கலாதீபம் லொட்ஜை அடுத்து இன்று தான் புத்திரன் வாசித்து முடித்தேன்!
இரண்டு நாவல்களும் சிறுசிறு அத்தியாயங்களாக அமைந்திருப்பது என் வாசிப்பை எளிமையாக்கியது.
பொதுவாகவே நாவல்கள் வாசிக்கையில் ஒரு அத்தியாயத்தை முடித்து ஓர் பெருமூச்சு விட்டு பலவாறான எண்ணவோட்டங்களை ஒருமுகப்படுத்தித்தான் அடுத்த அத்தியாயத்தை தொடங்குவேன்.ஒரே மூச்சிலெல்லாம் ஒரு நாவலையும் வாசிக்க முடிந்ததில்லை. என்னுடைய அந்த விசித்திரத்திற்கு விதிவிலக்காய் இருந்தது புத்திரன். நான்கைந்து அத்தியாயங்களை ஒருசேர ஒரே மூச்சில் வாசித்தேன்.
புத்திரனை பற்றி ஆசிரியர் தனது முன்னுரையிலே குறிப்பிட்டு விடுகிறார்,
“என்னுடைய மனதிற்கு நெருக்கமான வாழ்வின் நினைவுகளை எழுதியிருக்கிறேன்” என்பதாக.
வேலைக்காக தந்தை மகேந்திரன் மகனது சிறுவயதிலேயே அவனை பிரிந்து கொழும்புக்கு சென்று விடும் சூழலில் தாய் சுந்தரியும் அவளுடைய உறவினர்களும் தான் குட்டியை வளர்த்தெடுக்கிறார்கள்.ஆண்டுக்கொரு முறை திருவிழா நாட்களில் மட்டும் மகேந்திரன் ஊருக்கு வருகிறார். அப்போதெல்லாம் தனது மகனுக்காக பைமுழுவதும் இனிப்புகளை நிரப்பி வருவதும் அதற்காகவே தந்தையின் வருகையை எதிர்பார்த்து குட்டி காத்திருப்பதும் நிகழ்கிறது.
நயினாதீவில் குட்டியின் பள்ளி நாட்களும், விளையாட்டுகளும்,ஊருடனும் உறவுடனுமான உணர்வுபூர்வமான சம்பவங்களே புத்திரனின் கதை.
குறிப்பாக குட்டியை மையப்படுத்தி வரும் பெரியப்பா கதிர்வேற்பிள்ளை, பெரியம்மா மகேஸ்வரி,அக்கா செல்வராணி, ஆச்சி ஆசைப்பிள்ளை,மாமா செல்வராசர்,மீன்காரம்மா நைஸ் என அத்துனை கதைமாந்தர்களும் வாசகரின் நினைவுகளில் தங்கிவிடுமளவு நேர்த்தியாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாகவே ஈழ போர்க்காரணமாக அம்மக்கள் வாழ்வின் மீது படிந்துள்ள
அளவிடமுடியா அச்சமும் அவர்கள் மீதான பரிதாபமும் இக்கதையில் பதிவாகவில்லை.மாறாக,இதிலுள்ள ஈழ சிறுவனது பால்ய கால வாழ்க்கை படிப்பவர் நெஞ்சத்தில் அவ்வாழ்வின் மீதான ஏக்கத்தையே ஏற்படுத்துகிறது.
காரணம் கதையில் இடம்பெற்றுள்ள நிலமும் கதைமாந்தர்களும் காட்சி விவரிப்புகளும் வாசகர் மனதை வாரியெடுத்து கொள்கிறது.
பெரிதாக போர் பற்றிய விவரணைகள் கூட இல்லை.ஓரிரு இடங்களில் இலங்கை இராணுவம் குண்டு போடும் நிகழ்வுகளுள் இராணுவத்தினரின் கெடுபிடிகளும் போர் பற்றிய இலங்கை இராணுவத்தின் செய்தி குறிப்புகளுமே இடம்பெறுகிறது.
“புத்திரன் நேரடியாக போரின் புறச்சூழலை விவரிக்கவில்லை தான்.
ஆனால் மறைமுகமாக,
உயிரும் உடலும் தந்து உலகை அறிமுகப்படுத்திய உறவின் உன்னதமான தாய் மகனின் பிரிவை பேசுவதன் மூலம் போரின் கோரத்தால்
வதைப்படும் மனித ஆன்மாக்களின் அகவுலக அவஸ்த்தையை பதிவுசெய்துள்ளது.”
இறுதியாக,
“உலகம் பழகும் வரை எல்லாக் குழந்தைகளின் பழக்கமும் அம்மாவுக்குச் சொந்தமானவையே”
-வாசு முருகவேல்
இராகுல் அருள் மொழிவர்மன்