சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தொடர்கின்றது என்பது இன்னும் அதிர்ச்சிகரமானது.
அண்மையில் முகநூலில் புலி எதிர்ப்பு எழுத்தாளர் ஒருவர், புலிப் பாணி இலக்கியம் தற்போது வளர்ச்சியடைவதாக வருத்தத்துடன் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதற்கு இன்னொரு முகநூல் பதிவாளர், நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். புலி எதிர்ப்பு இலக்கியம் உங்களுக்கு இனிக்கிறது. ஆனால் புலிப்பாணி இலக்கியம்தான் கசக்கிறதா? என்று.
புலி எதிர்ப்பு இலக்கியத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளையும் வரலாறு முழுவதும் அழித்தததுதான். அல்லது தமிழ் இனத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட இலங்கை அரசுடன் இணைந்து இனத்தை வேட்டடை ஆடியதுதான்.
விமர்சனம் என்பது ஆக்கபூர்வமானது. அது ஒரு இயக்கத்தையும் போராட்டத்தையும் வளம்படுத்த வேண்டும். ஆனால் புலி எதிர்ப்பாளர்கள் விமர்சனம் என்ற போர்வையில், காட்டிக்கொடுப்பையும் போராட்ட அழிப்பையுமே செய்தார்கள். இது புலி எதிர்ப்பு இயக்கத்தினருக்கு மாத்திரமின்றி புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும்.
புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள், தமது கவிதைகள், கதைகள் ஊடாக விடுதலைப் புலிப் போராளிகளை மிகவும் கொடுமையானவர்களாக சித்திரித்துள்ளனர். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் போராளிகள் தெய்வங்களைப் போல மதிக்கப்படுகிறார்கள். மாவீரர்களுக்காக ஈழ மக்கள் எப்படி உருகி நினைவேந்துகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. உண்மையான நிலமை அப்படியிருக்க ஏன் போராளிகளை புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள் கொடுமையாக சித்திரிக்கிறார்கள்?
அப்படியான சித்திரிப்புக்களை ஆளும் அரசாங்கங்களே மேற்கொள்ளுகின்றன. அரச தலைவர்கள், அமைச்சர்களின் போராளிகள் பற்றிய சித்திரிப்புக்கள்தான், புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் கவிதைகளிலும் கதைகளிலும் வருகின்றன. அத்துடன் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளின் நேர்காணல்களும் வாக்குமூலங்களும் இலங்கை அரச ஊடகங்களில் போராட்டத்திற்கு எதிரான மிக முக்கியமான ஆவணங்களாக வெளியிடப்படுவதையும் பாத்திருக்கிறோம்.
வெளிநாடுகளில் வாழும் புலி எதிர்ப்பு இலக்கியவாதிகள் சிலர், முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு வந்து இலங்கை அரசின் அரச தொலைக்காட்சியில் தோன்றி, போராட்டத்திற்கும் புலிகளுக்கும் எதிராக பேட்டிகளை வழங்கினார்கள். அத்துடன் இலங்கை அரசு நீதியான போரை நடாத்தி மக்களை முள்வேலி முகாங்களில் பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினார்கள்.
இப்படியெல்லாம் இலங்கை அரசிற்கு எதற்காக இந்த இலக்கியவாதிகள் துணைபோகின்றனர்? அரசின் அங்கீகாத்தைப் பெறவும் விருதுகளையும் பரிசில்களையும் பெறவும் இவ்வாறு நடந்துகொள்ளுகின்றனர். மிகப் பெரிய இன அழிப்பின் மத்தியிலும் ஈழத்தில் சில எழுத்தாளர்கள், உண்மையை உரக்கப் பேசுகின்றனர். சிலர் மௌனமாகவேனும் நீதியாக வாழுகின்றனர். சிலர் அங்கும் அரசுக்கு துணைபோய், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்.
2009ஆம் ஆண்டு வரையில், விடுதலைப் போராட்டத்தை புகழ்ந்து, விடுதலைப் போராளிகளின் முகாங்களில் உண்டு உறங்கிவிட்டு இன்றைக்கு அரசின் முகாங்களில் எலும்புகளை கடித்தபடி புலிகளை கொச்சைப்படுத்துகின்றனர். 2009இற்கு முன்னர் ஒரு முகம். 2009இற்கு பின்னர் ஒரு முகம். 2009இற்கு முன்னர் ஒரு கதை. 2009இற்கு பின்னர் ஒரு கதை. இப்படி துரோகம் இழைக்கின்ற பச்சோந்திகள், உண்மையான இலக்கியவாதிகளாக ஒருபோதும் இருக்க முடியாது.
புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளுக்கு இலங்கை அரசுக்கு துணைபோவதுடன் இந்திய இலக்கியச் சந்தையில் தமது புத்தகங்களை வெளியிடவும் இந்திய ஆதிக்க எழுத்தாளர்களின் ஆதரவை பெறுவதும் இன்னொரு இலக்கு. தமிழகத்தில் இருந்தபடி, தமிழ் நாட்டுக்கு எதிராகவும் இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் ஆதரவாகவும் செயற்படும் இலக்கியவாதிகளே இவர்களுக்கு ஆசான்களாக இருக்கின்றனர்.
அந்த அநீதி எழுத்தாளர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்றால், பாராட்டை பெற வேண்டும் என்றால், விடுதலைப் புலிகளை பிழையானவர்களாக சித்திரிக்க வேண்டும் என்பதே அவர்களின் தேவை. லட்சோப லட்சம் மக்கள் நேசிக்கும் தெய்வங்களை இகழ்ந்து பாராட்டையும் பணத்தையும் பரிசிலையும் பெறுவது பெரும் நோயல்லவா?
இப்படி காட்டிக் கொடுத்தே ஒரு போராட்டத்தையும் இனத்தையும் அழித்த இவர்கள், இன்னமும் அடங்கவில்லை என்பது எவ்வளவு கொடுமையானது? பாலச்சந்திரனின் மரணத்தை கண்டு சிரிப்பதும் இசைப்பிரியாவுக்கு இரங்க மறுப்பதும் மாவீரர்களுக்காக வீழ்ந்து புலம்பும் தாய்மாரை கிண்டலடிப்பதும் மிகப் பெரிய நோய் மாத்திரமல்ல. மனித மாண்புக்கு புறம்பான மிருகத்தனமான செயல். அப்படி மிருக மனம் படைத்தவர்களால் உண்மையான இலக்கியங்களை படைக்க முடியாது.
மலையவன்