எத்தனை
பொய் முகங்களை
என் எதிரே
பார்த்திருக்கேன்
நானே வியந்தபடி
இவனா இப்படி
என்று ஏங்கியிருக்கேன்
கவிஞன் என்று
ஒருத்தன் வந்தான்
பல கதைகள்
சொல்லித் திரிந்தான்
எப்பவுமே தன் மூச்சு
விடுதலை என்றான்
இப்ப இவன் இருக்கும்
இடம் வேறு
பொய் அழகே
இவனுக்கும்
கவிதைக்கும் என்று
புரிந்து கொண்டேன் இன்று
அரசியல் ஆய்வாளன்
என்று ஒருவன் வந்தான்
அண்ணன் அவன் சொல்வது
தான் தத்துவம் என்றான்
எப்பவுமே தான்
தேசியவாதி என்றான்
இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
ஏங்கிப்போய் விட்டேன்
இவன் பேச்சை
இன்று கேட்டு
சோஷலிசவாதி என்று
ஒருவன் இருந்தான்
சொலிடாரிட்டி என்று
பல கதைகள் சொன்னான்
சரிநிகரும் சமத்துவமும்
என்று பல சொன்னான்
சாதி மதம் பாவம்
என்றும் சொன்னான்
இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
ஏங்கிப் போய் விட்டேன்
இவனை ஒருக்காக் கண்டு
எத்தனையோ கோடிக்கு
தான் அதிபதி என்றான்
இந்த மண் மீட்க
என்று ஒருவன் வந்தான்
உயிர் தமிழுக்கு
உடல் மண்ணுக்கு என்றான்
அத்தனையும் பொய்யெனப் போலே
ஆக்கிரமிப்பாளருக்கு உதவி
அபிவிருத்தி அமைச்சராகிப் போனான்
நல்லாட்சி என்று
ஒருவன் வந்தான்
நம்மில் ஒருவன்
துணையாகி நின்றான்
இப்ப வரும் தீர்வு
என்றும் சொன்னான்
ஏமாந்து போனார்
எமது மக்கள்
ஜனநாயகம் பேசி
ஒருத்தன் திரிந்தான்
இப்போ பணநாயகம்
ஆகிப் போனான் இன்று
உதவும் கரம் என்று
ஒருத்தன் இருந்தான்
ஊர் முழுக்க
காசு சேர்த்துத் திரிந்தான்
பாவம் அந்த
மக்கள் என்று சொல்லி
பல உதவி
செய்வதாக சொன்னான்
போகும் இடம் எல்லாம்
மாலை விழும்
இவன் கழுத்தில்
ஏதோ மீட்க
வந்த தேவன்
இவன் போலே
இப்ப இவன்
இருக்கும் இடம் வேறு
இரண்டு மாடி வீடு
கொடுத்தது எல்லாம் சுருட்டி
கொள்ளைகாரன் போல
ஏங்கிப் போனேன் கண்டு
சாதி எதிர்ப்பாளன்
சக்கரப்பிள்ளைவாள்
என்று ஒருவன் வந்தான்
நீதி கெட்ட சமூகம்
என்று சொன்னான்
இப்ப இவர் சொல்லும்
கதை வேறு
கடைசி மகள் ஒருத்தி
காதலித்தாள் தலித்தை என்று
வீட்டை விட்டுக் கலைத்துப்போட்டார்
மிச்சம் மூன்று பிள்ளைக்கும்
முடிச்சு வைக்க நாய் போல் அலைகிறார்
நான்கு பிள்ளைகளின் தந்தை
நல்ல சாதி கேட்டு
எந்த இலக்கிய சந்திப்பிலும்
இவரை இப்போ காணம்
ஏங்கிப் போய் விட்டேன்
எங்கள் பிள்ளைவாளா
இவர் என்று
எழுத்தாளன் என்று
ஒருத்தன் இருந்தான்
ஏதோ பல
எழுதி எழுதி வந்தான்
எல்லாமே
தெரிந்தவன் போலே
எழுத்தினிலே வித்தகன்போல்
தத்துவங்கள் சொன்னான்
ஆண்டுக்கு
ஒரு புத்தகங்கள் அடிப்பார்
பேருக்கும் புகழுக்கும் என்றே
பெரிசாய் பல விளம்பரங்கள்
செய்வார்
புவிசார் அரசியல் ஞானி
என்று ஒருவர் இருந்தார்
தன்னை விட ஒரு ஞானி இல்லையென
தத்துவங்கள் பல எழுதி வந்தார்
நடந்தது நடப்பது நடக்கப் போவதென
நாளொரு செய்தி சொன்னார்
ஆன நடந்தது ஒன்றும் இல்லை
இவர் இப்போ நடப்பதும் இல்லை
அரசியல் அறிவோம்
என்று ஒருவர் வந்தார்
அடிக்கடி கருத்தரங்கு வைத்தார்
அவன் பிழை
இவன் பிழை என்பார்
அதனால் தான்
நாம் தோற்றோம் என்பார்
அறிவதற்கோ
அங்கு ஒன்றும் இல்லை
அவரிடமும் விடை
ஒன்றும் இல்லை
சொலிடாரிட்டி
சோசலிசம் என்பார்
ஆனால் அவரிடமும்
அது ஒன்றும் இல்லை
எத்தனையோ
வேஷங்கள்
பாத்திரங்கள்
நூல் கொண்டு ஆடும்
பொம்மை போலே
நாளுக்கு ஒரு நாடகங்கள்
பேருக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
புகளுக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பணத்துக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
பதவிக்காய் வாழ்ந்தான்
ஒருத்தன்
உண்மையாய் ஒருத்தன் வாழ்ந்தான்
உயிரையே எறிந்து சென்றான்
தன்னையே தமிழுக்காய் தந்தான்
அவன் தான் மனிதன் அவன் ஒரு வரலாறு.
பா.உதயன் ✍️