தோழனே !
நேற்று வரைக்கும் குந்தியிருந்து கள்குடித்த
முற்றத்துப் பனையை மறந்துபோனாய்.
கித்துள் பாணியை மோகத்துடன் சுவைக்குமுன் கரங்களில்
கொடும்பாம்பென நெளிகின்றன
பிரித் கயிறுகள்.
நேற்றைக்கு கிடைத்த
செஞ்சட்டையின் கவர்ச்சியில்
கறுப்பாடையணிந்து கொட்டிய மழைநடுவில்
உடைந்த கல்லறைகளுக்குமுன்
நாம் சிதைந்து அழுத கணங்கள்
இருளில் மூழ்கின.
எங்கள் தோள்களில் இன்னமும் அவர்கள் மிதித்த
சுவடுகள் கண்டியுள்ளன.
எங்கள் நினைவுகளில் இன்னமும்
கொக்கரிக்கும் சாதுக்கள் வந்துபோகின்றனர் .
எங்கள் நிகழ்காலங்களை ஆக்கிரமிக்கப்படும் நிலங்கள் அச்சுறுத்துகின்றன.
எல்லாவற்றையும் மறந்துக்கொண்டு
உச்சரிக்கச் சொல்கிறாய்
தோழமைக் கீதமொன்றை..
ஆயினும்
உடைந்து கிடக்கும்
நம் அன்னையின் நினைவுத் தூபியில் ஒற்றைக் காந்தளை ஏந்த
அனுமதி கேட்கும் வரையில்
எப்படி இயலும்
என்னால் உன்னுடைய
பொப்பி மலர்களை சூடிக்கொள்ள.
– வில்வரசன்-