ஈழத்து எழுத்தாளர் தாமரைச்செல்வி எழுதிய உயிர்வாசம் நாவல் வெளியீட்டு விழா, தமிழகத்தில் சென்னையில் நந்தனத்தில் அமைந்துள்ள வைஎம்சி மைதானத்தில் அமைந்திருந்த புத்தக கண்காட்சியின் சிற்றரங்ககில் அண்மையில் இடம்பெற்றது.
நிக்வில் நூலினை தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கவின்மலர் வழங்க மேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி பெற்றுக் கொண்டார்.
கடந்த கார்த்திகை 23ம் திகதி கிளிநொச்சி பரந்தனில் முதலாவதாக “உயிர்வாசம்” வெளிவந்தது. சமகாலத்தில் இரண்டாவது பதிப்பு சென்னையில் புதிய அட்டை வடிவமைப்பில் வெளிவந்துள்ளது.
ஆவணப் பட இயக்குனர் சோமீதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நூல் அறிமுகத்தை கவிஞர் கருணாகரன் நிகழ்த்தினார். நூல் குறித்த உரைகளை கவின்மலர், எழுத்தாளர் விஜிதரன், அருண் கண்ணன், சிராஜூதீன் உள்ளிட்டோர் வழங்கினர்.
தமிழகத்தை சேர்ந்த பல்வேறு எழுத்தாளர்கள், வாசர்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில், ஈழத்தை சேர்ந்த படைப்பாளிகளான தமிழ்நதி, காலம் செல்வம், அகரமுதல்வன், வாசுமுருகவேல், வ. ஐ. சை ஜெயபாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
ஈழத்தின் கிளிநொச்சியை சேர்ந்த புகழ்பூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி, பச்சைவயல் கனவு, மற்றும் வன்னியாச்சி சிறுகதை தொகுப்பின் ஊடாக பரவலாக அறியப்பட்டவர். ஈழத்தின் பெண் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவராக கருதப்படும் இவர், 1973 முதல் சிறுகதைகளையும் புதினங்களையும் எழுதிவருகின்றார். இவருக்கு இலங்கையின் தேசிய சாகித்திய விருது கிடைத்துள்ளது.
சுமைகள், தாகம், வீதியெல்லாம் தோரணங்கள், பச்சை வயல் கனவு முதலிய நாவல்களையும் மழைக்கால இரவு, அழுவதற்கு நேரமில்லை, வன்னியாச்சி முதலிய சிறுகதை தொகுப்புக்களையும் எழுதியுள்ள தாமரைச்செல்வியின் உயிர்வாசம் நாவலானது, ஈழத்திலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு அகதிகளாக செல்லும் மனிதர்களின் வாழ்வுப் பின்னணியை வைத்து எழுதப்பட்டது.
-வணக்கம் லண்டன் செய்தியாளர்