தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
இதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடுகளும் அதிகரித்துவிட்டது. வேலை முடிந்து அலுத்து, களைத்துபோய் வீட்டிற்குள் வரும் பலரும், மீண்டும் தங்களைச் சாய்த்துக்கொள்வது நாற்காலியில்தான்.
ஆனால், அவர்களின் களைப்புக்குக் காரணமே ஒரே இடத்தில், நீண்ட நேரமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்ததனால்தான் என்பது தெரிவதில்லை.
ஆம், உடலுழைக்கச் செய்யும் வேலைகளைவிட, ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளால்தான் நமது உடல் அதிகமாகச் சோர்வடைகிறது.
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி பெரும்பாலான நேரங்களில் நாம் உட்கார்ந்தபடியே வேலை செய்வது தற்போது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
மேலும், வெளியில் பயணம் செய்யும்போதும் கூட நடந்து செல்லாமல் பைக், கார் என்றே பழகிவிட்டோம். ஆனால், உண்மையில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதனால், உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அவை என்னவென்பதை பார்ப்போம்:
ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை.
இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைய செய்கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்யும் முறையானது, உடலில் ஹோர்மோன் சமநிலையை கெடுக்கிறது.
இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. மேலும் இதேமுறை நீண்ட நாள்கள் தொடரும் பட்சத்தில் கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு.
உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் உடல் நல உபாதையில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று. அதுமட்டுமின்றி நீண்டநேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது. நாற்காலியில் 6-7 மணி நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது இடுப்பு எலும்பை வலுவிழக்க செய்கிறது.கால்களை தொங்கவிட்டபடி மணிக்கணக்கில் வேலை செய்வது உங்கள் கால் பகுதிகளுக்கு ரத்த ஓட்டம் சீராக செல்லாமல் தடைசெய்கிறது. இதனால், கால்களில் பிடிப்பு, வலி, அசெளகரியமாக உணர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
ஒரே இடத்தில் நாற்காலியைவிட்டு நகராமல் வேலை செய்பவர்களுக்கு திடீரென கழுத்தை திருப்ப கூட முடியாத அளவு கடினமான வலி ஏற்படும். இதனால் spondylosis எனப்படும் பாதிப்பு ஏற்படலாம். மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு தண்டுவட வலி. இது தண்டுவட எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. கணினியில் வேலை செய்யும் நபர்களுக்கு, கையை அசைக்காமல் ஓரே நிலையில் தட்டச்சுப் பலகையுடன் உறவாடும்போது இதுப்போன்ற தோள்பட்டை வலி அதிகமாக ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.
நாற்காலியில் நீண்டநேரம் அமர்வதைக் குறைக்க சில வழிமுறைகள்
அலுவலகத்தில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், வெளியிடங்களில் நாற்காலியிலமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம்.
ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இடையே, இருக்கையைவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடக்கலாம். சூரிய ஒளியில் செல்லும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி உடலின் மீது படும்படி நடக்கலாம். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்கள் பகலில் உடல் சோர்வால் உண்டாகும் தூக்கத்தை விரட்டும். உடல் செல்கள் புத்துணர்வு பெற உதவும்.
நாம் அமர்ந்திருக்கும் நாற்காலியை சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அது, முதுகுத்தண்டுக்குச் சரியாகப் பொருந்தும் அளவுக்குச் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். சாப்பிட்ட பிறகு, உடனே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. சில நிமிடங்கள் நிற்கலாம் அல்லது நடக்கலாம். நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் இதயத்துடிப்பு சீராகவும், அதிகமாகவும் இருக்கும். இதயம், சீரான ரத்த ஓட்டத்துக்கு ஓர் உந்துதலைக் கொடுக்கும். அது வளர் சிதை மாற்றத்துக்கு உதவும்.
செல்போனில் பேசவேண்டி வந்தால், நடந்துகொண்டே பேசலாம். எழுந்து நடப்பதால், தசைகள் இயக்கம் பெற்றுக் காலில் ரத்தம் தேங்காமல், ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். நீண்ட நேரம் நாற்காலியில் அசையாமல் அமர்ந்திருக்கக் கூடாது. அதேபோல், நீண்ட நேரம் அசையாமல் நிற்கவும் கூடாது. இரண்டுமே ஆபத்தானவை.
அலுவலகங்களில் லிஃப்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். வீட்டுக்குள் முடிந்தவரை தரையில் அமர்ந்து வேலைகளைச் செய்யப் பழகலாம்.
அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருள்களை வாங்கலாம் அல்லது மிதிவண்டியில் செல்லலாம்.