கருவுற்றிருக்கும் ஆரம்ப காலங்களில் கர்ப்பிணிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனை குமட்டல் மற்றும் வாந்தி. எதை சாப்பிட்டாலும் வயிற்றில் தங்காமல் குமட்டி கொண்டே இருக்கும். இதற்காக சாப்பிடாமல் இருந்தால் நமக்கும் குழந்தைக்கும் தேவையான சக்தியும், சத்துக்களும் கிடைக்காது. இதை தவிர்க்க மூன்று வேளை உணவு உண்பதற்கு பதிலாக அதே உணவை ஆறுவேளையாக பிரித்து சாப்பிடலாம்.
இதனால் வயிறு காலியாக இருப்பதை தவிர்க்கலாம். கர்ப்ப காலங்களில் சில பெண்களுக்கு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவு ஏற்றதாக இருக்கும். சிலருக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகள் ஏற்றதாக இருக்கும். எனவே நமக்கு ஏற்ற உணவு எது என்பதை கண்டறிந்து சாப்பிடுவது சிறந்தது. நாம் எதை சாப்பிட்டாலும், அது நமக்கும். நமது குழந்தைக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்.
வாந்தி மற்றும் குமட்டல் காலை நேரங்களில் தீவிரமாக இருக்கும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும் இவ்வாறு ஏற்படலாம். எனவே படுக்கைக்கு அருகிலேயே சில உணவுகளை வைத்திருப்பது நல்லது. எழுந்த உடனேயே கொஞ்சமாக சாப்பிட்டு 20 நிமிடங்கள் வரை ஓய்வெடுத்தால் குமட்டல் வருவதை தடுக்கலாம்.
கர்ப்பகாலத்தில் ஆறிய உணவுகளை சாப்பிடாமல் புதிதாத தயாரித்த சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகளை சாப்பிட்டாமல் அறை வெப்பநிலையில் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் குளிர்பதன பெட்டியில் வைத்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும். கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது குமட்டல் மற்றும் நெஞ்செரிச்சல் அதிகமாக ஏற்படும். ஆகையால் அதிக காரம் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுதல் நல்லது. ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஒரு சில பெண்களுக்கு சில வாசனை திரவியங்கள், அறைகளில் ஒளிரும் விளக்குகள் போன்ற காரணிகளாலும், குமட்டல், வாந்தி போன்ற உணர்வுகள் தூண்டப்படலாம். அவ்வாறு இருந்தால் அத்தகைய காரணிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது. காலை வேளையில் இஞ்சி கலந்த தேநீர் குடிப்பது, இஞ்சி மிட்டாய்கள் சாப்பிடுவது போன்றவை குமட்டலை கட்டுப்படுத்தும்.
வீட்டில் செய்யப்படும் வைத்தியங்கள் மூலம், நிவாரணம் பெற முடியாத பெண்கள் மருத்துவர் ஆலோசனையை நாடுவது சிறந்தது.
நன்றி-மாலை மலர்