செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் சூட்டை குறைக்கும் வைத்தியம்!

சூட்டை குறைக்கும் வைத்தியம்!

2 minutes read

மனித உடலின் இயல்பான வெப்பநிலை 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்க வேண்டும். அதைவிட அதிக வெப்பநிலை தொடர்ந்து நீடித்தாலோ, இயல்பான உடல் வெப்ப நிலையை தக்கவைக்க முடியாமல் போனாலோ அது உடல் வெப்பம் அல்லது வெப்ப அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. உடல் சூடு, எரிச்சல், வயிற்றில் அசவுகரியம், தூக்கமின்மை, அல்சர், அசிடிட்டி, வாயு தொல்லை, இதய துடிப்பு அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் மூலமும் உடலின் வெப்பநிலை அதிகரித்திருப்பதை உணரலாம். சாதாரண உடல் வெப்பநிலை பாரன்ஹீட் அளவின்படி 98.6 டிகிரியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதைவிட சற்று குறைவாகவோ, சற்று அதிகமாகவோ இருக்கலாம். அது பாதிப்பில்லை.

அதிக வெப்பநிலை நிலவும் இடங்களில் வாழ்வது, வெப்ப அலைகள் வெளிப்படுவது, வெப்பமான ஆடைகள் அணிவது, உணவு பழக்கவழக்கம் போன்றவையும் உடல் வெப்பத்திற்கு காரணமாக இருக்கின்றன. அதனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது முக்கியமானது. உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை குறைப்பதற்கு இயற்கையாகவே சில வழிமுறைகள் இருக்கின்றன.

இளநீர்: இதில் 94 சதவீதம் நீர் உள்ளது. அது உடலில் நீர்ச்சத்தை தக்க வைத்து வெப்ப அழுத்ததத்தை குறைக்க உதவும். இளநீரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி போன்ற எலக்ட்ரோலைட்கள் நிறைய உள்ளன. எனவே, இது அடிப்படையில் பல ஊட்டச்சத்துக்களை கொண்ட பானமாக விளங்குகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல.

புதினா: இது அதிக அளவு மென்தால் சக்தியை கொண்டது. குளிர்ச்சித்தன்மையும் நிறைந்தது. தினமும் புதினா இலைகளை கொண்டு டீ தயாரித்து பருகலாம். பற்பசை, தைலம், பானங்கள் போன்றவை தயாரிப்பிலும் புதினா பயன்படுத்தப்படுகிறது. உடல் வெப்பத்தை குறைக்கும் எளிய மூலிகையாகவும் இது திகழ்கிறது.

கற்றாழை: கற்றாழை ஜெல் உடல் வெப்பநிலையை குறைக்க உதவும். உடல் வெப்பநிலை அதிகம் கொண்டவர்கள் தினமும் கற்றாழை ஜெல்லை உடலில் தடவி வரலாம். இதில் பானம் தயாரித்தும் அளவோடு பருகலாம்.

தண்ணீர்: நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்வது உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் எளிமையான வழிமுறையாகும். அதிக உடல் வெப்பநிலை கொண்டவர்கள் வெந்நீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். தண்ணீர் பருகுவதன் மூலம் உடலை குளிரவைக்கலாம். குளிர்ந்த நீர் நிரப்பப்பட்ட வாளியில் சில நிமிடங்கள் பாதங்களை முக்கிவைத்தால் உடல் வெப்பம் உயருவதை தடுக்கலாம்.

நீர்ச்சத்து உணவுகள்: நீர்ச்சத்து கொண்ட உணவுகளும் உடல்வெப்பத்தை குறைக்கும். வெள்ளரிக்காய், தர்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, பாகற்காய் போன்றவை அத்தகைய உணவுகளாகும்.

சந்தனம்: சந்தனமும், முல்தானி மெட்டியும் உடல் வெப்பத்தை குறைக்க உதவும். இவை சோப்பு, பவுடர் போன்றவைகளில் சேர்க்கப்படுகின்றன. அவைகளை உடலில் தடவி வருவதன் மூலம் குளிர்ச்சியை உணரலாம். ஆயுர்வேதத்தின்படி, சந்தன மரம் உடலை குளிர்விக்கக்கூடியது.

மோர்: மோர் உடல் வெப்ப நிலையை சீராக்கி வளர்சிதை மாற்றத்தை மேம் படுத்தும். உடல் எடை குறைப்பிற்கும் உதவும். தினமும் மோர் பருகலாம். கோடை காலத்தில் மோரில் மிளகுத்தூள் கலந்து பயன்படுத்தலாம்.

பால்-தேன்: ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தொடர்ந்து ஒரு வாரம் தினம் ஒரு முறை பருகி வந்தால் உடல் உஷ்ணம் சீராகும். சுவாசம் சார்ந்த பிரச்சினைகளும் கட்டுப்படும். தொண்டைப் புண்ணையும் குணப்படுத்தலாம்.

ஜூஸ்: மாதுளை ஜூஸ் சருமம், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டது. இதில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்திருப்பதால் உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும். மனதும் புத்துணர்ச்சி அடையும். நாள் முழுவதும் உற்சாகத்தை உணரலாம். மாதுளை ஜூஸ், சிறுநீரகத்தில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவும். அதன் மூலம் சிறுநீரில் உள்ள அமில அளவும் குறையும்.

நன்றி-மாலை மலர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More