செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்

கவிதை தான் எனது ஆன்மா: கவிஞர் தேன்மொழிதாஸ் வணக்கம் லண்டனுக்கு நேர்காணல்

4 minutes read

உங்களைப் பற்றி சிறிய அறிமுகம்?

எனக்கென என்ன அறிமுகம். ஏழு வயது முதல் கவிதை எழுதுவது தொடங்கி.. தன் பதினைந்து வயது வரை எழுதிய கவிதைகள் பலவற்றில் இருந்து 1996 முதல் இலக்கியத்தில் பல சிறு பத்திரிகைகள் வழியாக கவிஞர் என அறிப்பட்டவர். முதல் தொகுப்பு இசையில்லாத இலையில்லை 2000 ல் வெளியானது

கவிஞர், திரைப்பட பாடலாசிரியர் இந்த இரண்டு அடையாளங்களில் எது உங்களுக்கு பிடிக்கும்?

கவிதை தான் எனது ஆன்மா. கலைகளிலே ஆகச்சிறந்த கலை எழுத்து. அதிலும் கவிதை என்பதே முதன்மையான நுண்கலை . இப்பிறவியில் மொழியிலே ஆதியாம் தமிழில் போற்றுதலுக்குறிய கலையில் வாழ்கிறேன் என்பது மட்டுமே பெரும் பேறு. கவிதை காலம் இரண்டும் வேறு வேறு அல்ல நான் அறிந்த கலைகளிலே தெவிட்டாத கலை கவிதை மட்டுமே.

No photo description available.

இப்போது திரைப்படங்களில் பாடல்கள் எழுதுவதில்லையா? திரைப்பட பாடல் அனுபவங்கள் குறித்து கூறுங்கள்.

இப்போதும் பாடல்கள் எழுதுகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எனது பாடல்கள் அடுத்த சாட்டை என்ற படத்தில் வெளியானது . வெளியீடு முடிந்த மறுநாளே அது வெற்றிப் பாடல் என்ற சேதி எட்டியது. ஆயினும் வாய்ப்புகளை தேடிச் செல்வதில்லை . காரணம் கவிதைகளில் நான் நிறை மனநிலை கொள்வதால் கிட்டும் வாய்ப்பிற்கு மட்டுமே எழுதுகிறேன்.

ஏன் தேன்மொழிதைாஸை சுற்றி ஒரு சோகம், தனிமை சூழ்ந்திருக்கிறது? அது உண்மைதானா?

இளமையில் தனிமை கொடியது என்றாள் அவ்வை இளமையில் தனிமை இனிது என்கிறேன் இது எனக்கான அடையாளத்தை.. நித்தியத்தின் பாதையை.. வாழ்வின் மெய்யை.. இறைமையை ஆன்மநேயத்தை மனித நேயத்தை கற்கவும் எழுதவும் அதன்படி வாழவும் வழிவகுத்தது .. நூற்றாண்டுகள் தாண்டி பிறக்கப் போகும் தமிழ் மக்களுக்கும் ..எனது ரத்தமும் மனமும் இங்கே வார்த்தைகளை ஜீவத் தண்ணீராய் விட்டுச் செல்ல வேண்டும் என்பது ஆன்ம உறுதியாக இருக்கிறது. எனது எழுத்தின் நோக்கம் நம் மக்களின் மீதும் மண்ணின் மீதும் தீராக் கருணை கொண்டது. எனது எழுத்திற்கென்று ஒரு கோட்பாட்டை வகுத்துக் கொண்டேன்

Image may contain: 1 person, closeup

ஒடுக்குமுறையில் இருந்து தான் எரிமலையாக விளைந்தேன்
ஆயினும்
எனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தில் இருந்து தர்மத்தை
நான் எதிர்கண்ட மரணங்களில் இருந்து அன்பின் ஆழத்தை
எல்லா உயிர்களிடமிருந்தும் வாழ்விற்கான பாடத்தை
இயற்கையிடமிருந்து நுண்ணறிவை கனவுகளிலும் கற்பனைகளிலும் இருந்து பல தரிசனங்களையும் பெற்றேன்
பஞ்சபூதங்களிலிருந்தும் மாயைகளிலிருந்தும் பிரபஞ்ச சக்தியை அறிந்து
அநீதிகளில் இருந்து உலகநீதிக்கான கொள்கையை எனக்குள் உருவாக்கி
பசிகளிலிருந்து விடுபட்டு தியானத்தைப் பழக்கினேன்
உள்ளே ஒலியாகவும் ஒளியாகவும் தகிக்கும் உடல்களை மொழியால் இயக்கி
கவிதைலிருந்து எனது உலகை படைத்துக் கொண்டேன்
எனது நெறி தசைகொண்டே துடித்திடினும்
அது அகத்தில் மெளனமாயிருந்து எழுத்தில் பிரசன்னமாகிறது
இயற்கையே எனது தொழுகை
இயற்கையோடு இயற்கையாக வியாபித்து இருத்தல் எனது நிலை
சொல்லை உயிர்ப்பித்தல் எனது தொழில்
தமிழ் எனது பெரும் பேறு
சமத்துவம் எனது மூலக் கொள்கை
சித்தம் எனது மதம்
ஆன்ம நேயமே எனது மார்க்கம்
கருணையே கடவுள்
– தேன்மொழி தாஸ்

புதிய முயற்சிகள் எதில் ஈடுபட்டு வருகிறீர்கள்?

புதிய முயற்சி என்று எழுத்தைத் தாண்டி ஒன்றும் இல்லை. இவ்வாண்டு நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் கதைகளை வெளியிட வேண்டும். நாவல்கள் எழுத நேரம் ஒதுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மொழியின் மூலம் நாம் எல்லா போராட்டங்களுக்குள்ளும் பயணிக்க முடியும் அன்பிற்கென நடப்பதே இவ்வுலகில் வலிமையான போராட்டம்.

எழுத்து என்பது அஷ்டமுகம்  கூராக்கப்பட்ட ஒரு விசித்திரமான ஆயுதம்.

Image may contain: 1 person, smiling, closeup

தேன்மொழிதாஸ் தமிழக கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர். இசையில்லாத இலையில்லை (2000) அநாதி காலம் (2002) ஒளியறியாக் காட்டுக்குள் (2007) நிராசைகளின் ஆதித்தாய் (2014) காயா (2016) வல்லபி (2017) முதலிய தொகுப்புக்களை வெளியிட்டவர். 60இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களை எழுதியவர்.

 

நேர்காணல் மற்றும் தொகுப்பு – வணக்கம் லண்டனுக்காக தீபன்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More