சத்தியமூர்த்தியருக்கு
இன்று பிறந்தநாள்…
எதுக்குமொரு
வாழ்த்தை உதிர்த்து வைப்போம்
இழுத்துக் கொண்டிருக்கும் போது
எனக்காகவும் இயமனோடு போராடுவார்
எல்லாம் ஒரு சுய நலம்தான்
வாய்க்கால் வரம்புகளில் திரிந்த பெடியன்
இன்று யாழ்ப்பாண ஆசுப்பத்திரியில்…
எட்டத்தில் நின்றே பார்க்கிறேன்
நெருங்கினால்
தொப்பையை தட்டி பார்க்க கூடும்
தோழில் கை போட்டு
கரடிப் போக்கு ரூ கண்டாவளை
ஓடலாமா என கேட்க கூடும்
ஆதலால் இப் பாடலாலொரு பரவசம்
சத்தக காம்பை கொடுத்தாலும்
சதை எலும்பு தடவி
விக்கினம் தீர்க்க வல்லன்.
இந்த விஸ்வரூபம் முள்ளி வாய்க்காலில்
அனெஸ்த்தெற்றிக் இல்லா நாளில்
சத்திய மூத்தியும் சக வைத்தியர்களின்
வார்த்தைதான் வசியம்
வலி தெரியாமல்
எடுக்க பட்ட சன்னங்கள்
வயிறும் குடலும் வேறாய் கிடக்க
உயிரை வைத்து செய்த
அப்பெரு வேள்வி மறப்பதற்கில்லை
இறப்பை மாத்தளனில் நிறுத்த
இரத்த பெருக்கிற்கு அணை கட்ட
படிப்புக்கு மேலாய்
இன்னொன்றும் இருந்தது
அதுதான் இனப்பற்று
அதிலும் இவர்கள் கலா நிதிகள் தான்…
நினைத்து பார்க்கிறேன்
வெளி நோயாளர் பிரிவு மணல் வெளி
அவசர சிகிச்சை பிரிவு பனையடி
சவக்காம்பரா எல்லா இடமும்
கொத்து கொத்தாய் ஏந்தி
குழறி அள்ளி கொண்டு
ஓடி வந்தார்கள் குற்றுயிர்களை
காலெது கை எது
தேடி பிடித்து தைக்கும் போது
கூற்றுவனுக்கும் தங்களுக்கும் இடையில்
பெரும் குடுமி சண்டை
சித்திர புத்திரருக்கு சீசரை காட்டும் போது
அது ஒரு போர் வாளாயிற்று…
வரலாறு அறிந்தவர்களுக்கு
வைத்தியம் ஒரு தவம்
இற்றைக்கு ஒரு தசாப்தத்துக்கு முதலில்
உயிரை
திருப்பி கொடுப்பது என்பது
வரங்களிலேயே உச்சம்
அந்த கரங்களை இன்றும் பற்றி
ஒரு நன்றியும் வாழ்த்தும்
தாயகக் கவிஞன் பொன். காந்தன்