உன் விழிகள் என் திசைகாட்டிகள்
உன் இதழ்கள் என் நீர்த்துறைகள்
உன் நிழல்தேடி தாகமாய் வருகிறேன்
உனக்குப் பரிசளிக்க வேண்டும்
உலகம் கண்டிராத
அற்புதமான பொருள்
ஒருவராலும் தரமுடியாத என் இதயம்
முத்தமிட வந்தேன்
முட்கள் சூழ நிற்கிறாய்
மனமொடிந்து திரும்புகிறேன்
உன் உடலுக்குள் ஒரு கடல்
மீன்கள் ஆயிரம் துள்ளுகின்றன
கண்ணாடிக் குடுவைக்குள் நீ
ராகங்கள் பெருகும் தடாகம்
சந்தங்கள் கமழும் பூந்தோட்டம்
மனம் எனும் மாய இசைக்கருவி
கள்ளிப்பழ உதடுகள்
கனிந்து சிவந்தன
கண்கள் துள்ளிக் குதித்தன
காதல் வெள்ளம் பிரவாகமெடுத்தது
மழைச்சாலையில் யாரும் இல்லை
காற்று ஓலமிட்டு ஓடுகிறது
இறந்தபடி இணை பிரிந்த பறவை
சிரிப்பால் எனக்கு தீ மூட்டினாள்
வெந்து கொண்டிருக்கிறது
என் இதயம்
பசியாறப் பார்க்கிறது கனவு.
வந்ததீபன்