குமரபுரத்தில் அமைந்து சூரியன் போல கால் ஏக்கர், பெரிய பரந்தன், குஞ்சுப்பரந்தன், உமையாள் புரம், ஐந்தாம் வாய்க்கால், காஞ்சிபுரம், பரந்தன் சந்தி, முல்லைவீதி ஓராம் கட்டை, கமறி குடா, ஆனையிறவு, என நாற்புறமும் கல்வி ஒளி பரப்பிய கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயத்துக்கு வைர விழா (1954—2014) கண்ட கல்விக்கூடம் என மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
பரந்தன் இந்து ம.வி இன் வைரவிழா மலர் கண்டேன். மிகவும் அழகாக இருந்தது. முன்னாள் அதிபர்களும், ஆசிரியர்களும் தமது மலரும் நினைவுகளை எழுதியிருந்தார்கள். என்னையும் சொல்ல மறந்த சில நினைவுகளைப் பற்றி எழுத தூண்டியது.
மாணவர்களை அடித்து தண்டிப்பதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடு இல்லை. என்னால் அவர்கள் துன்பம் அடைவதைக் கண்டு சகிக்கவும் முடிவதில்லை. நானொரு கணித ஆசிரியன். என்னிடம் படித்து இப்போ டாக்டராக இருக்கும் ஒரு பழய மாணவன் கூறியதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். “நாங்கள் சுகமான தமிழ் பாடத்தை அடி வாங்கிப் படித்தனாங்கள். கடினமான கணித்ததை அடி வாங்காமல் விரும்பி, மகிழ்வுடன் படித்தனாங்கள்” என்றான் அவன்.
பதின்ம வயது மாணவர்களிடம் பெரியோர்கள், ஆசிரியர்கள் அடிக்கடி “இப்படிச்செய், அப்படி நட” என்று கூறுவதனால் ஒருவித சலிப்பும் எதிர்ப்புணர்வும் ஏற்பட்டு விடுகின்றது. சில வேளைகளில் சொல்வதைச் செய்ய மாட்டார்கள். ஒரு மாணவன் தலைமயிரை நன்கு வளர்த்து சடையப்ப வள்ளலாக காட்சியளித்தான். நான் பல முறை அதை வெட்டுமாறு கூறியும் அவன் அதை வெட்டவில்லை. ஒரு நாள் ஆலமர நிழலில் கதிரையில் இருத்தி கத்தரிக்கோலால் எனக்குத் தெரிந்தமட்டில்
வெட்டி விட்டேன். இரவு முழுக்க எனக்கு ஒரே யோசனை. மறுநாள் மாணவன் வருவானா? தாய், தகப்பனை அழைத்து வருவானா? என்று ஒருவித பதற்றத்துடன் பாடசாலைக்குச் சென்றேன். சிறிது நேரத்தில் நன்கு குளித்து முழுகி திருநீற்றுப் பூச்சுடன் அவன் இன்னொரு சடையப்பவள்ளலை கையில் பிடித்து இழுத்து வந்து “சேர், இவனுக்கும் தலை மயிர் வெட்டி விடச் சொல்லிக் கேட்கிறான்” என்றானே. எனக்குச் சிரிப்பதா? அல்லது அழுவதா? என்றே தெரியவில்லை.
ஒரு நாள் தமிழ் ஆசிரியை “சாதரண தர மாணவர்கள் நான் கொடுத்த செயற்றிட்டத்தை செய்யாது, அதனால் இன்று பாடசாலைக்கும் வராமல் நண்பர்கள் எல்லாம் ஒரு வீட்டில் கூடி நிற்கின்றார்கள்” என்று முறையிட்டார். நான் ஒரு உதவி ஆசிரியரையும் அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் அந்த வீட்டிற்கு சென்றேன். ஏழுபேரின் சைக்கிள்களும் அந்த வீட்டு முற்றத்தில் நின்றன. எங்களைக் கண்டு மாணவர்கள் யாவரும் அந்த வீட்டு சாமி அறைக்குள் புகுந்து கதவை சாத்தி விட்டனர். தாயும் தந்தையும் வெளியே பதற்றத்துடன் வந்து வரவேற்றனர். நாங்களும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டு” என்ன இன்று உங்கள் மகன் பாடசாலைக்கு வரவில்லை. வேறு சிலரும் வரவில்லை. அது தான் ஒவ்வொரு வீடாய்ப் பார்த்து விசாரிப்போம் என்று வந்தோம்” என்று சொன்னோம். “சேர், அவர்கள் எல்லோரும் செயற்றிட்டத்திற்கான பொருட்கள் வாங்க கிளிநொச்சிக்கு போய் விட்டார்கள். செயற்றிட்டத்தை செய்து கொண்டு நாளைக்கு வருவார்கள்” என்று தந்தையார் கூற, தாயார் தேனீர் தந்து உபசரித்தார். உபசரிப்பை ஏற்றுக் கொண்ட நாங்களும் “அப்படியென்றால் சரி” என்று கூறிவிட்டு மாணவர்கள் சாமி அறைக்குள் நிற்பது தெரியாதமாதிரி பாடசாலை திரும்பி விட்டோம்.ஆசிரியையிடம்
மறு நாள் வருவார்கள் என்றும் தண்டிக்காமல் வகுப்பில் விடுமாறும் கூறினேன். மறு நாள் ஆசிரியை புன் சிரிப்புடன் வந்து “எல்லோரும் செயற்றிட்டத்தை பூரணப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்கள்” என்று கூறினார். ஆசிரியர்கள் ஆடுறமாட்டை ஆடிக் கறக்கவும், பாடுற மாட்டை பாடிக்கறக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
பழையமாணவரான திரு சு. சிவகுமாரன் எனது காலத்தில் பாடசாலைக்குச் செய்த சேவைகள் இரண்டை இப்போது ஞாபகப்படுத்துவது பொருத்தம் என்று எண்ணுகின்றேன். 2003ஆம் ஆண்டு ஸ்கந்தபுரத்தில் இருந்து பாடசாலையை மீளவும் கொண்டு வந்த நேரம். பெற்றோரும் நிவாரணத்தை மட்டும் நம்பி வாழ்ந்த காலம். இன்னும் பயிர் செய்கைகளில் ஈடுபடாத சூழ்நிலை. மாணவர்கள் சிலர் காலை உணவு உட்கொள்ளாது வந்துவிடுவர். மதிய நேரத்தில் களைத்துப்போய் காணப்படுவர். அப்போது மீள குடியேறிய எங்கள் பாடசாலைக்கு Foruit நிறுவனமோ, UNICEF அமைப்போ மதிய உணவு வழங்காத நேரம். சிவகுமாரன் பரந்தனில் இயங்கிய கரைச்சி வடக்கு ப.நோ.கூ.சங்கத்தினரிடம் பணத்தைக் கட்டி ‘Land master’ வாகனத்தில் பாடசாலை நாட்களில் ‘பணிஸ்’ வழங்க ஏற்பாடு செய்தார். மிஞ்சிய ‘பணிஸ்களை’ எங்கள் ஆசிரியர்கள் காஞ்சிபுரத்தில் இருந்த பாலர் பாடசாலை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தனர். இன்னொரு நாள் பாடசாலையைப் பார்வையிட சிவகுமாரன் தனது London ஐச் சேர்ந்த நண்பர் ஒருவரை அழைத்து வந்தார். ஒரு ஓலைக் கொட்டகையுடன் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கும் பாடசாலையில் தளபாட வசதியின்மை காரணமாக மாணவர்கள் நிலத்தில் UNICEF அமைப்பினரால் வழங்கப் பட்ட பாய்களில் அமர்ந்தும், மரங்களின் கீழிருந்தும் படிப்பதைக் கண்டு வேதனையுற்றார். மாணவர்களை மகிழ்ச்சிப் படுத்த எண்ணி ஒரு அழகான சிறுவர் பூங்கா அமைப்பதற்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்கினார். ஆசிரியர் இளங்குமாரனின் ஒத்துழைப்புடன் பாடசாலையில் ஓர் அழகிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. நாங்கள் நன்றி உணர்வுடன் அப்பூங்காவிற்கு அந்த நண்பரின் மறைந்த தந்தையாரின் பெயரில் அதனை “பழனி சிறுவர் பூங்கா” என்று பெயரிட்டோம். பின்பு ஏற்பட்ட யுத்தத்தில் பாடசாலையுடன் அந்தப் பூங்காவும் அழிந்து விட்டது.
பின்பு ஏற்பட்ட மீள குடியேற்றத்தின் போது சிவகுமாரன் தன்னுடைய சொந்தப் பணத்தில் சிதைவடைந்த அந்த இடத்தில் ஒரு புதிய சிறுவர் பூங்காவை அமைத்தார். அந்த சிறுவர் பூங்கா திரு சிவகுமாரனின் மறைந்த தந்தையார் பெயரில் “சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா” என்று அழைக்கப்படுகின்றது. ஒரு
ஓலைக்கொட்டகையுடன் பாடசாலை இருந்த போது அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட அந்தப் பூங்கா, புதிய அதிபர், பழையமாணவர்களின் முயற்சியால் பல்வேறு கட்டடங்கள் வந்துவிட்ட இன்றைய நிலைமையில் வேறொரு பொருத்தமான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பூனகரியைப் பிறப்பிடமாக கொண்டவரும் கிளிநொச்சிக்கு அரச அதிபராகவும் இருந்த திரு. இராசநாயகம் அவர்களும் தன்னால் தனது அதிகாரத்திற்கு உட்பட்ட எல்லா உதவிகளையும் எமது பரந்தன் இந்து ம.வி இற்குச் செய்துள்ளார். எமது பாடசாலை மைதானத்தின் ஊடாக, யுத்தத்தின் போது பாரிய (Bund) மண் அணை ஒன்று இராணுவத்தினரால் அமைக்கப்பட்டிருந்தது. அத்துடன் எமது மாணவரால் பயன்படுத்தப்பட்ட (RDS) கிராம அபிவிருத்திச் சபையினரால் அமைக்கப்பட்ட பொதுக் கிணறும் அதே யுத்தத்தின் போது சிதைந்துவிட்டது. மண் அணையை அழித்து மட்டப்படுத்தவும், பொதுக் கிணற்றை மூடி ஒரு புதிய கிணற்றை பாடசாலை வளாகத்தினுள் அமைத்துத் தருமாறும் அவரிடம் எமது பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினருடன் சென்று கோரிக்கை விடுத்தோம். தனது அதிகாரத்தின் கீழிருந்த ஒரு ‘புல் டோஸர்’ இயந்திரத்தினை அனுப்பி மண் அணையைக் தகர்க்கவும், சிதைந்த பொதுக் கிணற்றை தூத்திடவும் உதவினார். பாடசாலை வளாகத்தினுள் ஒரு புதிய கிணற்றை அமைக்கவும் நிதியினை ஒதுக்கித் தந்தார். கிணறு கட்டுவதில் மிகவும் அனுபவம் பெற்ற திரு.அரியம் அவர்கள் பாடசாலை வளாகத்தினுள் புதிய கிணற்றை கட்டி உதவினார். இந்நேரத்தில் இளைப்பாறி ‘மகாதேவா ஆச்சிரமத்து சிறுவர்’ இல்லத்தை அமைத்து பராமரித்துக் கொண்டிருக்கும் திரு.இராசநாயகம் அவர்களை நன்றிப் பெருக்குடன் நினைவுகூருகின்றேன்.
மகாலிங்கம் பத்மநாபன் | ஓய்வு நிலை அதிபர்
கிளி / பரந்தன் இந்து மகாவித்தியாலயம்
பகுதி 1:
http://www.vanakkamlondon.com/paranthan-hindu-maha-vidyalayam-pathamanaban-article-040715/