விவாகரத்து, பிடித்தமானவர்களின் திடீர் மரணம், வேலை இழப்பு போன்றவற்றால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தங்கள் நினைவாற்றல் இழப்புக்கு வழிவகுக்கும். இதில் நடுத்தர வயது பெண்கள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாலின விகிதத்துடன் ஒப்பிடுகையில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அல்சைமர் சங்கமும் ‘‘60 வயதுக்குட்பட்ட பெண்களில் 6 பேரில் ஒருவர் அல்சைமர் நோய் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆண்களை எடுத்துக்கொண்டால் 11 பேரில் ஒருவருக்குத்தான் அல்சைமர் பாதிப்பு ஏற்படுகிறது’’ என்கிறது.
அமெரிக்காவின் ஹான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் சிந்தியா முன்ரோ, ‘‘மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது சிரமமானது. ஆனால் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டறிந்தால் அது எளிதானது. மேலும் வயதாகும்போது மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படுகிறது. எங்கள் ஆய்வு முடிவு ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன அழுத்தம் ஒரே மாதிரி இருப்பதில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது. சாதாரணமாக மன அழுத்தம் ஏற்படும்போது மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் அளவு அதிகரிக்கும்.
மீண்டும் மீண்டும் மன அழுத்தம் ஏற்பட்டால் கார்டிசால் அளவு மிக அதிகமாகிவிடும். பின்பு இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். மன அழுத்த ஹார்மோன் அளவு உயர்வது நினைவுத்திறனை பாதிக்க செய்துவிடும்” என்கிறார்.
பேராசிரியர் முன்ரோ குழுவினர் 900 பேரை ஆய்வுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 63 சதவீதம்பேர் பெண்கள். அவர்கள் சராசரியாக 47 வயதை கடந்தவர்கள். மன அழுத்தம் நீடிக்கும்போது மூளையின் செயல்பாட்டில் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
நன்றி-மாலை மலர்