0

சில காட்சிகளின்
மீள் நிகழ்தலால்
ஆவேசத்தில்
எதிர்வினையாற்ற
எத்தனிக்கும் நெஞ்சை
தலையில் குட்டிக் குட்டி
அடக்கிக்கொண்டே
இருக்கிறோம்!
சீருடை சூழ்ந்துகொள்ள
அன்றும்
மண்டியிட்டமர்ந்தோம்…
இன்றும்
மண்டியிட்டமர்ந்தோம்…
ஊதுபத்தி…
கற்பூரம்…
வாடுவதற்குள்
நினைவுகூர்ந்து கண்ணீர் சிந்த
கொஞ்சம் பூக்கள்…
வேறெதுவுமில்லை…
வேறெதுவுமேயில்லை!
பூக்களில் கந்தகம் இல்லை…
ஊதுபத்தியில் தோட்டாக்கள் இல்லை…
கற்பூரத்தின் சுவாலை
உங்களை
எரித்துவிடப்போவதுமில்லை…