செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்தின் மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

2 minutes read

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்.

இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார்.

இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது பிரிவுத் துயர் தொடர்பில் எழுத்தாளர் ஞானசேகரன் எழுதிய பதிவு

திருமதி பத்மா சோமகாந்தன் எமது உறவினர். அவர் அமரத்துவம் அடைந்த அன்று காலையும் அரைமணிநேரம் அவருடன் தொலைபேசியில் கதைத்தேன். அவரது பிரவு எமக்குப் பெரிதும் அதிர்ச்சியைத்தருகிறது. அவர் சிரேஷ்ட தராதர வகுப்பில் படிக்கும்போது எஸ்.டி. சிவநாயகத்தை ஆசிரியராகக்கொண்ட சுதந்திரன் பத்திரிகை 1951இல் ஒரு சிறுகதைப் போட்டியை நடத்தியது. இதுவே இலங்கையின் முதலாவது சிறுகதைப் போட்டியாகக் கருதப்படுகிறது. அந்தப்போட்டிக்கு இவர் ‘இரத்தபாசம்’ என்ற கதையை அனுப்பிவைத்தார். அக்கதை முதற்பரிசினைப் பெற்றுக் கொண்டது. அந்தப் போட்டியில் இவர் ‘புதுமைப்பிரியை’ என்ற புனைபெயரில் பங்குபற்றியிருந்தார். பரிசுபெற்ற முதற்சிறு கதைமூலம் படைப்பு இலக்கிய உலகில் பிவேசித்தவர் பத்மா. இந்தப்போட்டியில் டானியல் இரண்டாம் பரிசினையும் டொமினிக் ஜீவா மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

கடவுளின் பூக்கள், வேள்வி மலர்கள், புதிய வார்ப்புகள், கரும்பலகைக்காப்பியங்கள், இற்றைத்திங்கள் முதலான சிறுகதைத்தொகுப்பு களை வரவாக்கியிருக்கும் இவர், இந்நூல்களுக்காக தமிழ் நாடு லில்லி தேவசிகாமணி பரிசு, சென்னை இந்து நாளிதழின் பாராட்டு, சார்க் மகளிர் சங்கத்தின் பரிசு, வடக்கு – கிழக்கு மாகாண அமைச்சின் சாகித்திய பரிசு பெற்றிருப்பவர்.

இவைதவிர ‘ஈழத்து மாண்புறு மகளிர்’ பற்றிய நூலை 2002இல் எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்து தமிழ்ப்பெண் ஆளுமைகள் என்ற நூலையும் வரவாக்கியிருக்கிறார். சிறுவர் இலக்கியமும் படைத்திருக்கும் பத்மா, சிறுவர்களுக்காக ‘அனுமான் கதை’ என்ற நூலையும் தந்திருக்கிறார். உலகப் புகழ்பெற்ற சுவாமி சின்மயானந்தரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார். திருமதி பத்மா ஒரு பெண்ணியச் சிந்தனையாளர் பெண்ணின் குரல் சஞ்சிகைக்கு ஆசிரியராகப்பணிபுரிந்துள்ளார். ஊடகத்துறையில் கடமையாற்றும் பெண்களின் ஆளுமையை வலுப்படுத்தவும் அவர்களின் நன்மைகளைக் கவனிப்பதற்குமாக இயங்கிய ‘ஊடறு’ என்ற அமைக்குத் தலைமைதாங்கி சிலகாலம் வழிநடத்தியுள்ளார்.

திருமதி பத்மா ஆங்கிலத்திலும் எழுதும் திறன்வாய்ந்தவர். உலகெங்கும் பரவிவாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் தமிழ் மொழியை வாசிக்கத் தெரியாமல் இருக்கிறார்கள் அவர்கள் தமிழ்ப் பண்பாட்டையும் சமய நெறிகளையுமாவது தெரிந்திருக்கவேண்டும் எனக்கருதி அவர்களுக்காக Stories from Hindu Mythology என்ற நூலை எழுதியிருக்கிறார். அவரது ஆத்மா சாந்தி அடைவதாக. கீழே உள்ள படம் ஆசி.கந்தராஜாவின் நூல் வௌியீட்டில் பத்மா மகிழ்ச்சியாக இருந்த தருணம். இப்படத்தை ஆசி கந்தராஜா இன்று மின் அஞ்சலில் அனுப்பி யிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More