என் குப்பைகளை எங்கே
கொட்டுவது
கப்பலோடிய கடலின் கோடுகள் மறைவதைப்போல்
நானும் மறந்தும் மறைந்தும் போகத் துடிக்கிறேன்
இந்தக் குப்பைகள் விடுவதாயில்லை
எத்தனை தடவை மறக்கிறோமோ
அத்தனை தடவையும் மறைந்து பிறக்கிறோம்
பழைய கோடில்லா கடல் நீராய்
வற்றாத புத்துணர்வு பொங்கிறது
எல்லா மனிதர்களும் கொடுக்க முடியாது கையால்
எல்லா மனிதர்களும் கெடுக்கமுடியாது நெஞ்சால்
எல்லா மனிதர்களும் பேசமுடியாது வாயால்
ஆனால்
சில மனிதர்கள் சிலகணமேனுங்
கேட்க முடியும் காதால்
அல்லது
கேட்பது போல் நடிக்கவும் முடியும்
ஒரு கடல்போல் காதை விரித்துக் கேட்டால்
நான் கப்பல் போல் என் கவலைகளைக் கொட்டிச் செல்வேன்
பிறகு அலை போல் நாம் யாவரும் கரைந்து தெளியலாம்
என்ன செய்ய
என் குப்பைகளைக் கொட்ட யாரொருவர் வந்தாலும்போதும்
என் மனப்பாரங் குறைந்து பல காதஞ் சென்று புதுமனிதனாகிப் புன்னகைப்பேன்
சிக்மன் பிராய்ட்டுகள் தேவையில்லை
யாராவது செவிகளை விரியுங்கள்
நான் கப்பலாகிக் குப்பை கொட்ட
பகல் 3.13
கரவை
த.செல்வா