எதன் பெயரையும் நீங்கள் எப்படியும் அழைக்கலாம்
எவ்வளவு சுருக்கியும்
மொழியை நீக்கியும் இனிமை நீக்கியும்
நான் என்பது எதற்குள்ளும் உண்டு
ஒரு இலை கூட
சுயமின்றி சுருள்விரிவதில்லை
ஒவ்வொரு இலையும் பல நாமங்களால் அழைக்கப்படலாம்
நாம் யாவரும் எதனுடனும் ஒப்பிட்டாலும் ஒப்புமையற்றும் இருப்போம்
யாவும் இல்லாதுமிருக்கும்
கடலை விட்டு வெளிவரமுடியாத உயிரும்
காடுகளை விட்டு வாழத்தெரியாத உயிரும்
வித்தியாசமான சூட்சும ஞானம் கொண்டவை
இசையை உயிரும் உயிரற்ற எதுவும் எழுப்பும்
ஆனால் காற்றின் மூலமின்றி உணர்தல் அரிது
நிலைநிறுத்தி வைக்கப்பட்ட காற்றின் எடை
எவ்வகையிலேனும் காலாவதியாகும்
காற்றின் சதையை பாடல் அறியும்
ஒரு சிறந்த கவிஞன்
தன் வார்த்தைகளில் உதிரமுடியாத வாசனையை மலரவிடுவான்
பார்வையற்றவனின் அகம் ஒளியாலானது
•
கவிதை – தேன்மொழிதாஸ்
28.11.2022 4am
ஓவியம்: தேன்மொழிதாஸ்