வழிகளை கடக்க
என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது
பாலஸ்தீனரின் கையிலிருக்கும்
இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல
சோதனைச்சாவடிகளை கடக்க
என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது
ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்
அமெரிக்க அடையாள அட்டையைப்போல
செலவு செய்ய
என்னிடம் சில நாணயக்குற்றிகள் இருக்கின்றன
சிரியரிப் பிரஜையிடமிருக்கும் இருக்கும்
பிரெஞ்சு நாணயக் குற்றிகள் போல
என்னுடைய மண்ணில்
ஒரு தேசிய கீதம் ஒலிபரப்பப்படுகிறது
மணிப்பூரில் ஒலிக்கும்
இந்திய கீதம்போல
என்னுடைய மண்ணில்
ஒரு கொடி ஏற்றப்பட்டிருக்கிறது
திபெத்தில் பறக்கும்
சீனக் கொடி போல
என்னுடைய விரலில்
நாடற்ற அகதியின் முத்திரை இருக்கிறது
மியன்மாரியரின் கையில்
தீயால் இடப்பட்ட காயத்தைப்போல.
– தீபச்செல்வன்