சிட்னியில் வெளியாகும் சபேசனின் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் :
——————————————————-
தமிழ்த் தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் எழுதிய “காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” இவ்வாரம் (05/11/2022) சனிக்கிழமை ‘சிட்னி இலக்கியச் சந்திப்பு’ நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு மெல்பேணில் செயற்பட்ட தமிழ்த்தேசியபற்றாளரே சபேசன் சண்முகம். 3 C R தமிழ்க்குரல் வானொலியில் தங்கு தடையின்றி, வாரம்தோறும் அரசியல் விமர்சன கட்டுரைகளை எழுதி தனது குரலிலேயே ஒலிபரப்பியதை அவுஸ்ரேலியாவில் யாரும் மறக்க மாட்டார்கள்.
தமிழ்த்தேசியத்தை நிலைப்படுத்துவது எனின் தமிழ்மொழியை வளர்த்து, தமிழ்ப் பண்பாட்டை பின்பற்றி வளரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி முனைப்பாக செயற்பட்ட சபேசன் சண்முகம் 2020 மே 29இல் தன் வாழ் நாள் கனவுகளுடன் மீளாத்துயில் கொண்டார்.
நீராவியடிதந்ததமிழ்மகன்:
யாழ்ப்பாணம், நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்ஷ்மி தம்பதியரின் மூத்த புதல்வனாகப் பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ஆஸ்திரேலியா மெல்பனில் மறையும் வரை , பல்வேறு தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வந்தார். தாயக கனவுகளுடன் மீளாத்துயில் கொள்ளும் சபேசனை நினைவு கூறுவது காலக் கடமையாகும்
இளையோர் மத்தியில் தமிழ்மொழி மீதான பற்றுதலை ஏற்படுத்துவதிலும் தமிழ்த்தேசிய ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டவர். அத்துடன் தமிழ்மொழி முறையில் பாரம்பரிய திருமணங்களை நடத்துவதிலும் முன்னின்றவர்.
யாழ்இந்துவின்ஒப்பற்றதிறமையாளன்:
யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பேனுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் புனர்வாழ்வுக்கழகம் முதலானவற்றில் அங்கம் வகித்தவர். தமிழர் வாழ்வியலோடு தொடர்புபட்ட நிகழ்வுகள் பற்றி, ஆய்வுநோக்கில் தகவல்களை சேகரித்து அதனை முழுமையான தகவற்பெட்டகமாக மக்கள் முன்கொண்டுசெல்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.
தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகவும், தென்துருவ நாடுகளின் பரப்புரைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்தார். மெல்பேணில் இருந்து முழங்கிய தமிழ்க்குரல் (3CR) வானொலி ஊடாக 28 ஆண்டுகளுக்கு மேலாக, தனது தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை அனைவரும் கவரும் விதத்தில் வெளிப்படுத்தியும் வந்தார்.
தமிழ்த்தேசியப்பற்றாளர்சபேசன்சண்முகம் :
உரிமைப் போராட்டத்தின் மீது அளவற்ற
பற்றோடு செயற்பட்ட சபேசன் மிகவும் ஆக்கபூர்வமான அரசியல் விடுதலை போராட்டம் தொடர்பான கட்டுரைகளை எழுதி, அனைவர் மனத்திலும் இடம்பிடித்தவர்.
அவ்வாறு எழுதப்பட்ட கட்டுரைகளை தொகுத்து நூலாக்கவேண்டும் என்ற எண்ணம் கைகூட முன்னர் எதிர்பாராமல் உடல்நலம் பாதிப்புற்று மறைந்துவிட்டார்.
தமிழர் மருத்துவ நிதியத்துடன் இணைந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், வானொலி நிதிசேகரிப்பு (Radiothon) நிகழ்வை ஒழுங்குபடுத்திக்கொடுத்து, தாயக மக்களின் மேம்பாடுகளுக்காக சபேசன் பேருதவி புரிந்தவர். தனது அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தவர்களுடனும் இனிமையான புன்முறுவலுடன் பழகி தனது நிலைப்பாடுகளை உறுதியாக முன்வைப்பவராக விளங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காற்றில்தவழ்ந்தசிந்தனைகள் :
தனது நூல் வெளியீடு தாயக மண்ணில் நிகழ வேண்டும் என எண்ணியிருந்தார். எனினும் சபேசனின் அந்தக் கனவு அப்போது நனவாகவில்லை. அவரின் நூல் வெளியீடு மட்டுமல்ல இதர கனவுகளும் நனவாகாமல் திடீரென2020இல் மறைந்தது தீராத சோகம்தான்.
தனது வலிமைமிகு எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் கள உண்மைகளை மக்கள் முன்கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்தவர்.
சிட்னியில்நூல்அறிமுகம்:
அவரது மறைவுக்குப்பின்னர் வெளியாகிய “காற்றில் தவழ்ந்த சிந்தனைகள்” நூல் ஏற்கனவே மெல்பேணில் வெளியிடப்பட்டது. சிட்னியில் இந்நூலைப் பற்றிய அனுபவப் பகிர்வும் வாசிப்பும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை Toongabbie Community Centre மண்டபத்தில் நடைபெற உள்ளது.
தாயகத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பெரும்போரில் பேரழிவை எமது மக்கள் எதிர்கொண்டபோது, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி, கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் , நீண்ட பயணங்களை மேற்கொண்டு, பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பங்குகொண்டு சபேசன் சண்முகம் செயற்பட்டிருந்தார்.
மாற்றம்வரும்எனஎதிர்பார்த்தவர் :
ஈழத்தில் முப்பது ஆண்டு காலமாக நீடித்திருந்த போர் 2009 ஆம் ஆண்டு மேமாதம் மௌனித்த போது, அக்காலத்தில் நேர்ந்த உயிரிழப்புகளினால்
பெரிதும் கலங்கி, மனவுளைச்சலுக்கும் ஆளாகியிருந்தவர் சபேசன். தமிழ் மக்கள் சந்தித்த முள்ளிவாய்க்கால் பேரழிவால், மிகவும் மனமுடைந்துபோன அவர், அதனைத் தொடர்ந்த நாட்களில் மனரீதியாக அதன் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாதவராக மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். “ மாற்றம் வரும் என எதிர்பார்த்தேன், ஏமாற்றம்தான் மிஞ்சியது, எஞ்சியது “ என்று அவர் மறைவுக்கு முன்னர் கூட சொல்லிக்கொண்டிருந்தார் என்பதை பலரும் அறிவர்.
வன்னி பெரு நிலப்பரப்பில் அவர் உளமாற நேசித்த மக்கள், தமிழ்நாட்டில் அவர் நெருங்கிப்பழகிய பல தமிழ்த்தேசிய உணர்வாளர்கள், மற்றும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பெருந்தொகையானோரைக்கொண்ட வாசகர்களையும் வானொலி நேயர்களையும் சபேசன் பெற்றிருந்தவர் என்பது உண்மையே.
மெல்பேணில் இருந்து தமிழ் முழங்கிய 3 C R தமிழ்க்குரல் வானொலியில் கால் நூற்றாண்டு காலம் கங்காரு நாட்டின் காற்றலைகளில் ஓங்கி ஒலித்த அவரின் குரல் ஓய்ந்துள்ளது. தமிழ ஊடகவியலாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய தமிழ்த் தேசிய பற்றாளர் சபேசன் சண்முகம்
இழப்பு ஈடு செய்யப்பட முடியாத இழப்பாகும்.
ஆக்கியோன் – ஐங்கரன் விக்கினேஸ்வரா