தாமரைச்செல்வியின் “உயிர்வாசம்” நாவல் இரண்டாம் பதிப்பு சென்னை புத்தக கண்காட்சியில் சிந்தன் புக்ஸ் காட்சியறையில் கிடைக்கின்றது.
கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி மற்றும் ஆடுகளம் திரைப்பட உதவி இயக்குனர் ஹஸீன் ஆகியோர் பிரதிகளை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர். இதேவேளை எதிர்வரும் 16ம் திகதி சென்னையில் கண்காட்சி வளாகத்தில் அறிமுக நிகழ்வு நடைபெற உள்ளது..
ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, ஈழத்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் மனிதர்களின் வாழ்வுப் பின்னணியை வைத்து எழுதப்பட்டது.
-வணக்கம் லண்டன் செய்தியாளர்