பறவைக்கு
கூடு மட்டுமல்ல
காத்திருக்கும்
கூண்டும்.
🦀
உதிரமே நதியாய் ஓட
சதைக்குவியலே மலையாய் உயர
புன்னகைத்தபடி புத்தர் இருந்தார்
சிலையாய் இலங்கையில்.
🦀
பாலைவனத்தில் நிலா காய்கிறது
கடல் மேல் மழை பெய்கிறது
நிலம் புகைந்து
சூழல் கருகுகிறது.
🦀
நில்லென்று தடுத்தால் நிற்காதே
ஓடு என அதட்டினால் ஓடாதே
உட்காரச் சொன்னால்
நிமிர்ந்து எழுந்து நில்.
🦀
மலைப்பாதைகள் பாம்பாய் நெளிந்தோடுகின்றன
உச்சிக்குச் செல்ல
சரியானதைத் தேர்ந்தெடுக்கிறேன்
மலை சரியத் தொடங்குகிறது.
🦀
சிநேகம்
சொத்துக்களால் சாகடிக்கப்பட்டது
தோழமை
பணத்தால் புதைக்கப்பட்டது
பசுத்தோல் போர்த்திய
கழுதைப்புலிகள் சுற்றிலும்.
🦀
ஜீவநதிகள் பாயும்
புண்ணிய பூமி
வளம் கொஞ்சும்
செழிப்பு மிக்க தேசம்
சோறின்றி சாகுது
ஏதுமற்ற ஜனம்.
🦀
அன்பை சிறுகதைகளாய்
கருணையை கவிதைகளாய்
எழுதும் அவனுள் உறங்குகிறது
நிணம் புசிக்கும் மிருகம்.
🦀
ஜெபிக்கச் சொல்லாது
த்யானிக்க வற்புறுத்தாது
தொழ கட்டளையிடாது
போராடத் தூண்டும் மனிதம்.
🦀
சிலருக்கு ஸார்,ஐயா அடிமைத்தனம்
சிலருக்கு கறுப்பு நீலம் சிவப்பு அருவருப்பு
சிலருக்கு தோழர் பூதபயம்
எனக்கு அதிகாரத்தின் மீது துவேசம்.
🦀
வசந்ததீபன்