(முள்ளிவாய்க்கால் நினைவில் — விடுதலைக்கான சத்தியப் பத்திரம்)
ஒவ்வொரு கண்ணீரும் மண்ணில் விழும் போது,
முள்ளிவாய்க்காலின் மௌனக் கத்தல் எழுகிறது.
சிறுவர் சிதறி வீழ்ந்த சேற்றுப் பசியில்
தாய்மையின் இரத்தம் கலந்துவிட்டது.
அங்கு வீழ்ந்த உயிர்கள் இன்று சொல்லிக்கொண்டிருக்கின்றன:
“எங்கள் குருதி வீணாகாது!”
உலகம் பார் திருப்பியது,
மனித உரிமை மேடைகள் மூச்சு நிறுத்தின.
ஆனால் நந்திக்கடல் மட்டும்
ஒவ்வொரு நாளும் நம்முள் முரசாய்க் கூவுகிறது!
அது வீழ்ந்தவர்களின் கடைசிச் சுவாசம்,
நம் தாய்மொழியின் அழித்த உணர்வுத் துயரம்!
நாம் உயிர் பிழைத்தோம்—
ஆனால் அடிமைபடவில்லை.
நாம் உயிர் கொடுத்தோம்—
ஆனால் எங்களின் சத்தம் இன்னும் வானில் இருக்கிறது!
மண்ணும் கடலும் நம்மை பார்த்து நம்புகின்றன.
அவனிடம் சென்று நீதியைப் பிச்சை கேட்பது
தாயின் துயரத்தை மறப்பதற்கே ஒப்பாகும்!
அவனிடம் குனியாதே, தோழா!
அவன் கொன்றவன்; அவனிடம் நியாயம் கிடையாது.
அவன் மொழியில் பேசுவது
எங்கள் இனத்தின் இறுதிச்சாவாகும்!
தமிழீழம்—ஒரு கனவல்ல, ஒரு வரலாறு!
நந்திக்கடலின் சாட்சியாய் நம் உரிமை!
முள்ளிவாய்க்காலில் எழுந்த சத்தியக் குரல்!
வீழ்ந்த ஒவ்வோர் வீரரும் நம்முள் சுடராய் இருக்கிறான்!
எழு, இளம் தமிழ்!
நிழலின் சாயலல்ல—நிழலை நொடிக்கும் சுடராய்த் திரும்பு!
உணர்வின் நெருப்பால், உண்மையின் ஈரத்தால்
நாம் மீண்டும் தேசமாய் எழவேண்டிய தருணம் இது!
ஒன்றான நம் குரலில்—
தமிழ் கடலே நம் சத்தியத்தின் பிரதிபலிப்பு!
விடுதலையே நம் விடியல்!
ஈழத்து நிலவன்
06/05/2025