உடல் சூடுதான் மூலநோய்க்கு முதன்மைக் காரணம். `அனில பித்த தொந்தமலாது மூலம் வராது’ என்று சித்த மருத்துவத்தில் சொல்வதுண்டு.
வாதத்தோடு பித்தம் சேர்வதால்தான் இதுபோன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
கோடைக்காலத்தில் புளிப்பு, காரம், உப்பு… என வறட்சித்தன்மை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால் மூலநோய் உண்டாகும். அதனால் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அதேபோல ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். உட்காரும்போது குஷன் சேர்களைத் தவிர்த்துவிட்டு, வயர்களால் பின்னப்பட்ட, பிரம்பால் ஆன சேர்களைப் பயன்படுத்த வேண்டும்.
முடியாத பட்சத்தில், சேர்களுக்கு மேலே இலவம்பஞ்சு அல்லது தேங்காய்ப்பூ துண்டுகளை விரித்து உட்காரலாம்.
வாரத்துக்கு இரண்டு நாள்களுக்காவது எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். வெயிலில் அதிக நேரம் அலைவது, அதிக தூரம் வாகனங்கள் ஓட்டுவது போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.
பசலைக்கீரை, வெந்தயக்கீரை, சுக்காங்கீரை ஆகியவற்றைச் சாப்பிட்டால் மூலநோய் ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். அசைவ உணவுகளில் சிக்கனைத் தவிர்த்துவிடுவது நல்லது. அது உடல் சூட்டை ஏற்படுத்திவிடும்.
மீன் சாப்பிடலாம், அதிலும் விலாங்கு மீன் மூலத்தைக் குணப்படுத்தும். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை முழுமையாகத் தவிர்த்துவிடுவது நல்லது.
கற்றாழை, மாதுளை, அத்திப்பழம் போன்றவற்றின் பழச்சாறுகளைக் (ஐஸ் இல்லாமல்) குடிக்கலாம். மாம்பழத்தை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.
இளநீர், பதநீர் , மோர் போன்றவற்றை அருந்துவது நல்லது. பீன்ஸ், அவரைக்காய், வெண்டைக்காய் போன்ற நார்ச்சத்துகள் நிறைந்த காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும்.
சிறிய வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மலம் கழிக்கும்போது உண்டாகும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த வாழைப்பூவை இடித்து, சாரெடுத்துக் குடிக்கலாம்.
மாங்கொட்டையிலுள்ள பருப்பைத் தூளாக்கி, மோரில் கலந்து குடிக்கலாம்.
கிழங்கு வகைகளில் கருணைக்கிழங்கைத் தவிர மற்ற கிழங்குகளைச் சாப்பிடக் கூடாது.