நீண்ட காலம் தாய்ப்பாலூட்டுவதற்கும் வளர்ந்த பின் புத்திசாலியாக இருப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சமீபத்தில் தி லான்சட் குளோபல் ஹெல்த் ஜர்னலில் வெளியான ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
தாய்ப் பால் புகட்டலின் நீண்ட கால பலனை ஆராய்வதற்காக பிரேசிலில் ஆய்வாளர்கள் 6,000 குழந்தைகளை அவர்கள் பிறந்தது முதல் 30 ஆண்டுகளுக்கு கவனித்து வந்தனர்.
அவர்களில் 30 வயதான 3,500 பேர் சமீபத்தில் நேர்முகத்தேர்வு, ஐக்யூ தேர்வில் பங்கேற்றனர். இதன் முடிவுகள் தாய்ப்பால் குடித்து வளர்ந்தவர்கள், அது இல்லாமல் வளர்ந்தவர்களைவிட புத்திசாலித்தனம் மிக்கவர்களாகவும் அதிகம் சம்பாதிப்பவர்களாகவும் இருப்பது தெரிய வந்தது.
“நீண்ட காலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரத்தை வழங்கும் முதல் ஆய்வு இது’’ என்று கூறியிருக்கிறார் பிரேசிலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர் ஃபெர்மார்டோ லெசா ஹோர்டா.