25
கதைகளின் வழியாக குழந்தைகள் மனதில் நல்லதே விதைக்கும் விதமாக கதை சொல்லும் தொடர் நிகழ்வினை கடந்த ஜூலை முதல் செயல்படுத்தி வருகின்றது ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். இத்தொடர் நிகழ்ச்சியின் 3 வது கதைசொல்லும் நிகழ்வு சிந்து சதன் மண்டபத்தில் செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது கதைகளோடு கதைகளாய், நம் பாரம்பரிய அறிவையும் கற்றுத்தரும் ஒரு முயற்சி. கதை சொல்லி அமுதா கார்த்திக் ,கதை செல்லும் நிகழ்வில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகரின் பல்வேறு கதைகளைக் குழந்தைகளுக்கு கூறினார். பெருமை வாய்ந்த பிள்ளையார் கதைகளை, பாட்டின் மொழியில் சொல்லி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார். மேலும் இக்கதை சொல்லும் நிகழ்வில் கொழுக்கட்டை கதை(kutty & the mouse) குழந்தைகளை பெரிதும் ஈர்த்தது.
பிள்ளையார் உருவான வரலாறு, பிள்ளையாரின் புத்திசாலினம் சொல்லும் கதை போன்ற பல கதைகளை கூறினார். ஒருமுறை சிவபெருமான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி பார்வதி தேவி அதற்கு உயிரூட்டினார். அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது.
எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார். அச்சமயம் அங்கு வந்த சிவபெருமானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார். பார்வதி தேவி நிகழ்ந்ததை எண்ணி வருந்தினார். பின் யானை முகத்தினை சிவ பெருமான் பிள்ளையாருக்கு பொருத்தினார் என பிள்ளையார் பிறந்த வரலாறு பாட்டுடன் சொன்ன விதம் குழந்தைகளை மிகவும் கவர்ந்தது.
மேலும்,பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்…என்னும் பாடலைப் பாடி பிள்ளையார் இருக்கும் இடங்கள், உணவு போன்ற பிள்ளையாரின் வரலாறுகளை கூறினார். ஆற்றங்கரை மீதியிலே அரசமரத்து நிழலிலே இருக்கும் பிள்ளையார்.. கஷ்டங்களை எல்லாம் தீர்க்கும் பிள்ளையார்.சந்தனம், மஞ்சள், களிமண், சாணம் என எளிதாகக் கிடைக்கக் கூடிய, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லா பொருளில் விநாயகரை செய்து வழிபட வேண்டும் . விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்,என்று குழந்தைகளுக்கு பிள்ளையாரை வழிபடும் முறையை சொல்லித் தந்தார்.
மேலும் தொழில்நுட்பம் நம்மை வசப்படுத்தும் முன்பு நாம் விளையாடிய விளையாட்டுகள் இன்று கனவாகி போகிவிட்டது. அந்த காலங்களில் விடுமுறை நாட்களில் பெரியவர்கள் வீட்டின் திண்ணையில் விளையாடும் விளையாட்டுகள், இன்று நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் வந்துவிட்டது. தெருக்களில் சிறுவர் சிறுமிகள் விளையாடிய காலம் மாறி இன்று தெருக்களும் வெறுச்சோடி கிடைக்கிறது. அப்படி நாம் மறந்த தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளுள் ஒன்று கொலை கொலையா முந்திரிக்கா விளையாட்டு. பாரம்பரியத்தை நினைவூட்டும் விதமாக இவ்விளையாட்டை குழந்தைகளை விளையாட செய்தார் அமுதா கார்த்திக். இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 6ஆம் தேதி கண்மணியே கதை கேளு நிகழ்வு நடைபெறும்.