புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்சிறுகதைகள் மறுஅவதாரம் | சிறுகதை | அலைமகன்

மறுஅவதாரம் | சிறுகதை | அலைமகன்

4 minutes read

நானும் ராகவனும் கொடிகாமம் நோக்கி பயணிக்க ஆரம்பித்தபோது பொழுது சாய ஆரம்பித்திருந்தது. அது மழைக்காலம் முடிவடைந்து முன்பனிக்காலம் ஆரம்பித்திருந்த காலம். யாழ்ப்பாணத்தில் எனக்குப் பிடித்ததே முன்பனிக்காலம்தான். குளிர் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. வானம் மப்பாகவும் உடுக்கள் மங்கலாகவும் தெரிந்தன. முழு பௌர்ணமி காலமாதலால் மப்பையும் மீறி நிலவு ஒளிர முயற்சி செய்து கொண்டிருந்தது. நாங்கள் மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தோம். தெரு முழுவதும் ஆளரவமே இல்லை. வயல்களிலிருந்த அந்துப்பூச்சிகளும் சில வண்டுகளும் எங்களைச் சுற்றி பறந்து கொண்டிருந்தன. வண்டுகளின் இரைச்சலும் மின்மினிகளின் வெளிச்சமும் எனக்கு ஒரு மந்தகாசமான உணர்வைத் தந்து கொண்டிருந்தது. கைதடி பாலத்தைத் தாண்டி மெதுவாக சென்று கொண்டிருந்தபோது கடலின் இருபுறமும் இருந்து ஏராளமான பூச்சிகள் திரண்டு வந்து முகத்தில் அடித்தன. நான் வாகனம் செலுத்த முடியாமல் திணறத் தொடங்கினேன். சிறுவயதில் வாசித்த நாவலொன்று ஞாபகம் வந்தது. அதிலே பூச்சிகள் திரண்டு வந்து ஊரையே சங்காரம் செய்துவிட்டு மாயமாக மறைந்து விடும்.

இந்தப் பயணத்துக்கு ராகவன்தான் அடித்தளம் இட்டவன். விடுமுறைக் காலம். அவன் இரவு கொடிகாமம் போகவேண்டுமென்று முடிவெடுத்ததற்கு ஒரு காரணமிருந்தது. எங்களுக்கு கோழிப்புக்கை என்றால் ஒரு பைத்தியம். முன்பு பல தடவை கொடிகாமத்தில் எங்கள் கூட்டாளி ரமேஷ் வீட்டில் கோழிப்புக்கை சாப்பிட்ட ருசி இப்பவும் நாவில் நிற்கிறது. அதுவும் பௌர்ணமி நிலவில் மிதமான ஒற்றைப்பனை கள்ளுடன் கோழிப்புக்கையை சாப்பிடும் தருணமே போதும். இங்கேயே சொர்க்கத்தை கண்டுவிடலாம் போல இருக்கும்.

பௌர்ணமி காலத்தில் கடற்கரையில் தரித்திருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஒருமுறை நெடுந்தீவில் இரவு பன்னிரெண்டரை மணி அளவில் பாறைகள் நிறைந்த வெள்ளை கடற்கரையில் முழுநிலாக்காலம் தந்த சுகானுபவம் பிறகு நீண்ட காலமாக அனுபவிக்க கிடைக்கவில்லை. அன்று ஆச்சரியமாக நான் எந்தவித போதையும் உட்கொண்டிருக்கவில்லை. என்றாலும் இவ்வகையான இயற்கை அழகை ரசிக்கும்போது சிறிதளவு மிதமான போதை இருந்தால் நல்லதென்றே தோன்றுகிறது. ஒருவேளை ராஜ போதையான கடற்கரை நிலவை நாம் உட்கொள்ளும் போதை அனுபவிக்கத் தூண்டுகிறதோ தெரியவில்லை.

கடற்கரையில் முழுநிலாக் காலத்தை கண்டுவிட்ட எனக்கு அங்கேயே தரித்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் ராகவன் குறுக்கே கட்டையைப் போட்டான்.

“விரைவாக கொடிகாமம் போனால் முயல் வேட்டைக்குப் போகலாம்”

எனக்கு கோழிப்புக்கை இன்று சாப்பிட முடியுமோ முடியாதோ என்ற திகில் உருவானது. மெதுவாகவே மோட்டரை செலுத்திக் கொண்டிருந்தேன். இரவு எட்டரை மணிவாக்கில் நாம் சென்று சேர்ந்தோம்.

நாம் சென்று சேர்ந்த இடம் விதைக்கப்படாத வயல்கள் இருந்த ஒரு வெளி. வயலிலே புதர்கள் மண்டியிருந்தன. அங்கிருந்து ஐம்பது மீட்டர்கள் தொலைவில் வயல்கள் விதைக்கப்பட்டிருந்தன. மங்கலான நிலவொளியில் நாம் முயல்வேட்டையைத் தொடங்கினோம்.

முயல்வேட்டைக்கு என சில தந்திரங்கள் உண்டு. அதிலே முக்கியமானது வேட்டைக்காரனின் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்கக்கூடாது. இரண்டாவது பொறுமை. பொறுமை இல்லாதவன் வேட்டைக்கு ஒத்துவரான் என்று ராகவன் அடிக்கடி சொல்லுவான். இதனால்தானோ என்னவோ என்னால் சிறந்த வேட்டைக்காரனாக இதுவரையும் வர முடியவில்லை. நாங்கள் இருவரும் வலுவான தடியை எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக வரப்பில் காத்துக் கொண்டிருந்தோம். கண்கள் சல்லடையாக வயல் வெளியைத் துளாவி சலித்தன. உண்மையில் இப்பிடியான நிலவொளிக் காலம் முயல் வேட்டைக்கு பொருத்தமற்றது. ஒளியில் எங்களை முயல் கண்டுவிட்டால் சுலபமாகத் தப்பிவிடும். நல்ல இருளாக இருந்தால் முயலின் கண்கள் இரவில் ஒளிரும். அதன் அசைவைக் கவனித்து குறி பார்த்து தடியை வீச வேண்டும். என்னை ஒரு முயல் வேட்டைக்காரன் என்று பலர் ஊரில் சொன்னாலும் நான் இதுவரை ஒன்றிரெண்டு முயல்கள் தான் வேட்டை ஆடியிருப்பேன். அன்று எங்களுக்கு ஒரு முயல் கூட கண்ணில் படவில்லை. எனக்கோ தனிப்பனைகள் எங்கே அகப்படுமென்று தவிப்பாக இருந்தது. மறுபுறம் கோழிப்புக்கை சாப்பிட வேண்டுமே என்று நாக்கு கெஞ்சத் தொடங்கியது.

நேரம் பத்தரையைத் தாண்டிவிட்டது. இருவரும் ரமேசுக்குப் போன் செய்தோம். ரமேஷ் எந்த வேலையையும் எந்த நேரத்திலும் சலிக்காமல் செய்யக்கூடியவன். இந்த நேரத்தில் தனிப்பனை கள்ளுக்கு எங்கே செல்லுவது. தனிப்பனை கள் இப்போதெல்லாம் அரிதான பொருளாகி விட்டது. எப்படியோ எங்கள் அதிஷ்டம் கள் கிடைத்துவிட்டது. அல்லது ரமேஷின் திறமையாகவும் இருக்கலாம். காலையில் இறக்கிய கள். இன்னும் நேரம் போயிருந்தால் வெளியே ஊற்றியிருப்பார்கள். நாங்கள் மூவரும் வயலோரமாக இருந்து தனிப்பனை கள்ளை சுவைக்கத் தொடங்கினோம். வழமையான அரட்டைகள்; கிளுகிளுப்புகள்; கோபங்கள் என நேரம் போய்க்கொண்டிருந்தது.

02

ரமேஷின் வீட்டுக்கு நாங்கள் போய் சேர்ந்தபோது இரவு ஒரு மணியாகி இருந்தது. ரமேஷின் வீட்டுக்கு நான் முதலில் வந்து ஏழு வருடங்களாகி விட்டன. அப்போது அவன் தனியன். இப்போதோ மனைவி குழந்தையுடன் இருப்பதாக சொன்னதும் எனக்கு திக்கென்றது. ஒரு குடும்பஸ்தன் வீட்டில் நாங்கள் இருவரும் போதையுடன் நள்ளிரவில் போனால் எப்பிடி இருக்கும். ஆனால் ரமேஷ் எங்கள் தயக்கத்தைக் கண்டுகொள்ளவில்லை. வீட்டில் எதிர்பாராத விதமாக எங்களுக்கு வரவேற்பு அபரிமிதமாக இருந்தது. தூக்க கலக்கத்துடன் வந்து கதவைத் திறந்தாலும் புன்னகையில் பேச்சிலும் ஒரு துளி கோபம்கூட தெரியவில்லை. வீட்டில் பின் கூட்டில் இருந்த கோழி ஒன்றைப் பிடித்து ரமேஷ் இறைச்சியாக்கி கொடுத்ததும் உடனடியாக பரபரப்பாக கோழிப்புக்கை தயாரிக்கத் தொடங்கினாள். கூடவே எங்கள் இருவருக்கும் வெளியிலே படுக்கையும் தயாரித்தாள். நான் நடப்பவற்றை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எவரென்றே தெரியாத அந்நியர்கள் நாங்கள். போதையில் வேறு இருந்தோம். கணவனின் நண்பர்கள் என்ற ஒரே காரணத்துக்காக மிக கவுரவமான உபசரிப்பு. “அதிதி தேவோ பவ” என்ற வார்த்தைகளின் உண்மையான அர்த்தத்தை நான் நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கோழிப்புக்கை நல்ல சுவையாக இருந்தது. கூடவே அவளின் உபசரிப்பும். நல்ல களைப்புடன் படுக்கைக்கு போகும்போது நான் ராகவனிடம் சொன்னேன்.

“ரமேஷ் கொடுத்து வைச்சவன் இல்ல?”

” ம்…. ஈரேழு ஜென்மத்திலும் கடுந்தவம் புரிந்தாலும் இப்பிடி ஒருத்தி மனைவியாக கிடைப்பது கஷ்டம்”.

“உண்மைதான்; திருமணம் என்பது ஒரு சூதாட்டம்தான். அவரவருக்கு ஏற்ற யோகத்தில் அமையும். திவ்யா என்ற பெயருக்கு ஏற்ப திவ்வியமான பெண் இவள் மச்சான்”. ஒரு நற்சான்று பத்திரத்துடன் நான் அயர்ந்து தூங்கிப் போனேன். தனிப்பனைக் கள் தன் வேலையை காட்டியது. மிக அருமையான தூக்கம்.

எங்களுக்கு காலை மிகத் தாமதமாக விடிந்தது. நாங்கள் எழும்பியவுடன் படுக்கையிலேயே சூடான தேநீர் தயாராக இருந்தது. ரமேஷ் முக்கிய வேலையாக வன்னிக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனை விட வேகமாக எங்களுக்கும் கணவருக்குமாக காலை உணவை அவள் முடித்து விட்டிருந்தாள். மூத்த குழந்தையை பள்ளிக்கு அனுப்பவும் தயாராகி விட்டிருந்தாள். நாங்கள் காலை ஒன்பது மணியளவில் ரமேஷ் வீட்டை விட்டு புறப்பட்டோம். எனது ஞாயிறு பொழுது இனிமையாக முடிந்த மகிழ்ச்சி எனக்கு.

அடுத்த ஒரு வாரத்துக்கு என் மனது முழுவதும் திவ்யாவே வியாபித்திருந்தாள். உண்மையில் ரமேஷின் அவசர ஆத்திரத்துக்கும் திடீரென தோன்றும் ஊமைக்கோபத்துக்கும் திவ்யா பொருத்தமற்றவள். ரமேசுக்கு இவள் ஒரு அதீதமான பரிசு என்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கு ஜாதகத்தை நம்புவதைத் தவிர வேறு ஒரு தர்க்கமும் விளங்கவில்லை. எனக்கு ரமேஷின் மீது ஒரு பொறாமை முளைவிடத் தொடங்கியிருந்தது.

இன்று எனக்கு முழு ஓய்வு நாள். பொதுவாக ஓய்வு நாள் என்றால் பழைய புத்தகங்களை, பிரசுரங்களைக் கிளறி வேலைகளை பெருப்பித்துவிட்டு பின்னர் வெறுப்பேறித் திரிவது எனது பழக்கம். பழைய புகைப்படங்களின் இடையே தற்செயலாக மாட்டியது அந்தப் புகைப்படம். இதுவரை என் கண்ணில் படாத புகைப்படமென்பதால் சற்று ஆர்வத்துடன் கவனித்தேன். 2007இல் வன்னியில் ஒரு நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம். 2008இல் போரில் காணாமல்போன எனது அண்ணனின் புகைப்படம். மிகக் கம்பீரமான தோற்றம். நன்கு மழிக்கப்பட்ட புன்னகை உதிர்த்த முகம். அருகில் அதிசயமாக அண்ணன் வன்னியில் இருக்கும்போது திருமணம் செய்து கொண்ட பெண்.  மிகக் கம்பீரமாக சீருடையில் நின்றிருந்த அண்ணியின் படத்தின் கீழே கப்டன் வானதி என்ற பெயர் துலங்கியது. இப்போதுதான் எனக்கு அண்ணியை காணக் கிடைக்கிறது. முகத்தில் இப்போதிருக்கும் அதே இளநகையுடன் திவ்யா நின்றிருந்தார். எனக்கு கோழிப்புக்கை மறந்து விட்டிருந்தது. புகைப்படத்தில் அண்ணியின் கண்ணில் காணப்படும் அதே தீப்பொறி எனக்கு அனலாகத் தகித்தது.

– அலைமகன்

 

நன்றி : கீற்று இணையம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More