22
தூரத் தெரிந்த மலைமேட்டில் திடீரென
குடிசையொன்று முளைத்து
என்னைப் பார்த்து முறைத்தது.
யார் அங்கே போய் குடியேறினர்,
எனக்கு தெரியாது ரகசியமாய்?
முன்னர் என்னைச்சுற்றி ஏவல் புரிந்தவர்களையும்
விரட்டினேன்.
இன்னும் இடைக்கிடை காதுக்கினிய
கதைசொல்லி வந்தவர்களையும்
விரட்டினேன்.
சொந்த பந்தங்களும் எனக்கு அதிகம் இல்லை.
இப்போ எனக்கு எஞ்சியிருந்ததோ
இந்தத் தனிமை தான்
என்னைச் சுற்றி சுற்றி வந்த அதையும் விரட்டினேன்
ஆனால் அது நாய்க்குட்டி போல் போக மறுத்து
என்னையே சுற்றிச் சுற்றி வந்தது.
நான் நல்லவன் நன்றி உள்ளவன் எனச் சிணுங்கி அது ஊளையிட்டது, அப்பவும்
நான் இரங்கவில்லை!
அருகே வரவிடாது துரத்தினேன்
அதனால் அது விரக்தியுற்று
தூரப் போய் ஒரு மேட்டில் குடிசை போட்டு
வாலைச் சுருட்டிக் கொண்டு இருந்தபோலும்!
சில நாட்களின் பின் திடீரென மலைமுகட்டில் இருந்த தன் குடிசையைப் பெயர்த்து வந்து
எனக்கு குடை போல் பிடித்தவாறு என்னிடம் இரந்தது அந்தத் தனிமை!
“இல்லை என்னிடம் நீ வர வேண்டாம்
உன்னை நான் மனிதனாக்க விரும்பவில்லை போய்விடு”
“ஏன்?”
“நீ வந்தால் எனக்குள் இருக்கும் இனிமை போய்விடும்!
என் நெஞ்சுள் உறிகட்டி தயிர்போல் தொங்கும் இனிமையுள்
நான் மூழ்கி எழும்வரை போய்விடு!
பின்னர் நான் அழைப்பேன்,
அப்போது ஓடிவா, இந்த உலகனைத்தையும் அழைத்துக்கொண்டு!
மு.பொ.