இரண்டு வாரம் முதல் இரண்டு வயது வரை குழந்தைகளின் வளர்ச்சிக் காலம். இச்சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை எளிதாக குழந்தைகளுக்கு ஒட்டிக் கொள்ளும். அடிக்கடியும் இவை குழந்தைகளைத் தாக்கலாம். சீதோஷ்ண நிலை, பயணம், தூசி, அசுத்தங்கள், அழுக்குத் துணிமணிகள், சுத்தமற்ற தண்ணீர், குடிக்கும் பால், ஜன்னல் கதவுகளின் மூலம் வீட்டின் உள்ளே நுழையும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் போன்றவைகளே இந்த வயதில் குழந்தைகளுக்கு நோய்களை உண்டாக்கும் காரணிகள்.
முடிந்தவரை இவைகளில் கவனம் செலுத்தி நோய் தாக்காதவாறு குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். அதே வேளையில் என்னதான் பாதுக்காப்பாக இருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை குழந்தைகளுக்கு சளி பிடிப்பது சாதாரணமானதே. அவ்வப்போது காய்ச்சல் வருவதும் அதுபோன்றது தான். அதுபற்றி கவலைப்பட தேவையில்லை.
ஆனால் மருத்துவரிடம் சென்று குழந்தைகளை காண்பித்து வருவது நல்லது. அதே வேளையில் எப்போதும் ஐந்தாறு மருந்துகளை குழந்தைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது நல்லதல்ல. ஏனென்றால் பின் விளைவுகள் இல்லாத மருந்து என்று எதுவுமே இல்லை என்பதை எல்லா மருந்தியல் நூல்களும், ஆராய்ச்சிகளும் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சத்து மருந்துகள் கூட சில பின் விளைவுகளை ஏற்படுத்தலாம். அதனால் சத்து மருந்துகளை விடுத்து சத்துணவை அளிப்பதே நல்லது.