கட்டுரை: வதிலைபிரபா
“தமிழ்ச் சிற்றிதழ்கள் – எழுச்சியும் வீழ்ச்சியும்” தொடரின் இரண்டாம் பாகத்தில் .. “சிற்றிதழ் மோசடிகள்” மற்றும் “துட்டிலக்கியம்” எனும் இரண்டு வார்த்தைகளைக் குறிப்பிட்டிருந்தேன்.
இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் முன்னோட்டமாக அமைந்தது 1996 ஜூன் “மகாகவி” இதழில் வெளியான “வட்டமேசை” எனும் விவாதப் பகுதிதான்.
- சின்னக் குமுதங்கள்
- பெரிய கவிஞர்கள்
இவை இரண்டும் இதழாளர்களையும், படைப்பாளர்களையும் ஆட்டிப்படைக்கும் வைரசாக இருக்கிறதே எனக் கவிஞர் இலக்குமிகுமார ஞானதிரவியம் அவர்களைக் கேட்க, விவாதம் தொடங்கியது. கவிஞர் இகுஞாதி “படைப்புத் தேர்வும் இதழாளர்களும்” என்று தம் விவாதப் பகுதியைத் தொடங்கினார்.
“தமிழுக்கும் மக்களுக்கும் அசலான அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டுள்ள கவிஞர்கள் / இலக்கிய கர்த்தாக்கள் வெகு சிலரே. அவர்களை நாம் ‘பெரிய கவிஞர்கள்’ ‘பெரிய படைப்பாளிகள்’ என்று கொள்ள வேண்டியதில்லைதான். ஆனால் அவர்கள் ‘முன்னெடுத்தவர்கள்’ என்ற அடிப்படையில் அவர்களை ‘மூத்த படைப்பாளிகள்’ எனக் கொள்ளலாம்”. இதுதான் தெளிவான பார்வை. பொதுவாகவே தரத்தை’ நிர்ணயிக்கும் தகுதி ஒவ்வொரு இதழாளனுக்கும் வரவேண்டும். அதற்கு ஆழ்ந்த வாசிப்புப் பழக்கமும், ஈடுபாடும், தனக்கென ஒரு ‘பார்வையும்’ வாய்க்கப்பெற வேண்டும். இல்லையேல் ‘அறியப்பட்ட பெயர்களுக்காகக் கவிதைகளை / படைப்புகளை வெளியிடும் நிலை வந்து சேரும்”.
“இதழ்கள், தங்கள் பகுதி படைப்பாளர்களை மட்டும் பயன் கொள்வது என்று ஒரு வகையும், மாநிலம் முழுவதுமுள்ள படைப்பாளர்களைப் பயன்கொள்வது எனவும் இரண்டு வகைப் போக்குகளைக் கொண்டு இயங்குகின்றன. இது சரியான பார்வையில்லை. இதழுக்கென்று ஒரு ‘பார்வை / இலக்கு’ இருந்தால் முழு சமூகத்தை மையமாக வைத்து, ஏன் உலக அரங்கை மையமாக வைத்து படைப்பாளர்களையும், படைப்பு களையும் பயன் கொள்ளலாம். இது தான் இன்றைய தேவை. படைப்புகள் சரியாக இல்லாதபோது படைப்பாளியின் முகதாட்சன்யத்துக்காக வெளியிடுதலில் எந்தப் பலனும் இல்லை. நண்பர்கள், இளைஞர்கள் அச்சேறும் ஆசையில் தந்தாலோ, அறியப்பட்டவர்கள் அல்லது மூத்தவர்கள் ‘கடனே’ என்று தந்தாலோ அச்சேற்ற வேண்டிய அவசியமில்லை. படைப்பின் தரம் மட்டுமே ‘தேர்வின் தன்மையை’ நிர்ணயிக்க வேண்டும்.”
இந்த விவாதத்தின் தொடர்ச்சியாக “ஒரு உலகளாவிய பார்வையும் மீண்டும் மனித மதிப்பீடுகளை வென்றெடுக்கும் லட்சியமும் கொண்டு ஒரு குழுவோ, இதழோ, அமைப்போ, இயக்கமோ இயங்கினால் அது / அவை இச்சூழலில் ஒரு ‘தேவையான’ அமைப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்” என்று விவாதத்தை நிறைவு செய்தார்.
“ஒரு மனிதனுக்கு | அமைப்பிற்கு ஒரு தெளிவு வந்து விட்டால், அதாவது ‘இலக்கு’ பற்றிய தெளிவு வந்துவிட்டால் மேற்படி குழப்பங்கள் தேவையற்றதாகிவிடும். இல்லையேல் சிற்றிதழ்களை ஏணியாகப் பயன்படுத்தி பெரிய ஊடகங்களுள் நுழையும் அபாயம் நேர்ந்துவிடும்” என்ற எச்சரிக்கையும் இருந்தது..
சிற்றிதழ்கள் மாற்றுக் கலாச்சாரத்தை நிறுவத்தான் பயன்பட வேண்டும் என்பது இகுஞாதியின் கருத்து. அதை “விசமுள்ள பாம்புகள் ஒரு அங்குலம் இருந்தால் என்ன? ஒன்பது மீட்டர் நீளம் இருந்தால் என்ன? படைப்பாளிகளும், சிற்றிதழ் பெருமக்களும் இதனைக் கரிசனத்துடன் யோசிக்க வேண்டும்.” என்று வேண்டுகோளும் வைத்தார்.
1990 – 2000 களில் புற்றீசலாய் வெளிவந்த இதழ்கள் பெரும்பாலும் சின்னக் குமுதங்களாகவே இருந்தன. இலக்கு நழுவாத காத்திரத்தோடு வெளிவந்த இதழ்கள் எந்தச் சலனமுமில்லாமல் இயங்கி வந்தன. “நிறைகுடம் தளும்பாது” என்பதை இந்த இதழ்கள் அறிந்து வைத்திருக்கின்றன என்பதால் இருக்கலாம்.
இதற்கான எதிர்வினைகள்தான் பலமாக எழுந்தன. மகாகவி இதழில் இந்த விவாதக் களத்தின் கொதிநிலை எகிறியது. வட்டமேசை நிரம்பி வழிந்தது.. இதழ் தொடங்கி வெளியான நான்காவது இதழிலேயே ‘மகாகவி’ தன்னை சுயபரிசோதனை செய்யத் தொடங்கி விட்டது என்பேன்.
வதிலை பிரபா
தமிழ்நாட்டை சேர்ந்த கவிஞர் மற்றும் சிற்றிதழ் ஆசிரியர்