நான் பிறக்க ஒரு நாடு
நான் பிழைக்க வந்தது இன்னொரு நாடு
சொர்க்க பூமி எனக் கூட்டி வந்தார் கண்காணி
சுகமான வாழ்வு இல்லை எனப் பின் அறிந்தோம்
கூலிகள் என்று எமக்கு நாமம் சூட்டி எம்மை
கூட்டமாய் கப்பலில் கொண்டு வந்தார்கள்.
சிங்களவன் குறைந்த கூலிக்கு வர மறுத்த போது
சின்ன கூலிக்கு எம்மை கொண்டு வந்தார் துரை
அடிமைகளை விட கேவல வாழ்க்கை
அஞ்சி, கெஞ்சி, செய்யும் தொழில்
கங்காணி என்ற எஜன்ட் காரன்
காசுக்காக எம்மைக் கப்பலில் கொண்டு வந்தான்
வறுமை போகும் என்று நம்பி வந்தோம்
வறுத்து எடுத்தார்கள் வேலை கொடுத்து
லயின் வீடுகளில் ஒடுங்கிய வாழ்க்கை
லட்சியமற்ற எம் வாழ்க்கை
சேவல் கூவ முன் காலையில் எழும்பி
சமைத்து ,பின், குளித்து, கும்பிட்டு
கையினால் திலகமும், திருநீறும் வைத்து,
கம்பிளியால் உடலைக் காத்தபடி நடந்தோம்,
கூடையை பின்னால் சுமந்த படி,
கூனியபடி குளிரில் மூச்சு வாங்க மலை ஏறி.
சில நிமிடம் வேலைக்கு தாமதித்த போது.
சீறி விழுந்தார் ஒவர்சியர் எம்மேல்
அட்டைக் கடியோடு குளிரில் நடுக்கம்.
அனுதாப பட எமக்கு எவருமில்லை.
பரிபாலனத்தின் அதிகாரச் சின்னமாய்.
பார்க்க வந்தார் குதிரையில் பைப்போடு பெரிய துரை.
பேசாமல் ஏய் நீ கொழுந்து பறி என்றார் சத்தம் போட்டு
பேச்சு சுதந்திரத்துக்கு எமக்குத் தடை விதித்து.
எங்கடி தங்கம்மா உன் கணவனைக் காணோம்?
ஏன் அவன் வேலைக்கு வரவில்லை மீனாட்சி கேட்டாள்.
அதை ஏன்டி கேட்கிறாய் அவன் கதையை,
அவன் குடித்து போட்டு இரவு எனக்கு தந்த ஆக்கினை.
எப்படி உன் ஐந்து பிள்ளைகள் இருக்கினம் ?
ஏன் கேட்கிறாய் எங்கள் குடும்பக் கட்டுபாட்டினை.
அது தான் எங்கள் பொழுது போக்கு,
அந்த சின்ன அறைக்குள் என் குடும்ப வாழ்வு.
அங்கை என்னடி கதை கிடக்குது
அதட்டியபடி வந்தார் கண்கானித்த கங்காணி
மழை இடியோடு திடீர் எனப் பெய்தது.
மயங்கி தேயிலை செடிமேல் விழுந்த=தாள் தங்கம்மா
அவள் நாடியைப் பிடித்து பார்த்தாள் செல்லம்மா
அய்யோ இவளுக்கு வவுத்திலை ஆறாவது என்றாள்.
இடித்த இடி ஆமோததித்தது அவள் சொன்னதை.
இதுதான் அவள் வாழ்க்கை என்றாள் முத்தம்மா
நாட்டின் பொருளாதாரத்தை எம் உழைப்பால் வளர்த்தோம்
நாட்டின் பிரஜா உரிமைக்கு எமக்குக் கட்டுப்பாடு.
எப்போ வெடிக்கும் எமது வேலை நிறுத்தம்
எதிர்பார்த்து நிற்கிறோம் சம்பள உயர்வு கேட்டு.
-பொன் குலேந்திரன் (கனடா)