1.
களப்பணி ஆற்றிடவே கலையரசக்
கதிரவன் காசினியைப் பார்க்கிறான்
உளமாற நேசிக்கும் உலகுக்கு உதவிடவே வெள்ளிப்பனி கடக்கின்றான்
களமான தரணிக்குள் கால்பதித்து விளையாட கதிர்ப்பூவாய்ப் பூக்கின்றான்
இளவரசி வெள்ளியும் இளமாறன் வருகையில் இரட்டிப்பாய் மகிழ்கின்றாள்
2.
அரியானா சென்றங்கு அமைதியை உண்டாக்க ஆளவந்தார் வரவில்லை
புரியாமல் புலரியும் பூமியை நோக்கவே தயங்கியே நிற்கின்றான்
அறியாமை இங்கில்லை ஆணவத்தின் மிகுதியால் ஆழ்மனங்கள் பாழாகுதே
தெரிந்தே செய்கின்ற தொடரான செயலாலே தேசமே எரிகின்றதே
3.
கலங்கிடும் மனத்துக்குள் கேடான கருத்துக்கள் செறிவூட்டப் படுகின்றதே
துலங்காத அறிவாலே துயரெல்லாம் தொடருதே தூய்மைகள் தீயுதே
மலர்கின்ற மலரெல்லாம் மதத்தாலே மாய்கின்றதே மௌனத்தால் தேய்கின்றதே
சிலரின் சீற்றத்தால் சீர்குலைவு தொடருதே செந்தீயும் படருதே
4.
முன்னேற்ற முடக்கத்தை முறியடித்து முத்தெடுக்கு முன்வரும் மூலவனே
தென்னாட்டு சிவனே தென்பொதிகை வாசனே தேன்தமிழ் முருகனே
பன்னாட்டு போட்டிக்குள் பைந்தமிழும் இருந்தாலும் பழந்தமிழே வென்றிடுமே
நன்னோக்கம் நிறைவேற நற்றமிழும் தழைத் தோங்க விடிகின்றதே.
கோ.பூமணி
04/08/23ஆடி19