவர்”

“ சரி…சரி..பிழைதான். மெதுவாய் கதை பிள்ளை. ஒருதர் செய்த பிழையை மட்டும் எப்பவும் நினைக்கிறதே..அவர் உன்னில அன்பாய் இருந்ததையும் நினைச்சுப் பாரன். அப்ப உனக்கு கோபம் வராது.”

“ ஆனால் ஆச்சி. உவரால அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டவ. இந்த வீட்டில அப்பா இல்லாம அம்மாவும் நானும் தனிய இருந்தம். சீவியத்துக்கே வழியில்லாமல் இருந்தம்.”

“எல்லாம் நடந்து முடிஞ்சிட்டுது பிள்ளை. இனி நடக்கிறதைப் பார்ப்பம்.”

“ அதுதான் எங்களை வேண்டாம் எண்டு வேற பொம்பிளையிட்ட போனவரல்லே. இப்ப என்னவாம்…”

“அந்த மனிசியோட ஏதோ பிரச்சனையாக்கும். அதுதான் தான் செய்த பிழையை உணர்ந்து திரும்ப வந்திருக்கிறாராக்கும். நீ எதுவும் கதைக்காம பேசாம இரு பிள்ளை. அம்மாவுக்காக கொஞ்சம் பொறுத்துப் போவன்.”

தனு அம்மாவின் முகத்தைப் பார்த்தாள். இந்த அம்மா அப்பாவின் வருகையில் மகிழ்கிறாளா…பழசையெல்லாம் மறந்து விட்டாளா…அல்லது வேறு வழியின்றி மௌனமாக ஏற்றுக் கொள்கிறாளா..

அப்பா தயங்கித் தயங்கி உள்ளே வந்து விறாந்தையில் அமர்ந்து இரண்டு மணி நேரம்தான் ஆகிறது. அவரைப் பார்த்ததும் அம்மா அதிர்ச்சியில் உறைந்து போய் சில வினாடிகள் நின்றதை தனு பார்த்தாள். பின் அவர் முன்னால் தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். அவர் எதுவும் பேசவில்லை.  குனிந்த தலை நிமிரவில்லை.

அம்மா அழுது முடியட்டும் என்று காத்திருந்தாரோ.. அம்மாவின் இயலாமை, துயரம் எல்லாமே அந்த அழுகையில் கரைந்து போகட்டும் என்று நினைத்தாரோ…

சிறிது பொறுத்து “ அழாதை..எழும்பு..”  என்றார்.

அம்மா உடைந்து போய் பரிதவித்து நின்றதை தனு அப்போது பார்த்தாள்.

“ இருங்கோ “

அம்மா சொல்லிவிட்டு ஓடிப்போய் தேசிக்காய் கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். பேசாமல் வாங்கி மட மடவென்று குடித்தார்.

அம்மா தனுவை வா  என்று கூப்பிட்டாள். தனு அறைக்குள்ளேயே நின்று விட்டாள். அப்பா முன் போக மனம் விரும்பவில்லை. அவர் மீதுள்ள கோபம் மனதுக்குள் விசிறியடித்துக் கொண்டிருந்தது.

“தனு வளர்ந்திட்டாள். இப்ப ஏ எல் படிக்கிறாள். “

அம்மா சொல்வதும் எங்க அவள் என்று அப்பா கேட்டதும் இவள் காதிலும் விழுந்தது. அம்மா அறைக்குள் வந்து தனுவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு போய் அப்பா முன் நிறுத்தினாள். ஒரு வித தயக்கத்துடன் அவர் தனுவைப் பார்ப்பதும் கண்களை மூடித் திறப்பதுமாக ஒரு நிமிடம் நகர்ந்தது.

“ இங்க வா..”   ரகசியம் பேசுவது போல அவர் குரல் மெலிதாய் ஒலித்தது.

தனு அருகில் போகவில்லை. அவர் முகமே ஞாபகப் பரப்பிலிருந்து மறைந்து போயிருந்தது. புதிய ஒரு மனிதராகத் தோன்றினார்.

சட்டென்று குசினிக்குள் வந்து அமர்ந்து விட்டாள்.

அப்போது உள்ளே வந்த தேவானை ஆச்சி அப்பாவிடம் போய் ஓரிரு வார்த்தைகள் கதைத்து விட்டு குசினிக்குள் வந்தா.

“ பத்து மணியாகுது. கெதியாய் சமை பிள்ளை. மனிசன் பசியோட இருக்கும்.”

“ கீரையும் பைத்தங்காயும்தான் இருக்கு ஆச்சி.. மீன் வாங்கலாம். கையில காசு இல்லை. அரைக் கிலோ மீன் வாங்கித் தாறீங்களே..பிறகு காசு தாறன் “

“ சரி பிள்ளை. பையைத் தா.. நான் போய்  வாங்கி வாறன்.”

பையை கொடுத்துவிட்டு

“ ஆச்சி..அவருக்கு பாரை மீன் எண்டால் நல்ல விருப்பம். பார்த்து வாங்கி வாங்கோ.” என்றாள் அம்மா.

“ ஓமோம். சரியான விலையாய் இருக்கும்தான். ஆனாலும் பார்த்து வாங்கிவாறன்.”

பையைக் கொண்டு ஆச்சி போக அம்மா கீரையை அடுப்பில் வைத்தாள்.

“ நீ ஏன் அப்பாவோட கதைக்காமல் ஓடி வந்தனி…”

அம்மா ஆதங்கத்தோடு கேட்டாள். தனு எதுவும் பேசாமல் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். இருபது நிமிடத்தில் ஆச்சி மீனை வாங்கி வந்து கொடுத்தா.

“ விளை, பாரை எல்லாம் சரியான விலை பிள்ளை. பாரை மீன் அரைக்கிலோ எண்ணூற்றைம்பது ரூபாக்கு வேண்டின்னான். கிளிநொச்சி சந்தைக்குப் போனால் கொஞ்சம் குறைவா வாங்கலாம்தான். இது உள்ளூர் சந்தையில அம்பது நூறு கூட்டித்தான் விற்பினம்.”

“ சரி சரி ஆச்சி. அவசரத்துக்கு கணக்கு பார்க்க ஏலுமே. பரவாயில்லை.”

அம்மா மீனைக் கழுவி அடுப்பில் குழம்பை  வைத்தாள்.

அம்மா எப்போதாவது  சூடை, திரளி மீன்தான் வீட்டில் சமைப்பாள். பாரை,விளை மீன் எல்லாம் நினைத்தும் பார்ப்பதில்லை. விலையைக் கேட்டாலே தலையைச் சுற்றும். இன்றைக்கு அம்மாவின் செயல் ஆச்சரியத்தைத் தந்தது. பாரை மீன் குழம்பு என்பதால்தான் இத்தனை அருமையான வாசனை வருகிறதா..

“ அப்பா முதல்ல சாப்பிடட்டும். பிறகு ஆறுதலாய் கதைக்கலாம்.”

ஆச்சிக்கு அவர்களின் நிலைமை தெரியும். அதனால் திரும்பி வந்த அப்பாவை தனு ஏதும் கதைத்துக் குழப்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.

அது தனுவுக்கு புரிந்தது.

“ நீங்கள் சமையுங்கோ. நான் பின்னால போறன்.”

தனு எழுந்தாள்.

“ போய் அப்பாவோட கொஞ்சம் கதையன் பிள்ளை.”

அம்மா கெஞ்சும் குரலில் சொன்னாள்.

“ என்னால ஏலாது. நீ போய்க் கதை.”

வெடுக்கென்று சொல்லிவிட்டு தனு வெளியே வந்தாள். ஓரக்கண்ணால் அப்பாவைப் பார்த்துக் கொண்டே பின் பக்கம் போனாள்.

அதே நிலையில் அசைவற்று இருந்தார். முகம் சோர்ந்து வாடியிருந்தது. அந்த வீட்டின் நடுவே அவர் அமர்ந்திருப்பது புதியதொரு காட்சியாக தென்பட்டது.

மனதுக்குள் தான் செய்த துரோகம் அலைக்கழிக்கத்தானே செய்யும்.  நல்லாய் படட்டும்.

விறாந்தையும் இரண்டு அறையும் விறாந்தை ஓரம் சமையலறையும் பின் புறமும் ஒரு சிறு விறாந்தையும் உள்ள சிறிய வீடுதான். ஆனால் நேர்த்தியாக கட்டப்பட்ட அழகான வீடு. இந்த வீடும் அரை ஏக்கர் காணியும் அப்பாவினுடையது. அதை மட்டுமே அவர்களுக்காக அப்பா விட்டுப் போயிருந்தார். அதற்கு அம்மா மட்டுமே உயிர் கொடுத்தாள். அப்பா இல்லாத வீட்டின் வெறுமையை அம்மாவின் அயராத உழைப்பு நிரப்பி வைத்தது. அம்மாவினதும் தனுவினதும் தனிமையையும் துயரத்தையும் இந்த வீடு அறிந்திருக்கிறது. ஆறுதல் தந்திருக்கிறது. நிழலாய் அரவணைத்திருக்கிறது.

இரவின் இருளில் அவ்வப்போது கேட்கும் அம்மாவின் விசும்பல்களில் இருக்கும் வலியும் கண்ணீரும் தனுவின் உறக்கத்தையும் விரட்டியிருக்கிறது. அதற்குக் காரணமானவர் மீது வெறுப்பும் கோபமும் அதிகரித்துக் கொண்டே போயிருக்கிறது.  அவரை இப்போது நேரில் பார்க்கும் போது கூட அது தணிவதாக இல்லை.

அம்மா எப்படி அவரை மன்னித்தாள்… தோற்றுப் போன வலி இருந்தாலும் வாழ்வின் யதார்த்தம் அவள் வாயை கட்டிப் போட்டு விட்டதா..எதிர்காலத்திலாவது அவரது துணை தேவை என்று நினைத்தாளா…

குழப்பத்துடன் தனு வீட்டின் பின் பக்கம் வந்தாள்.

வெய்யில் சுள்ளென்று எரித்துக் கொண்டிருந்தது. சூரியன் உச்சியில் நின்றது. வீட்டின் பின் விறாந்தையில் நின்று எதிரே பார்த்தாள். பின் முற்றத்தில் மாமரம் நிழல் பரப்பி நின்றது. பின் வேலி ஓரம் தென்னை மரங்கள் வரிசையாய் நிறை காய்களுடன் நின்றன. கிணற்றைச் சுற்றி வாழைமரங்கள். பக்கத்தில் கொஞ்சம் கீரை செழித்திருந்தது. வேலியில் நாலைந்து பாவல் கொடிகள் இப்போதுதான் பூத்திருந்தன. அத்தனையும் அம்மாவின் உழைப்பு.

தனு படி இறங்கி மாமர நிழலுக்கு வந்தாள். பின் புற வேலி தாண்டி சிறிய தூரத்தில் உயரமான குளக்கட்டு தெரிந்தது. சிறிது அகலமான நடைபாதையோடு அமைந்திருந்தது. இந்த மதிய நேரத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் விர்ரென்று விரைந்து போனது. நாலைந்து மாடுகள் வரிசையாக நடந்து போய்க் கொண்டிருந்தன.

பின்னால் குளம் இருப்பதால் காற்றில் எப்போதும் வெம்மை தெரிவதில்லை. வெய்யில் நேரத்தில் கூட காற்றில் ஒருவித குளிர்ச்சி இருக்கும். இப்போதும் வெம்மையும் குளிர்ச்சியும் கலந்த காற்று வந்து முகத்தைத் தடவிச் சென்றது.

வீட்டின் வலது  பக்கம் பரந்து கிடந்த வயல் நிலம். பயிர் வளர்ந்து கதிர் முற்றி சரியும் காலம் வரை கண்ணுக்கு குளிர்ச்சியாகவே காட்சி தரும்.  இடது பக்க வேலியோரம் தேவானை ஆச்சியின் வீடு. நெருக்கமாக கிளுவை மரங்களால் வேலி அடைக்கப்பட்ட காணி. சிறிய வீடு. அதற்கப்பாலும் சிறிது தூரத்துக்கு தோட்டக்காணி..

இந்த வயல்களிலும் தோட்டக் காணிகளிலும்தானே அம்மா வேர்க்க விறு விறுக்க உழைத்து அவளை வளர்த்திருக்கிறாள்.

அப்பா விட்டுப் போன நேரம் என்ன நடந்தது என்றே அவளுக்கு நினைவில் இல்லை.

பின் நாளில் அம்மா அழும் போதெல்லாம் ஆறுதல் சொல்லும் தேவானை ஆச்சியின் வார்த்தைகளிலிருந்துதான் நடந்தவைகளை அவ்வப்போது அறிந்திருக்கிறாள். அப்பா பற்றிய நினைவுகள் அவளுக்கு அதிகம் இருந்ததில்லை. தன்னை உயரத்தூக்கி எறிந்து பிடித்து மீசை குத்த தரும் முத்தம் சிறிது காலம் மெலிதாய் நினைவில் இருந்தது. அதுவும் பின் நாளில் மறைந்து போயிற்று. ஒரு சமாதான காலத்தில்தான் தனு பிறந்ததாக அம்மா அடிக்கடி சொல்வாள். மூன்று வயதில் கடைசி இடப்பெயர்வில் அலைந்து திரிந்து மறுபடி இந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். இந்த வீட்டை மறுபடி திருத்தியதும் அப்பாதான்.

வியாபாரம் செய்ய என்று அவர் குருநாகல் போகத் தொடங்கியதே அவர்களுக்கு வினையாக வந்து முடிந்தது. அங்கே ஒரு பெண்ணுடன் அப்பாவுக்கு ஏற்பட்ட பழக்கம் அறிந்து அம்மா சண்டை போட்டதும் அவர்களை விட்டு ஒரேயடியாக போய்விட்டார். அதன் பிறகு அவரைப்பற்றி எந்த தகவலும் தெரியவில்லை. அந்த வீட்டில் அம்மாவும் அவளும் தனித்து விடப்பட்டார்கள். வீட்டின் சுவர்களுக்குள் ஒடுங்கிப் போய்க் கிடந்தார்கள். அப்பா இல்லாத வீடு ஆரம்பத்தில் கலவரத்தை தந்தாலும் நாளடைவில் அதுவே பழகிப் போயிற்று.

அப்பப்பாவும் அப்பம்மாவும் மகனின் செய்கையில் திகைத்துப் போய் நின்றார்கள். மகனைத் திட்டிக் கொண்டே அவர்களை ஆதரவோடு பார்த்துக் கொண்டார்கள். வட்டக்கச்சியில் அவர்கள் இருந்ததால் அடிக்கடி வர முடிவதில்லை. எப்போதாவது வரும் நேரங்களில் மரக்கறிகள், பழவகைகள், அரிசி,என்று கொண்டு வந்து தருவார்கள்.  தனுவின் படிப்புக்காக கொப்பி பேனை வாங்க கொஞ்சம் காசு கொடுப்பார்கள். அதிகம் வசதி இல்லாத அவர்களால் இவ்வளவு செய்ய முடிந்ததே பெரும் ஆறுதலாக இருக்கும். மற்றும்படி அம்மாதான் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. வருகின்ற வருடம் உயர்தரப் பரீட்சை. அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் செல்லவேண்டும். பட்டதாரியாக வந்து நல்ல உத்தியோகம் பார்க்க வேண்டும். அம்மாவை ஒரு குறையுமில்லாமல் பார்க்க வேண்டும். இந்த ஒரே கனவுதான் தனுவுக்குள் இருந்தது. இப்போது அமைதியான குளத்தில் கல்லெறிந்தது போல அப்பாவின் வருகை நிகழ்ந்திருக்கிறது. அவரின் வருகை தன்னை ஆறுதலாக இருக்க வைக்கும் என்று அம்மா நம்புகிறாளா……இந்தக் குடும்பத்தின் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று நினைக்கிறாளா… ஓடிக் களைத்தவளுக்கு ஓரிடத்தில் நின்று மூச்சு வாங்கத்தானே தோன்றும். பாவம் அம்மா.  எது எப்படி இருந்தாலும் அம்மாவின் முக மலர்ச்சிதான் முக்கியம்.  இனியாவது அம்மா நிம்மதியாக இருக்கவேண்டும்.அதற்காக அவள் கோபித்து எதையும் கதைக்கக் கூடாது.

தனு தயங்கியபடியே வீட்டினுள் நுழைந்தாள். குசினிக்கு முன்னால் உள்ள சிறு விறாந்தையில் தரையில் அமர்ந்து அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் வீட்டில் சாப்பாட்டு மேஜை என்று எதுவும் இல்லை. எப்போதும் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவார்கள். தேவானை ஆச்சி தண்ணீர் செம்பு எடுத்து வந்து பக்கத்தில் வைத்தா.

“ நல்லாய் சாப்பிடு மோனை. நல்ல பசியில வந்திருப்பாய்.”

அப்பா சாப்பிடும் வேகத்தில் அவரது பசி தெரிந்தது. சாப்பிடும் அவரைக் கவலையோடு பார்த்துக் கொண்டு அம்மா சுவரில் சாய்ந்தபடி  நின்றாள்.

“ கொஞ்சம் குழம்பு கொண்டு வந்து விடு பிள்ளை.”

அம்மா ஓடிப் போய் கிண்ணத்தில் மீன் குழம்பு எடுத்து வந்து சோற்றுக்கு மேலாக ஊற்றினாள்.

“ நீயும் வந்து சாப்பிடு தனு. உன்னைச் சாப்பிட்டதோ எண்டு அப்பா கேட்டவர்.”

தலை குனிந்தபடியே சாப்பிடும் அப்பாவை தனு பார்த்தாள். நேரடியாக தன்னோடு கதைப்பதில் அவருக்குள் ஏதோ ஒரு தடை இருப்பது புரிந்தது.

“ நான் பிறகு சாப்பிடுறன்.”

சொல்லிவிட்டு தனு முன் வாசலுக்கு வந்தாள். பசி இருக்கவில்லை. ஆனாலும் வயிற்றுக்குள் ஏதோ உருள்வது போலிருந்தது. ஒரே நாளில் வாழ்க்கை தலைகீழாய் மாறிவிட்டது போல தோன்றியது.

தன்னை துன்பத்தில் சுழல விட்ட அப்பாவை எப்படி ஒரே பார்வையில் அம்மாவால் மன்னிக்க முடிந்தது. எதுவுமே நடக்காதது போல வரவேற்க முடிந்தது. உலுக்கி ஒரு கேள்வி கூட கேட்கத் தோன்றாமல் அமைதி காக்க முடிந்தது.  அவளுக்கு அம்மாவின் மனது புரியவில்லை. ஆனாலும் அம்மாவின் முகத்தில் நிறைந்திருந்த அமைதியும் ஆறுதலும் அவளை வாயடைக்கச் செய்திருந்தது. இனி கோபமாகவோ வெறுப்பாகவோ எதுவும் பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று தோன்றியது. இனி வரும் நாட்களில் அந்த மனிதருடன் சுமுகமாக பேசிப் பழக முடியுமா என்று தெரியவில்லை.  முயற்சிக்கலாம்.  கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம். அம்மாவுக்காக எதையும் செய்யலாம்.

அம்மா கூப்பிடும் குரல் கேட்க தனு குசினிக்கு வந்தாள்.

அப்பா மறுபடி கதிரையில் போய் அமர்ந்து கொண்டார். தனு போன போது தேவானைஆச்சியிடம் அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள்.

“ இவர் வந்ததை மாமா மாமிக்குச் சொல்லவேணும் ஆச்சி. இவர் அவைக்குச் சொன்னாரோ தெரியேலை.”

“ ஓம் பிள்ளை. அதுகளுக்கு கட்டாயம் சொல்லவேணும். மகன் வந்திட்டார் எண்டால் சந்தோஷப்படுவினம்.”

அம்மா தயங்கியபடியே அப்பாவிடம் போய் கேட்டாள்.

“ நீங்கள் இங்க வந்ததை மாமா மாமிக்குச் சொன்னனீங்களே…”

இல்லை என்று தலையசைத்தார்.

“ அவைக்கு நான் என்னெண்டு சொல்லுறது. வந்திட்டன்தானே.. ஆறுதலாய் சொல்லுவம்”

“ சரி.”

அப்பாவிடம் சரி என்று சொல்லிவிட்டு வந்தாலும் அம்மாவுக்கு மனம் கேட்கவில்லை.

“ அய்யோ ஆச்சி. இவர் வந்ததை உடனும் தங்களுக்கு சொல்லேலை எண்டு அவை குறை நினைக்கப் போகினம்.”

“ ஓம் பிள்ளை. நீயே சொல்லிவிடு. தாய் தேப்பன் வந்து பேசிப்போடுவினம் எண்டு பயப்பிடுறார் போல கிடக்கு. வந்து ஒண்டும் அவரைப் பேசிப்போட வேண்டாம் எண்டும் சொல்லிவிடு.”

அம்மா குசினிக்குள் நின்றபடி கைபேசியில் அப்பம்மாவுடன் கதைத்தாள்.

“ மாமி..இவர் வந்திருக்கிறார்.”

“ என்னது…ஆர் வந்தது…”

“ உங்கட மகன்தான்.”

“ என்ன பிள்ளை சொல்லுறாய்…எப்ப ? “

“ இப்ப மத்தியானம்தான் வந்தவர் மாமி. நான் சமைச்சுக்கொண்டு நிண்டிட்டன். இப்பதான் சாப்பிட்டிட்டு இருக்கிறார்.”

“ என்ர அம்மாளாச்சி..  இப்பவாவது அவனுக்கு புத்தி வந்ததே…என்ன மாதிரி இருக்கிறான்.”

“ கொஞ்சம் கவலையாத்தான் இருக்கிறார் மாமி. கனக்க கதைக்கேலை.. நானும் ஒண்டும் கேக்கேலை..நீங்களும் வந்து ஒண்டும் பேசிப் போடாதேங்கோ..”

“ சரி பிள்ளை.. பழசெல்லாம் என்னத்துக்கு..அந்த மனிசியோட ஏதும் பிரச்சனைப்பட்டு வந்திருப்பான். இனி கதைக்க என்ன இருக்கு. மாமா வயலுக்குப் போட்டார். அவர் வந்தவுடன வாறம். இனியாவது உன்ர துன்பம் தீரட்டும்.”

“ சரி மாமி வைக்கிறன்.”

அம்மா கைபேசியை அணைத்துவிட்டு அப்பாவிடம் போனாள்.

“ நீங்கள் வந்ததை மாமிக்குச் சொன்னனான். வயலால மாமா வந்தவுடன வாறம் எண்டு சொன்னவ.”

நிமிர்ந்து பார்த்த அப்பாவின் கண்களில் பயமும் தடுமாற்றமும் தெரிந்தது.

“ வந்து என்ன சொல்லப் போகினமோ..ஆறுதலாய் சொல்லியிருக்கலாம்.”

வாய்க்குள் முணு முணுத்தார்.

“ சரி நீயும் தனுவும் போய் சாப்பிட்டு வாங்கோ..அவை வாற நேரம் வரட்டும்.”

தேவானை ஆச்சி நான் வீட்ட போய் சாப்பிடுறன் என்று சொல்லி போய்விட்டா.

அம்மாவும் தனுவும் எதிர் எதிராக அமர்ந்து சாப்பிட்டார்கள். இன்றைக்கென்னவோ மீன்குழம்பு அதிக ருசியாகப் பட்டது. அது பாரை மீன் குழம்பு என்பதால் மட்டும் அல்ல என்பதை தனு உணர்ந்தாள். நீண்ட நாட்களுக்குப் பின் அம்மா மனம் வைத்து சமைத்திருக்கிறாள்..

சோற்றுக் குழையலை உருட்டி எடுத்து வாய் நிறைய வைத்து அம்மா சாப்பிடுவதை தனு நெகிழ்வோடு பார்த்தாள். அம்மா இப்படி ஆசையாக சாப்பிட்டு எத்தனை காலம்…

தனுவுக்கு கண்களின் ஓரம் நீர் கசிந்து நின்றது.

இருவரும் சாப்பிட்டு வெளியே வந்தபோது அப்பா அமர்ந்திருந்த கதிரை வெறுமையாக இருந்தது. எங்கே போனார் என்று சுற்றும் முற்றும் பார்த்தார்கள்.  அறைக்குள் தடதடக்கும் சத்தம் கேட்டது.

“ சாப்பிட்ட பிறகு கொஞ்சம் படுப்பம் எண்டுஅறைக்குள்ள போயிட்டாராக்கும். பிள்ளை…அப்பாக்கு பாயும் தலாணியும் எடுத்துக் குடு.”

“ நீங்க போய் எடுத்துக் குடுங்கோ அம்மா..”

தனுவின் குரல் தழைந்து போய் இருந்தது.  அதில் கோபமோ வெறுப்போ இல்லை.

அம்மா அறைக்குள் போனாள்.  அப்பா அங்கு நின்றதால் தனு வாசல் கதவருகே நின்று கொண்டாள்.

அப்பா அறை மூலையில் இருந்த பழைய மர அலுமாரியை திறந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“ என்னப்பா பார்க்கிறீங்கள்? “

அம்மா கேட்டதுக்கு பதில் சொல்லாமல் லாச்சியைத் திறந்தார்.

“ ஏதாவது வேணுமே… என்ன தேடுறீங்கள்..”

“ வாறன் சொல்லுறன் பொறு..”

அப்பா லாச்சிக்குள் இருந்த பெரிய உறையை எடுத்துப் பிரித்துப் பார்த்து கையில் எடுத்துக் கொண்டார்.

“ என்ன வேணும் உங்களுக்கு. “

அம்மா பதட்டமானாள்.

அப்பா அந்த பெரிய உறையை எடுத்து தனது பையுக்குள் வைத்துக்கொண்டார்.

“ ஏன் இதை எடுக்கிறீங்கள்..

அம்மா கலக்கத்தோடு கேட்டாள்.

“ குருநாகல்ல கடை நடத்தி சரியான நட்டமா போச்சு. லட்சக்கணக்கில கடன் வந்திட்டுது. இந்த வீடு என்ர பேரிலதானே இருக்கு. அதுதான் வீட்டின்ர உறுதி எடுக்க வந்தனான். இந்த வீட்ட விற்கப் போறன். விலையும் பேசியாச்சு. ஒரு மாதத்தில வீடு கைமாறியிடும். நீங்கள் ரெண்டுபேரும் எங்கயாவது பார்த்துப் போய் இருங்கோ. இப்ப நான் போறன்.”

அம்மா இடி விழுந்தவளாய் அரண்டு போய் நின்றாள்.

அப்பா கதவருகே நின்ற தனுவைத் தாண்டிக் கொண்டு வெளியே போனார். முற்றம் கடந்து தெருவில் இறங்கிப் போனவரை தனு அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

இன்னும் சிலவினாடிகளில் கேட்கப் போகும் அம்மாவின் பெரும் கதறலை எப்படி எதிர்கொள்வது….

அய்யோ…  கடவுளே….

தனு பதறிக்கொண்டே அம்மாவை நோக்கி ஓடினாள்.

 

நிறைவு

 

தாமரைச்செல்வி

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More