புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானம் ஆகும்.
புதினா இலையில் விட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும். புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.
வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக் கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்து சாப்பிட வேண்டும்.
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும்.
மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும்.
மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.
மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு, ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும். இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. மேலும் டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.