தமிழக அரசுக்கு ஓரு வேண்டுகோள்
நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமி அவர்களின் நூற்றாண்டு நினைவு நாள்.
இந்த நினைவு நாளை சிறப்பிக்கும் வகையில் நண்பர் தோழர் பேராசிரியர்.கி.பார்த்திபராஜா அவர்கள் சுவாமிகள் பிறந்த மண்ணிலிருந்து சுவாமிகளின் நினைவிடமான பாண்டிச்சேரி கருவடிக் குப்பம் நோக்கி ஒரு பயணத்தை மேற் கொண்டுள்ளார்.நாளை அது ஒரு நினைவுக் கொண்டாட்டத்துடன் நிறைவுறுகிறது அதே வேளை நூற்றாண்டு நினைவை ஒரு பெரிய அளவில் வருகின்ற தை மாசம் கொண்டாடுவதற்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார் அவருக்கு துணையாக நாடகர் யாக்கா வேலாயுதமும் ஈடுபட்டுள்ளார் இருவருக்கும் எனது வாழ்த்துகள்.
பாண்டிச்சேரியில் நடுவன் ஒன்றிய அரசுப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்காதாஸ் நிகழ் கலைப் பள்ளி அமைந்துள்ளது.கடந்த முப்பது வருசங்களுக்கு மேலாக அங்கு நாடக அரங்கியலுக்கான உயர் பட்டப் படிப்புகள் மேற்கொள்ளப் படுகின்றன .
இன்று திராவிட மாடல் அரசான தமிழக அரசு மிகச் சிறப்பாக பல துறைகளிலும் சாதனை படைத்து வருகிறது திராவிட இயக்கத்தின் தூண்களாக விளங்கிய பேரறிஞர் அண்ணாவும் ,கலைஞர் கருணாநிதியும் நாடகங்களின் மூலமே மக்கள் மத்தியில் திராவிடக் கொள்கைகளை கொண்டு சேர்த்தார்கள் .தமிழ் நாடக அரங்கியல் வரலாற்றில் அந்த வகை நாட்கங்கள் அரசியல் நையாண்டியும் கவன ஈர்ப்பு மிக்கதாயும் அமைந்தது .தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திராவிடக் கொள்கையின் பிரசார சாதனமாக நாடகங்கள் அமைந்தன.
தமிழ் மரபில் நாடகம் என்பது சங்க இலக்கியம் முதல் உயிர்ப்புள்ள ஒரு கலையாக இன்றுவரை தொடர்கின்றது பல் வகை கூத்துகள் பற்றி சிலப்பதிகாரம் பேசுகின்ற மரபில் அக் கூத்துக்களின் தொடர்ச்சி நீட்சியை நாம் இன்று வரை காண்கின்றோம்.
சுவாமி சங்காதாஸ் அவர்களின் இசை நாடக மரபு இன்றும் கிராமங்களில் ஆடப்படும் ஒரு அழகியல் மரபாக கடல் கடந்து ஈழத்திலும் தொடர்வதை நாம் அறிவொம்.
தமிழ் நாட்டில் இசைக்கு ஒரு பல்கலைக்கழகம் உண்டு அது போல நாடகத்துக்கான ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும்.அதில் கூத்து மற்றும் கிராமியக் கலைகள் பாடத்திட்டத்தில் இணைத்து தமிழ் கலை மரபை உயிர்ப்புள்ள உயர் கலை மரபாக தொடர வேண்டும்.
பால சுகுமாரன்