செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் காதில் ஏற்படும் இரைச்சல் (Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

காதில் ஏற்படும் இரைச்சல் (Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

3 minutes read

இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய கைகளில் ஆறாவது விரலாக கைப்பேசியை எப்போதும் உடன் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல் இவர்கள் காதுகளில் எயார் பொட்ஸ் என்ற பிரத்யேக காதொலி கருவிகளை பொருத்திக்கொண்டு பேசுவதும், பாடல்களைக் கேட்பதும் என வழக்கமாகிவிட்டது.

 இந்நிலையில் இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு காதில் இரைச்சல் எனப்படும் பாதிப்பு ( Tinnitus) ஏற்படுவதாக வைத்தியர்களிடம் தெரிவிக்கிறார்கள்.

 இத்தகைய பாதிப்பிற்குரிய சிகிச்சைகள் குறித்து வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.

பெரும்பான்மையானவர்கள் இரவு நேரங்களில் காதுகளில் ரீங்காரம் இடுவது போல் பிரத்யேக ஒலி கேட்பதாகவும், இதன் காரணமாக உறக்க நிலை பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

வேறு சிலர் ஒலி மிகுந்த இடங்களில் பணியாற்றும் நேரங்களை விட, அமைதியான தருணங்களில் இத்தகைய இரைச்சல் மனதளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்கள்.

 இத்தகைய பாதிப்பிற்கு வைத்தியத் துறையினர் டின்னிட்டஸ் ( Tinnitus) பாதிப்பு என வகைப்படுத்துகிறார்கள்.

தெற்காசிய நாடுகளில் 15 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள். 

இவர்களில் 20 சதவீதத்தினர் காதுகேளாமை பாதிப்பின் காரணமாக இதற்கு ஆளாக கூடும். 

காதின் அமைப்புகளில் உள்ள முன் காது, நடுக்காது, உள்காது ஆகிய பகுதிகளில் ஏதேனும் ஒரு பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் இத்தகைய கோளாறு உண்டாகலாம்.

காதில் உள்ள ஒலியை கடத்தும் நரம்புகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலும் இத்தகைய குறைபாடு ஏற்படக்கூடும்.

 எம்முடைய வாய் பகுதியை திறந்து மூடுவதற்காக பயன்படுத்தப்படும் Temporomandibular Joint எனப்படும் பகுதியில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும் இத்தகைய நிலை உண்டாகலாம்.

பி12 மற்றும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் இத்தகைய கோளாறு ஏற்படக்கூடும். 

உடலில் வேறு கோளாறுகளுக்காக நாட்பட்ட நிலையில் மாத்திரைகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு, அதன் பக்கவிளைவு காரணமாகவும் இந்த காது இரைச்சல் பாதிப்பு உண்டாகும்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த பாதிப்பின் காரணமாகவும் இவை உண்டாகலாம்.

இதற்கு உரிய தருணங்களில் சிகிச்சை பெறாவிட்டால் நாளடைவில் காது கேளாமை பாதிப்பு ஏற்படக்கூடும்.

வேறு சிலருக்கு உறக்கமின்மை பாதிப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக நினைவு திறன் இழப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

 இதன் காரணமாக இதற்கான அறிகுறிகள் தெரிந்தவுடன் வைத்தியரைஅணுகி ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

அறிகுறிகள் ஏற்பட்ட பிறகு அவர்களுக்கு கேட்கும் திறன் குறித்த பரிசோதனை, எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டும்.

இவர்களுக்கு ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு இருக்கிறதா? என்பதை பரிசோதித்து, அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்.

சிலருக்கு பிரத்யேக கருவியை பொருத்தி பாதிப்பின் தன்மையை குறைப்பர்.

சிலருக்கு Tinnitus Retraining Therapy , Cognitive Behavioral Therapy போன்ற சிகிச்சைகளை வழங்கி அவர்களை பாதிப்பிலிருந்து முழுமையாக மீட்க இயலும்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு மட்டுமே தீவிர பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் உண்டாகிறது.

மேலும் இத்தகைய பாதிப்பு மூன்று நிலைகளில் உண்டாகும் இவற்றில் எந்த நிலையில் நோயாளி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை துல்லியமாக அவதானித்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணம் பெற இயலும்.

டொக்டர் கிருஷ்ணகுமார்

தொகுப்பு அனுஷா.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More