காட்சி மொழி – சினிமாவிற்கென்று இலங்கையிலிருந்து வந்திருக்கும் காலாண்டிதழ். கூடுதல் சிறப்பு என்னவென்றால் காட்சி மொழி இலங்கையிலிருந்து வெளிவரும் முதல் சினிமா இதழ். க்ளோபல் விஷன் இந்த பத்திரிக்கையை கொண்டு வந்துள்ளது. நண்பர் மாரி.மகேந்திரன் இந்த பத்திரிக்கையின் ஆசிரியர். மாரி.மகேந்திரன் மிகத்தீவிரமான சினிமா ரசிகர். உலகின் தலை சிறந்த படங்களை தேடிப்பார்ப்பதிலும், படைப்பாளிகளை தேடி சந்திக்கவும், முடியாதபட்சத்தில் தொலைப்பேசியில் உரையாடவும் சளைக்காதவர். பார்த்து ரசித்ததின் படைப்பாளியை மனதார பாராட்டும் மனம் கொண்டவர். ஒரு சிறந்தப்படம் கவனிக்கப்படாமல் போகும் போது, அந்த படைப்பாளியை விடவும் சோர்வையும், கோபமும் கொள்பவர். இத்தனை ரசனை கொண்டிருக்கும் மாரி.மகேந்திரன் கொண்டு வரும் பத்திரிக்கை என்பதாலேயே பத்திரிக்கை விற்பனைக்கு வந்துவிட்டது என்ற செய்தி வந்ததும் தேடிப்போய் வாங்கி படித்தேன். காட்சி மொழி – நமக்கான சினிமாவைத்தேடி என்றுதான் பத்திரிக்கையின் முதல் பக்கம் புத்தகத்திற்குள் அழைத்தது. முதல் பக்கத்திலேயே “ஒரு நல்ல திரைப்படத்தால் வாழ்க்கையிலிருந்து தனித்து பிரிந்து நிற்க இயலாது, அது மக்களுடைய இன்ப துன்பங்களின் துடிப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கும். அதனுடைய வேர்கள் மக்களிடம் தான் இருக்கும்” என்ற மகத்தான கலைஞன் ரித்விக் கட்டக்கின் வாக்குமூலத்தோடுதான் நம்மை இந்த பத்திரிக்கை தன் வாசக அனுபவக் கதவை நமக்காக திறக்கிறது.
இந்த இதழில் முகேஷ் சுப்ரமணியம் எழுதிய “க்ளோஸ்-அப்” என்ற கட்டுரை திரையில் குளோஸப் ஷாட்டுகளின் பிரதிநித்துவம், அது வெளிப்படுத்தும் அழகியல், ஒரு திரைப்படத்தில் க்ளோஸப் ஷாட்டின் தேவை, அது எங்கு எப்படி பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தப்பட்டிருக்கிறது, உலக சினிமாவில் மாஸ்ட்டர்ஸ் என நாம் மதிக்கும் மரியாதைக்குரிய இயக்குனர்கள் க்ளோஸப்பை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை டெக்னிக்கலாகவும், கருத்தியல் ரீதியாகவும் விரிவாக அலசுகின்றது.
அஜயன் பாலாவின் ”மொகல் ஈ ஆஸம் – திரைக்கு பின்னால் நடந்த மகத்தான காதல்” என்ற கட்டுரை, திலீப்குமாருக்கும், மதுபாலவுக்குமான கவித்துமான காதலை அபாரமாக சொல்கின்றது. ஏற்கனவே படித்த தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும் அஜயன் பாலாவின் நடை இந்த சம்பவத்தை இப்பொழுதுதான் புதிதாக படிப்பது போலவும், தெரிந்து கொள்வது போலவும் ஈர்க்கின்றது.
இந்த இதழில் இருக்கும் இன்னும் ஒரு முக்கியமான கட்டுரை, சினிமா ஆர்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரையும் கூட, முருகபூபதி எழுதியிருக்கும் ”தமிழ் சினிமாவும், இலக்கியமும், ரசனையும்” என்ற கட்டுரை. இலக்கிய பிரதிகளை சினிமாவாக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களையும் சம்ரசங்களையும் நாம் அறிந்த, ரசித்த சினிமாக்களை மேற்கோள் காட்டி எளிதாகவும் ரசனையாகவும் விளக்கியுள்ளார். இந்த இதழில் மூலம் நமக்கு வாசிக்க கிடைத்திருக்கும் முக்கியமான கட்டுரை என இதைச் சொல்லுவேன்.
மலையாள சினிமாவின் புரட்சிகர தலைமுறை என்ற பெயரில் கா.இளம்பரிதி எழுதியிருக்கும் இந்த கட்டுரை மூலம் தான் மலையான சினிமாவின் மகத்தான் இயக்குனர்களில் ஒருவரான, அதிகம் அறியப்படாத பக்கர் பற்றி தெரிந்து கொண்டேன். கட்டுரை வாசிக்க வாசிக்க பக்கரை பற்றிய பிரமிப்பில் அமிழ்ந்த வேளையில் இத்தனை நாள் இவரைப்பற்றி கொஞ்சமும் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேனே என்ற மனக்குற்ற சஞ்சலமும் உண்டானது.
இவைகளோடு லூமியர் சகோதர்கள் பற்றி மார்க்ஸ் பிரபாகர் எழுதியிருக்கும் கட்டுரை, துருக்கி இயக்குனர் இல்மஸ் குனே பற்றி ஹவி எழுதியிருக்கும் கட்டுரை என பத்திரிக்கை மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. உலக சினிமா என்றில்லை சினிமா ஆர்வலர்களும், சினிமாவை தொழில் முறையாக கொண்டவர்களுக்கும் இந்த பத்திரிக்கை ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் என்பது உண்மை.
வாழ்த்துகள் மாரி.மகேந்திரன் ஒரு மிகச்சிறந்த உழைப்பை இதற்காக கொடுத்திருக்கிறீர்கள். இந்த பத்திரிக்கையை கொண்டு வருவதற்காக கடந்த நான்கைந்து மாதங்கள் நீங்கள் எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் உழைப்பின் படி இதழ் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. அதற்கான அங்கீகாரத்தையும், பலனையும் நீங்கள் பெறுவீர்கள். வரும் நாட்களில் காட்சிமொழிக்கென என்னால் முடிந்த பங்களிப்புகளையும் அளிப்பேன். வாழ்த்துகள்.
ஜோசப் செல்வராஜ்