~~~~~~~. ~~~~~~~~~~~~~~~~~~
சமகால தமிழீழ படைப்பாளியிடமிருந்து ஒரு படைப்பு வருகிறதென்றால் உடனடியாக அதை வாசித்துப் பார்க்க வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்கும் இயல்பாக வந்து விடுகிறது .மக்கள் அகதிகளாகி அல்லலுறச் செய்த போர் சூழலை, சிங்கள இனவாதத்தின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவது என்பது தமிழீழ படைப்பாளிகளின் தார்மீகக் கடமை…
அந்த வகையில் மு. புஷ்பராஜின் ஈழப்போரில் எனது சாட்சியங்கள். கட்டுரைத் தொகுப்பு விடுதலை இயக்கங்களின் வேறொரு முகத்தைக் காட்டியது.மேலும் அகரமுதல்வன்,தமிழ்நதி,ஷோபாசக்தி போன்ற படைப்பாளிகளின் படைப்புகளின் வழியே ஈழம் குறித்து அங்கு செயல்பட்ட விடுதலை இயக்கங்களின் சாதக பாதகங்களையும் குறித்து அறிய முடிகிறது..
தற்போது ஈழவாணியின் கொச்சிக்கட vs கும்மிடிபூண்டி நாவல், கடந்த ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பு கொச்சிக்கட உள்ளிட்ட பல இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு குறித்தும் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நிகழ்ந்த இனப் பேரழிவையும் non -லீனியர் முறையில் கானவி என்கிற பிரதான பெண்கதாபாத்திரத்தின் வழியே தொட்டுச் செல்கிறது.
2009 முடிவுக்கு வந்ததாக கருதப்படும் ஈழப் போருக்குப் பிறகு இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழர்களை அச்சத்தில் உறையவைக்கவும் ,வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட இஸ்லாமியர்கள் தமிழர்கள் மீது கொண்ட வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவர்களுக்குள் இணக்கமான சூழல் உருவாவதை தடுக்கவும் இலங்கை அரசப் படைகளே இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்கிற சந்தேகமும் நாவலில் பதிவாகியிருக்கிறது.
சிங்கள மற்றும் தமிழர்களுக்கிடையே நல்லுறவை பேணும் நோக்கம் என்கிற போர்வையில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ‘சமாதானப் பாலம், என்ற அமைப்பின் வழியே சிங்கள இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் தமிழ் இளைஞர்கள் மற்றும் இளைஞிகளை சமாதான சுற்றுலா வழியே சந்திக்க செய்து அவர்களுக்குள் காதல் உருவாவதன் மூலம் இனக்கலப்பு ஏற்படுவதன் வழியே அங்கு தமிழின அழிப்பை செய்யும் அரசாங்கத்தின் சூழ்ச்சியும் நாவலில் பதிவாகியிருக்கிறது.அங்கு சிங்கள இளைஞனான நுவனுக்கும் தமிழ் பெண்ணான கானவிக்கும் காதல் அரும்புகிறது. முகத்தில் எப்போதுமே இறுக்கத்தை தேக்கி வைத்திருக்கும் கண்ணன் என்னும் கதாபாத்திரம் கானவியை காதலிக்கிறான் அவன் விடுதலைபுலிகள் இயக்கத்தில் செய்திகள் பிரிவில் பணியாற்றுகிறான் என்பதே கானவிக்கு முள்ளிவாய்க்கால் யுத்த சமயத்தில்தான் தெரிய வருகிறது.முள்ளிவாய்கால் இறுதி போரிலிருந்து தப்பித்து ஆஸ்ரேலியாவுக்கு போவதாக போன் செய்து விட்டும் ஒரு மாதத்தில் போனில் அழைப்பதாக சொல்லிச் சென்றவன் மறுபடியும அழைக்கவே இல்லை.அவன் என்ன ஆனான் என்பதை குறித்து அறியாத கானவி கலங்கி நிற்கிறாள். கடந்த வருடத்தில் கூட ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் கடலோரப் படையினரிடம் அகப்பட்டுக் கொண்டதையும் இதோடு இணைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.
வாழ்க்கை என்பது நேர்கோட்டுத்தன்மை உடையதல்ல முள்ளிவாய்கால் பிரச்சனையை ஒட்டி கானவி சென்னைக்கு வருகிறாள். இறுதிப்போரில் அம்மா இறந்துப் போவதை அறிகிறாள்.அண்ணன் ஒருவன் ஏற்கனவே விடுதலைப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறான் இன்னொருவன் தாய் குண்டடிப் பட்டு இறந்ததும் விடுதலைக்கான போர் களத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். அம்மாவோடு கடைசி நிமிடங்கள் உடனிருந்த புனிதாவை சென்னையில் சந்திக்கிறாள். போர் சூழலில் கையிழந்து உயர்பிழைத்த புனிதா மேலும் சில தகவல்களைச் சொல்கிறாள். சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்படுவர்கள் தனியே முகாம்களில் அடைக்கப்பட்டு ஸ்லோபாயிசன் ஊசிப் போடப்பட்டு வெளியே அனுப்புவதும் அவர்கள் வெளியே வந்து ஒரு வருடகாலத்திற்குள் திடீர் திடீரென இறந்துப் போவதும் குறித்து சொல்லும் தகவல்கள் அதிர்ச்சி அளித்தது.
ஜோசப் கேம் .இலங்கை பூராவும் வாழக்கூடிய தமிழர்கள் தெரிந்திருக்கும் இடம்.இங்கு சந்தேகத்தின் பெயரில் பிடிக்கப்பட்டு வருபவர்களும், அரச குற்றவாளிகள் எனப்படுவோரையும் அடைத்து வைக்கும் சித்திரவதைச் செய்யும் முகாம்.
தமிழ்நாட்டில் உள்ள அகதிமுகாமில் அகதிகள் குறித்து ஒரு டாக்குமெண்டரி எடுக்கும் போது பூமணி ஆச்சியை சந்திக்கிறாள் கானவி . தொடர்ந்து பூமணி ஆச்சியோடுள்ள உறவில் குழந்தை யாழினியோடு நீண்ட ஸ்நேகம் உருவாகிறது . ஒரு பொழுது யாழினியை இலங்கையில் இருக்கும் அவள் அம்மா லெஷ்மியிடம் ஒப்படைப்பதற்காக கொழும்பு வரும் போது கொச்சிக்கட அந்தோணியார் கோவிலுக்கு பிராத்தனைக்காக உள்ளே செல்லும் பூமணி ஆச்சி குண்டு வெடிப்பில் கொல்லப்படுகிறாள்.
இப்போது குழந்தையை அவள் அம்மாவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு கானவியிடம் வந்துசேர்கிறது. லெஷ்மி இலங்கையில் உள்ள மடுவை என்ற இடத்தில் உள்ள அகதிகள் முகாமில் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் தன்னை இணைத்துக் கொண்டவள் முடிவில் கானவி யாழினியிடம் கொண்ட பேரன்பை பூமணி ஆச்சி லஷ்மியிடம் சொல்லியிருப்பதால் குழந்தையை கானவியிடமே ஒப்படைக்கிறாள் லெஷ்சுமி.அவள் பயணப்பட்டு வந்த நான்கு சக்கரவாகனத்தின் ஓட்டுனர் முன்பு சமாதான பாலம் நிகழ்வில் வலுகட்டாயமாக கானவியின் மீது காதல் கொண்ட சிங்கள இளைஞன் நுகன். முடிவில் யாழினியோடு வண்டியில் பயணப்படும் போது நுகன் வண்டியில் ஒரு பாடலை ஓட விடுகிறான் கானவி கண்மூடியப்படியே பாடலைக் கேட்கிறாள்.
தன் கண்முன்னாலே கொத்துக் கொத்தாக தன் இனம் கொல்லப்படுவதை கண்ட மனிதர்கள் உயிர் வாழ, இனமற்ற இனமாக மாறுவதைத் தவிர வேறு வழி இல்லை போலும் .அனாதையாக்கப்பட்ட யாழினியை தன்மகளாக பாவிக்கவும் சிங்கள இளைஞனை தன் வாழ்க்கைத் துணையாகவும் ஏற்றுக் கொள்ளவும் ஒரு மன நிலையை போர்சூழல் உருவாக்கி விட்டது போல் நாவலின் முடிவு வருகிறது. உண்மையில் ஈழ மக்களின் மனநிலை எப்படியிருக்கிறது? தனி ஈழம் என்கிற கனவு தகர்ந்துக் கொண்டு வருகிறதா?
ஒரு போர் சூழல் மக்களை அகதிகளாக புலம் பெயர்த்துகிறது. வழமையான எல்லா செயல்பாடுகளையும் கலைத்துப் போடுகிறது.நிலையற்ற திருமண உறவுகளுக்குள் நகர்த்துகிறது .அது வரையிலும் புனிதமாக கருதிவந்த எல்லா மதிப்பீடுகளின் மீதும் கேள்வி எழுப்புகிறது. கடவுளின் இடத்தை காலியாக்கி புதிய கோட்பாடுகளின் பிறப்பிடமாக மாறுகிறது.
இந்நாவல் விவாதங்களை கிளப்பும் பல விஷயங்களை அடிக் கோடிட்டு கடந்துச் சென்றாலும் வலுவான ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை குறுக்கும் நெடுக்குமாக விசாரணை செய்யும் வாய்ப்பு இருந்தும் அதை தவறவிட்டிருக்கிறார் நாவலாசிரியர்.மேலும் மொழியை சற்று கூர்மைப் படுத்தி இருக்க வேண்டும் .வாசகனுக்கு விளங்காமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் பல இடங்களில் விளக்கம் கொடுக்கிறார்.அது அவசியமில்லை என்பது என் எண்ணம்.
நாவலில் பயன்படுத்தும் பல வார்த்தைகள் குமரிமாவட்டத்தில் மக்களிடையே புழங்கு மொழியாக இருப்பவை.
–கிருஷ்ணகோபாலன்