காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில்
பண்டார வன்னியனின் பெயரும் அடக்கம்
அடங்காப்பற்றின் குமுறும் எரிமலை
ஆர்ப்பரிக்கும் வற்றாக்கடல்
வெள்ளையனை விரட்டிய வீரவேங்கை
தமிழ்ரத்தம் கொப்பளிக்கும் கோபக் கனல்
காணாமல் ஆக்கப்பட்டதன் மாயமென்ன
கூடாத கூட்டங்கள் போட்டனர்
குப்பைவாடி அரசியல் யாத்தனர்
யாதகம் மாற்றியமாய்ந்தனர்
பண்டார வன்னியனை பண்டாவிடம் விற்றபடி மிதந்தனர்
வன்னியின் மாண்புகள் மாண்டிட
கண்டிய நடனமாய் மாறிட
திரண்டவந் சொற்ப மாந்தர் நடுவிலே
தம்மைப் பறியடித்து பகட்டு அரசு செய்யவே
பண்டார வன்னியனை பண்டாவிடம்
விற்றபடி மிதந்தனர்
கட்சியற்ற காட்சி கொண்டிடல் வேண்டும்
இவர்
வன்னியன் சிலையில் வல்லமை
வார்த்திட மேண்டும்
இவர்
மெல்லெனவெனினும் முத்தமிழ் யாத்து பண்டார வன்னியின் வரலாற்றைப் பகிர்ந்திடல் வேண்டும்
இவர் பண்டாவின் மண்டையில் வன்னியன் கீர்த்தியை நேர்த்தியாய் உரைத்திடல் வேண்டும்
இவர் பாடநூல்களில் பண்டார வன்னியின் வருதற்கு முன்மொழிதலை முதல் வேலையாச் செய்திடல் வேண்டும்
இவர் வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் ஓடி அவர்களைக் கூடி வீர முரசை நாடி ஆங்கோர் வீர புருசர்கள் கலைஞர்களைத் தேடி வன்னியன் புகழ் செப்பிட வேண்டும்
அஃதிலா நயனங்கள் எதற்கு
அஃதிலா நடிப்புகள் எதற்கு
அஃதிலா சோடனைகள் எதற்கு
அஃதிலா அரசியல் வஞ்சனை எதற்கு
அஃதிலா அறியாமை எதற்கு
ஈற்றில் தேரை போல் ஓருடல் தாங்கிய
சிலையது எதற்கு
தேரர்கள் மகிழவா
தென்திசை களிக்கவா
சிங்களன் நூலிலே தொங்கிடும்
மங்கல மற்ற முகங்கள் வன்னியன் புகழைப்பாடின்
வன்னியன் ஆவியும் அழும்
அவன் கானும் கருகும்
தேனென்றும் தினையென்றுமிருக்கும் வரலாற்றையாவது விட்டுவையுங்கள்
அவை
அடுத்து வரும் சந்ததியோர்க்கு
நல் சரித்திரம் பகரட்டும்.
த. செல்வா