என் பெயர் சொல்லி…சொல்லி
யார் யாரோ அழைக்கிறார்கள்
அழைத்தவர்களை இன்னும்
யாரென்று அறிய முடியவில்லை
என் பெயர்
எனக்கு மறந்து
போய்க் கொண்டிருக்கிறது
ஆளற்ற காடுகளில்
காருண்யத்தின் பெரு மழை
பெருக்கெடுத்துப்
பாய்கிறது நதியாய்…
பள்ளத் தாக்குகளில்
நேசத்தின் எதிரொலிகள்
மனிதரோடு கலந்து வாழ்வதில் தான் அன்பின் அர்த்தம் பிரதியாகிறது
பூ பூவா பறந்து திரியும்
பட்டுப் பூச்சிகளின் கோலாகலத்தில்
மலையைத் தாண்டி எட்டிப் பார்க்கிறது
நிறங்கள் இணைந்த வானவில்
அலைகளின் மீது நுரைகள் போல
சிறு சிறு நண்டுகள்
படகுத் துறையில் கூடிக்கிடக்கும்
படகுகளின் மீது கடற் பறவைகள்
கனவுகளைத் தொட்டுப் போகின்றன
தீராத துக்கங்கள்
குளம்படிச் சத்தம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறது
மனதுள் தேடிப் பார்க்கிறேன்
யுத்தமெனும் மாயரக்கனின்
அழியாத காலடிச்சுவடுகள் ஒளிர்கின்றன
குருதி வண்ணத்தில்….
சிதைந்து கிடக்கும்
மனித உறுப்புகளின் சிதிலங்கள்
வாழ்வின் கரைகளில்..
காற்று வருகிறது
காற்று போகிறது
இலைகள் நடுங்குகின்றன
வானத்தில் பறவைகள்
பறந்து எங்கோ போகின்றன.
🦀
வசந்ததீபன்