தொண்டையில் சளி சிக்கியிருந்தால், அது தொண்டை வலியை உண்டாக்கும். இந்த தொண்டை வலியில் இருந்து நிவாரணம் பெற 250-300 மில்லி லிட்டர் நீரை எடுத்து 5 நிமிடம் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரால் வாயை ஒரு நாளைக்கு 3-4 முறை கொப்பளிக்க வேண்டும்.
ஒரு டீஸ்பூன் அதிமதுரப் பொடியை எடுத்து, அதில் தேன் சேர்த்து கலந்து சாப்பிடவும் அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை வெதுவெதுப்பான நீரில் கலந்து வாயைக் கொப்பளிக்க வேண்டும்.
15-20 மிலி நெல்லிக்காய் ஜூஸில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஒருநாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டை வலி மற்றும் தொண்டை எரிச்சலைக் குறைக்கும்.
1 டீஸ்பூன் வெந்தயத்தை 250 மில்லி லிட்டர் நீரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தொண்டைப் புண், இருமல், சளி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
250 மில்லி லிட்டர் நீரை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் பட்டைத் தூள் சேர்த்து கலந்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நெஞ்சு பகுதியில் மட்டுமின்றி தொண்டையிலும் உள்ள சளி முறிந்து வெளியேறும்.