கிராமங்களிலும் நகரங்களிலும் பரவலாகக் காணப்படும் ஒரு மரம், பாதாம் மரம். சிறுவர்களால் வாதாம் மரம் என்றழைக்கப்படும் இந்த மரத்தைச் சுற்றி, அணில்களும், பறவைகளும் கூடவே, சிறுவர்களும் காய்கள் காய்க்கும் காலங்களில், சுவை மிகுந்த வாதாம் பருப்பை சுவைக்க, போட்டி போட்டு சுற்றி வருவர்.
பறவைகள் கொத்தியதால் கீழே விழும் காய்களைப் பொறுக்கி டிரவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, சற்றே பெரிய கருங்கல்லை எடுத்துக்கொண்டு, சிறுவர்கள் யாரும் காணாத இடம் நோக்கி ஓடுவர், அப்போதுதானே, காய்களை உடைத்து எடுக்கும் கொட்டைகளை, பங்கு பிரிக்க வேண்டிய அவசியம் இல்லாமல், அவரவர் பங்கை அவரவரே சாப்பிட முடியும்!.
நல்ல பசுமையான சிறிய மாவடு போன்ற காய்களின் உள்ளே இருக்கும் அதன் விதை, மிகவும் சுவை மிக்கது மட்டுமல்ல, பாதாமில் இருக்கும் அரிய தாதுக்கள், உப்புகள், புரதச் சத்துக்கள், அரிய வகை விட்டமின்கள் யாவும், பல்வேறு நன்மைகளை நமக்கு அளிக்கக் கூடியவை.
பாதாம் எளிதில் செரிமானமாகக் கூடியது, உடலில் வியாதி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது, இரத்த அழுத்தத்தையும், இரத்தத்தில் சர்க்கரை அளவையும் சீராக்கக் கூடியது, சிறுவர்களின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கும், பாதாம் பால் மலச்சிக்கலை போக்க வல்லது, பாதாம் எண்ணெய் சருமத்துக்கு புத்துயிர் அளிக்க வல்லது, இத்தகைய சிறப்புகள் வாய்ந்த, பாதாமை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியம் மேலோங்கும்.
இப்படி சிறப்புகள் நிறைய இருந்தாலும், பாதாமை நாம் பச்சையாக உண்பதையும், தோலோடு உண்பதையும் தவிர்க்க வேண்டும். பாதாம் பணக்காரர்களுக்கு மட்டுமல்ல, ஏழைகளுக்கும்தான், அதுவும் பைசா செலவில்லாமல் என்றுதானே, இன்றும் கிராமங்களில் ஒருசில இடங்களில் பாதாம் மரங்கள் இருக்கின்றன!.
பாதாமை உணவாக எடுத்துக்கொள்வது எப்படி ?
பாதாமை சிறிதளவு சாப்பிட்டாலே அதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுகிறோம், இதில், ஒருவேளை முழு உணவாக பாதாமா? ஆளை விடுங்கள் என்று அச்சப்பட வேண்டாம்.
முதலில், பாதாமை உணவாக சாப்பிடுவதால், உடல் எடை ஏறாது, ஏனெனில் பாதாம் இரைப்பையில் சீரணமாகி, பெருங்குடலுக்கு சென்று அங்கு உடலுக்கு நன்மைகள் செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது, இதன் மூலம் அதன் ஆற்றல் உடல் முழுவதும் பரவுவதாலும், இதில் உடலுக்கு நன்மைகள் செய்யும் கொழுப்புகளே உள்ளதாலும், உடல் எடை கூடுமோ என்ற அச்சம் தேவையில்லை.
சாப்பிடும் முறை :
இரவு முழுவதும் நீரில் நன்கு ஊற வைத்த பாதாம் பருப்புகளை மறுநாள் காலை, தண்ணீரை மாற்றி அலசி விட்டு, மீண்டும் நீரில் உப்பிட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில், நீரில் ஊறிய பாதாம் பருப்புகள் எல்லாம், நன்கு நீரூறி இருக்கும்.
இந்த பருப்புகளை நிழலில் இட்டு உலர்த்த, நீர் வற்றி, நன்கு உலர்ந்து விடும். உலர்ந்த பாதாம் பருப்புகளை வாணலியில் இட்டு இதமான சூட்டில் வறுத்து வர, நல்ல நறுமணத்துடன் பாதாம் பருப்புகள் பொன்னிறத்தில் காணப்படும். சற்று சூடு ஆறியதும், இந்தப் பருப்புகளை சிறிதாக உடைத்து, அதில் சிறிது மிளகுத்தூள் கலந்து, தேவைகேற்ப நெய்யோ அல்லது சுக்குப்பொடியோ கலந்து உண்ண, மிக அற்புதமான சுவை மிக்க, உடலுக்கு பல விதங்களிலும் நலம் தரக் கூடிய, ஒரு மாற்று உணவாக இந்த பாதாம் பருப்பு உணவு அமையும்.
இதனால் என்ன பயன்?
ஐம்பது கிராம் ஊற வைத்து வறுத்த பாதாம் பருப்பை உண்ண, நமக்கு அதிகமான அளவில் புரோட்டீனும், உடலுக்கு நன்மை தரும் கொழுப்பும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது. இதன் மூலம் அதிக நேரம் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளவர்கள், உடல் களைப்பின்றி, புத்துணர்வுடன் நீண்ட நேரம் பணியாற்ற முடியும்.
சத்துக்கள் :
பாதாம் பருப்பில் உள்ள வைட்டமின் E, B9, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள், உடலுக்கு வியாதி எதிர்ப்பை தருவதிலும், உடலை வலுவாக்குவதிலும், பெரும் பங்கு வகிக்கின்றன.
பாதாம் பருப்புடன் தினமும், கீரைகள், இஞ்சி மற்றும் பாசிப் பருப்பு, வெந்தயம் போன்ற பருப்பு வகைகளை உணவில் சேர்த்து உண்டு வர, வியாதி எதிர்ப்பு சக்தி அதிகரித்து, இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை பாதிப்புகள் யாவும் விலகி, உடல் நலமாகும்.
ஞாபக சக்தி அதிகரிக்க
நாம் முன்னர் குறிப்பிட்டது போல, நீண்டநேர உடல் உழைப்பு செய்ய வேண்டிய நிலையில் உள்ள இயந்திர பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொறியாளர்கள் இவர்கள் எல்லாம், தினமும் இரவில் பத்து பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதன் தோலை நீக்கி அரைத்து, சாப்பிட்டு வர வேண்டும், தேவையெனில், பாலிலோ அல்லது வெந்நீரிலோ கலந்து பருகி வரலாம்.
உடல் தசைகள் வலுவாக.
இதன் மூலம், நீண்ட நேரம் பணியில் இருக்க வேண்டியவர்களுக்கு, களைப்பின்றி உடலுக்கு ஊக்கமளிக்கும் கொழுப்பும், பாஸ்பரஸ், குளுட்டாமிக் அமிலமும் உடலில் சேர்ந்து, நினைவு ஆற்றலை மேம்படுத்தும், உடல் தசைகளை வலுப்படுத்தும்.
மன அழுத்தம்
உடல் வேலையோடு கூடவே, மன அழுத்தம் உள்ளவர்களுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது, பாதாம் பருப்பு. இதில் உள்ள வேதித் தாதுக்கள், மனதை அமைதிப் படுத்தி, மனப் பதட்டத்தை குறைக்க வல்லவை.
செரிமானம் :
தினமும் ஊற வைத்த பாதாம் பருப்பை சாப்பிட்டு வர, உடலின் செரிமானம் இயல்பாகி, உடலின் ஆரோக்கியம், இதயத்தின் இயக்கம் சீராகும். சருமத்துக்கு புத்துயிர் தருவதால், உடல் பொலிவுடன் விளங்கும். மேலும் பசியை தணிக்கும்.
இதன் மூலம், பசி வரும் நேரங்களில், உணவு கிடைக்காமல், கொறிக்கும் நொறுக்கு தீனிகளால் உடல் நலம் கெடாது காக்க, வாய்ப்பாகும்.
பாதாம் வெண்ணை:
பாதாம் பருப்பில் இருந்து எடுக்கப்படும் வெண்ணையில் இருந்தும் மேற்சொன்ன பலன்களைப் பெறலாம், இந்த வெண்ணையை சப்பாத்தி, இட்லி தோசை போன்ற சிற்றுண்டி வகைகளுடன் தொட்டு சாப்பிட்டு வர, உடல் நலத்துடன், முகமும் பொலிவாகும்.
இதைப் போல, சாப்பிட வாய்ப்புகள் இல்லை எனில், பாதாம் பால் தினசரி சாப்பிட்டு வரலாம். ஆயினும் சாதாரணமாக பாதாம் பருப்புகளை அரைத்து எடுக்கும் பாலை விட, ஊற வைத்த பாதாம் பருப்புகளில் இருந்து அரைத்து எடுக்கப்படும் பால், மிகுந்த சத்தும், ஆற்றலும் மிக்க ஒன்றாகும்..